தமிழினவழிப்பிற்கு நீதி கேட்டு தமிழர் இயக்கத்தால் ஐ.நா மனித உரிமைகள் சபைக்குள் தொடர் கருத்தரங்குகள்!

கீழ்வரும் தலைப்புக்களில் கருத்தரங்குகள் இடம்பெற்றன:
இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் பெண்கள் எதிர் நோக்கும் சவால்கள்
மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள்
தேசங்களின் சுயநிர்ணய உரிமை
புதிய ஒழுங்கின் கீழ் இனவழிப்புகள்
இவ்வாறான தலைப்புக்களில் 20 வரையிலான பக்கவறை நிகழ்வுகள் எதிர்வரும் 22.03.2019 வரை இடம்பெறவிருக்கின்றது.
குறிப்பாக தமிழர் இயக்கத்தின் ஏற்பாட்டில் "அச்சுறுத்தலின் கீழ் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்" ( Human Rights Defenders Under Threat ) எனும் தொனிப் பொருளில் பக்கவறை நிகழ்வு ஒன்று பெண் செயற்பாட்டாளர்களால் பன்னாட்டு பெண்கள் தினத்தன்று (08.03.19) பி.ப 15.30 - 16.30 வரை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தமிழர்களின் உரிமைகளிற்காக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுவரும் தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவர் திரு வி. நவனீதன், மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் வடகிழக்கு மாவட்டங்களின் செயலாளர் திருமதி லீலாதேவி ஆனந்தநடராசா, மற்றும் பிரான்சு நாட்டினைச் சேர்ந்த பிரபல வழக்குரைஞர் திரு. பிக்குவா யில் ( Piquois Gilles ) இவர்களுடன் புலம்பெயர் நாடுகளில் செயற்படும் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டு மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களை சர்வதேச அரங்கில் எடுத்துரைத்தனர்.
https://www.youtube.com/watch?v=F0mCeVsVZ_8
அதைத் தொடர்ந்து இன்று 11. 03. 2019 பிற்பகல் 15.30 தொடக்கம் 16.30 வரை இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் பெண்கள் எதிர் நோக்கும் சவால்கள் எனும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது.
https://www.youtube.com/watch?v=Eo7GE3agzPU
https://www.youtube.com/watch?v=33JyI1y2tSQ
https://www.youtube.com/watch?v=9NDM512EI88
இக்கருத்தரங்கில் கொலம்பியா, அவுஸ்ரேலியா, குர்திஸ்தான் நாட்டின் பெண் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் எம்முடன் இணைந்திருந்தனர்.
தொடர்ந்தும் இது போன்ற செயற்பாடுகள் எதிர்வரும் 22.03.2019 வரை ஐ.நா மனிதவுரிமைகள் சபைக்குள் செயற்படுத்தப்படுமென தமிழர் இயக்கம் அறியத்தருகின்றது. இக்கருத்தரங்கில் பல தசாப்தங்களாக தமிழீழத்தில் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகள் மீறப்பட்டுவருவதை பன்னாட்டு சமூகத்தின் மத்தியில் எடுத்துரைத்தனர்.
அத்துடன் ஐ. நா மனிதவுரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் சிறீலங்கா தொடர்பான அறிக்கை, தீர்வுகள் எதுவுமற்ற வெற்றறிக்கையெனவும், தொடரும் தமிழினவழிப்பிற்காக நீதி வேண்டி நிற்கும் ஈழத்தமிழர்களிற்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதி என்பதுடன் இதற்கான கண்டனத்தை ஐ.நா மனிதவுரிமைகள் சபையின் பிரதான அவையினுள் தெரியப்படுத்துவதற்கு தமிழர் இயக்கம் ஒழுங்குகள் மேற்கொண்டுள்ளது.
மேலும் சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வண்ணமாக தமிழர் இயக்கத்தின் பெண் செயற்பாட்டாளர்களும், அத்துடன் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ஐ.நா மனித உரிமை சபையினுள் தமது பயிற்சி கற்கை நெறிகளை மேற்கொள்ளும் மாணவர்களும் வழங்கிய வாழ்த்துச் செவ்வி:
https://www.youtube.com/watch?v=md0YvCDr3KY
தமிழீழ போராட்டமானது, வெறுமனே ஓர் தேசிய இனத்தின் போராட்டம் மட்டுமல்ல மாறாக அது ஒடுக்கப்பட்ட அனைத்து சமுதாயங்களிற்கும், உயிர்களிற்குமான போராட்டமாகவே அமைந்திருந்தது.
இவ் விடுதலைப் போராட்டத்தில் ஈழத் தமிழ் பெண்களின் வீரமும் அவர்களின் வகிபாகமும் ஓர் ஒப்பற்ற வீரகாவியமாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் வழித் தோன்றல்களாக புலத்தில் வாழும் ஈழத் தமிழ் பெண்களாகிய நாமும், எம் இனத்தின் விடுதலைக்காக ஐ.நா உட்பட வெவ்வேறுபட்ட சர்வதேச தளங்களில் அதன் ஒழுங்கிற்கேற்ப பன்முகப்படுத்தப்பட்ட போராட்டவடிவங்களில் எமது தமிழீழ இலக்கை முன்னிறுத்திப் போராடி வருகின்றோம்.
அத்துடன் தாயத்தில் சிறீலங்கா இன அழிப்பு அரசின் பல ஒடுக்குமுறைகளிற்குக் கீழ் வாழ்ந்துவரும், வடகிழக்கில் யுத்தத்தில் தங்கள் கணவன்மாரை இழந்து காணப்படும் 90000 பெண்தலைமைத்துவக் குடும்பங்களைத் தலைமை தாங்கி நிற்கும் பெண்களிற்கும் மற்றும் ஏனைய அனைத்து பெண்களிற்கும் தமிழர் இயக்கம் சார்பாக உலக மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் இனவழிப்பு யுத்தத்தின் பின் நலிவுற்றிருக்கும் எம் சமுதாயத்தை தம் விடாமுயற்சியினால் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் எம் ஈழத் தமிழ் பெண்களை நாம் தலைவணங்கி வாழ்த்தி நிற்கின்றோம்.
எமது ஈழத் தமிழ் பெண்களின் வீரத்தையும் அவர்களின் விடாமுயற்சியையும் மிகத் துல்லியமாகக் கணித்த எம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், தமிழர் தேசிய இராணுவத்தில் ஆண்படையணிக்கு நிகராக பெண்படையணியையும் உருவாக்கியிருந்தார்.
இச் செயலை அவரது இக் கூற்று பறைசாற்றி நிற்கின்றது: "பெண்விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை. பெண்கள் விடுதலை பெறாமல் தேச விடுதலையும் முழுமை பெறாது."
அத்துடன் தமிழர் இயக்கமாக நாம் எச் சந்தர்ப்பத்திலும் உங்களுடன் கைகோர்த்து நிற்போம் என்பதையும், சர்வதேச அரங்குகளில் உங்களின் குரலாக எப்போதும் ஒலித்துக் கொண்டிருப்போம் என்பதையும் உறுதிபடக் கூறிக்கொள்கின்றோம்.
நன்றி
தமிழர் இயக்கம்
கருத்துகள் இல்லை