சீமானும் பின்நவீனத்துவ தமிழ்த்தேசியமும்!

மறைமலை அடிகளார், சோமசுந்தர பாரதியார் காலத்தில் தொடங்கி, தியாகு, பழநெடுமாறன், பெ.மணியரசன் காலம் வரையிலான தமிழ்த்தேசியமும் சீமான் முன்வைக்கும் தமிழ்த்தேசியமும் பாரிய வேறுபாடுகளைக் கொண்டவை. அதிகாரத்தை அந்நியர்களிடம் கொடுத்துவிட்டு உரிமைகளைக் கேட்டு போராடிய சீமானுக்கு முந்தைய தலைமுறை தமிழ்த்தேசியவாதிகளுக்கும், தமிழர்கள் இழந்துவிட்ட அதிகாரத்தை அடைவதே எல்லாப் பிரச்சனைகளுக்குமான தீர்வென பேசும் சீமான் முன்வைக்கும் பின்நவீனத்துவ தமிழ்த்தேசியத்திற்கும் வேறுபாடுகள் உண்டு.

முந்தைய தலைமுறை தமிழ்த்தேசியவாதிகள் பின்பற்றிய நடைமுறைகளை எல்லாம் சீமானும் பின்பற்ற வேண்டுமென பலரும் எதிர்பார்ப்பது பிற்போக்குதனமானது. பின்நவீனத்துவம் என்பதே கட்டுகளை உடைப்பதுதான். தமிழ்த்தேசியம் குறித்து இதுவரை உருவாக்கப்பட்டுள்ள எல்லா நடைமுறைகளும் சீமானின் வருகையால் நிலைகுலைந்து நிற்கின்றது.

தேர்தலைச் சந்திப்பது எப்படி தமிழ்த்தேசியம் ஆகும்? என்று கேட்பவர்கள் யாருக்குமே தமிழ்த்தேசியம் அடைவதற்கான, அதாவது தமிழர் அரசை நிறுவுவதற்கான எந்த நடைமுறையும் தெரியாது அல்லது தெரிந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதில் முழு ஈடுபாட்டுடன் கூடிய செயல்பாடுகளை கொண்டிருப்பது இல்லை. சரி.. குறைந்தபட்ச பாதையாக தேர்தல் ஜனநாயகப் பாதையை தேர்வு செய்தாலும்.. 'அது சரியில்லை.. இது சரியில்லை.. சீமானின் இந்தக் கொள்கையில் எனக்கு உடன்பாடில்லை.. அந்தக் கொள்கையில் உடன்பாடில்லை..' என்று பழைமைவாத தமிழ்த்தேசியவாதிகள் பேசிக்கொண்டே இருக்கின்றனர்.

அடிப்படை அரசியல் அறிவுகூட இல்லாத ஒரு சமூகத்தில் அதன் இயங்கியலுக்கு நேர் எதிரான தளத்தில் நின்று வறட்டு தமிழ்த்தேசிய சித்தாந்தங்களை பேசுவது என்பது முட்டாள்தனமானது. எனவே நிகழ்காலச் சமூகத்தின் இயக்க நீரோடத்தில் பயணித்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதின் வழியாகத்தான், அடுத்தடுத்து வரும் தலைமுறைப் பிள்ளைகளுக்கு குறைந்தபட்சமேனும் மொழிவழித் தேசியம் குறித்தான புரிதல்களை உருவாக்க முடியும். அந்த புரிதல்களை அடைந்த ஒரு மக்கள் திரளைக் கொண்டுதான் முழுமையான தமிழ்த்தேசிய அரசை நிறுவமுடியும்.

அண்ணன் சீமான் அமைக்க இருக்கும் நாம் தமிழர் அரசு என்பது தமிழ்த்தேசம் அமைப்பதற்கான திறவுகோலாகவே அமையும். கடலில் தத்தளிப்பவன் கையில் சிக்கிய மரப்பலைகை கூட அவனுக்கு ஓடமாக அமையும் அதுபோலதான், நாம் தமிழர் அரசும் 'தமிழ்த்தேசியம்' அமைவதற்கான துருப்புச் சீட்டாக அமையும்.

இல்லாத திராவிட தேசியத்தை அமைப்போமென திராவிட அரசை தமிழர் நிலத்தில் நிறுவிக் கொண்ட திருட்டு திராவிடர்கள் தங்களின் இயக்கங்கள் வளர தமிழ்நாட்டில் காரணமாக இருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்ற அத்தனைபேரின் வரலாற்றையும் பாடப்புத்தகங்களில் புகுத்திவிட்டனர். இந்திய தேசியத்தை எதிர்க்க வந்தோம் என்ற திராவிட ஆட்சியாளர்களின் காலத்தில்தான் காந்தியில் தொடங்கி மோடி வரையிலான அத்தனைபேரின் வரலாற்றையும் பாடப்புத்தகங்களில் புகுத்திவிட்டனர். இவர்கள் மட்டுமே தலைவர்கள்; இவர்கள் மட்டுமே நமக்காக போராடியவர்கள் என்ற பொதுபுத்தியை குழந்தைகளின் பிஞ்சு மனதிலேயே விதைத்துவிடுகின்றனர்.

ஏன் தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று முழங்கிய மறைமலை அடிகளாரின் வரிகள் தமிழக பாடப்புத்தகங்களில் இல்லை?
ஏன் ஈழத்தில் வீரம் செறிந்த போரினை நடத்திய தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு செய்தி கூட தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தில் இல்லை?
காரணம் இதுவரை ஒரு தமிழ்த்தேசியவாதி தமிழகத்தின் முதல்வராக வந்து அமரவே இல்லை. எனில் எப்படி தமிழ்த்தேசியம், மொழிவழி தேசியம் போன்றவை குறித்தான புரிதல்களை தமிழ்ச் சமூகம் அடையும்?

எனவே, ஆதித்தமிழ்த்தேசிய அறிவு ஜீவிகள் சீமானுக்கு எதிராகப் பேசி நேரத்தை வீண்னடிப்பதைவிடுத்து, ஏதேனும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தமிழர்களுக்கான அரசியல் புரிதலை வழங்க போராடுங்கள். அந்த புரிதல் தேர்தல் பாதையைத் தேர்வு செய்து பயணிக்கும் நாம் தமிழரின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கட்டும்.

நதி கூட வளைந்து ஓடித்தான் கடலெனும் இழக்கை அடையும், இல்லையேல் ஏதேனும் ஒரு இடத்தில் தேங்கிவிடும். தமிழ்த்தேசிய பழைமைவாதிகளும் பழையக் கோட்பாடுகளில் பயணப்பட்டு தேங்கி நிற்பதைவிட, நவீன சிந்தனைகளுக்கு உட்பட்டு, சீமானின் கரங்களை வலிமைபடுத்தி விரைவாக இலக்கை அடைய முன்வர வேண்டும்.

சீமான் வயதில் சிறியவர், அதனால் அவரை எப்படி தலைமை ஏற்பது? என்று தயங்காதீர்கள். திராவிட அமைப்புகள் தேர்தல் வருவதற்கு முன்பு வரை திமுக, அதிமுகவினை எதிர்ப்பது போல தோற்றத்தை உருவாக்கி, பிறகு தேர்தல் நேரத்தில் மட்டும் ஒரே நேர்கோட்டில் நின்று தமிழர்களின் அதிகாரத்தை தட்டி பறித்துவிடுவதைப் போல, தேர்தல் நேரங்களில் மட்டுமேனும் அண்ணன் சீமானை முழுமனதோடு ஆதரியுங்கள்...

தமிழகத்தில் தனித்த அமைப்புகளாக இயங்கும் தமிழ்த்தேசிய பேராளுமைகளே...
உங்கள் கனவுகளையே புதிய கோணத்தில் முன்னெடுக்கும் சீமானை ஒன்றுபட்டு ஆதரியுங்கள்...

இனம் ஒன்றாவோம்!
இலக்கை வென்றாவோம்!

-பேராசிரியர் ஆ.அருளினியன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.