ஒருமித்து வாழ்வதா? - தனித்து வாழ்வதா?

இந்த நாட்டில் ஒருமித்து வாழ்வதா? அல்லது தனித்து வாழ்வதா? என வடக்கு கிழக்கு மக்களிடம் ஐ.நா. கண்காணிப்புடன் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.


அத்துடன் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகத்தின் செயற்பாடு தமிழர்களுக்கு பாரிய தோல்வியைக் கொடுத்துள்ளதுடன், யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் தமிழா்கள் நீதியை எதிர்பார்க்கும் அவலம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் சிந்திக்க மறந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, “இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்று பத்து ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில் நாம் இருக்கின்றோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நீதி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் எமக்கு எதிர்பார்த்த வெற்றி அதில் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

நாட்டில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் உருவான அரசு ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சில விடயங்களை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்தது. அதன்படி சில தீர்மானங்கள் ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு இலங்கை அரசும் இணை அனுசரணை வழங்கியது.

அதில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற பொறிமுறையும் உள்ளடக்கப்பட்டது. எனினும் தீர்மானம் நிறைவேறிய காலத்தில் இருந்தே அரசின் தலைவர்கள் சர்வதேச நீதிபதிகளுக்கோ, சர்வதேச விசாரணைக்கோ இடமளிக்க மாட்டோம் என கூ றி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கைக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசு தீர்மானத்தை நிறைவேற்றாது என கூறிக்கொண்டு இணை அனுசரணையும் வழங்கியுள்ளமை கேலிக் கூத்தான விடயமாகும்.

இலங்கையில் நிலைமாறு கால நீதி என சிலர் கூறுகின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அது சுத்துமாத்து கால நீதியே.
நாம் இந்த நாட்டில் ஒருமித்து வாழ்வதா? அல்லது தனித்து வாழ்வதா? என வடக்கு கிழக்கு மக்களிடம் ஐ.நா. கண்காணிப்புடன் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.

மனித உரிமைப் பேரவையின் ஊடாக சாதிக்க முடியும் என எதிர்பார்த்திருந்த கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூட நாடாளுமனறத்தில் அரசு தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றாது விட்டால் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தும் நிலை உருவாகும் என எச்சரித்துள்ளார்.

எனவே தமிழ் தரப்புகள் மக்களின் குரலாக இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த இணைந்து செயற்பட வேண்டும். தென்னிலங்கை தலைவர்கள் இராணுவத்தினர்கள் போர்வீரர்கள் என்றும் அவர்களை விசாரிக்க இடமளிக்க மாட்டோம் எனவும் ஒருமித்த தீர்மானத்தில் உள்ளனர்.
அதே போல தமிழ் தரப்புக்கள் அனைவரும் பிளவுபடாது இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதில் ஒருமித்து நிற்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.