பிரதமர் ரணில் தமிழர்களை மழுங்கடிக்கவே விரும்புகிறார் - யோகேஸ்வரன்!!

நாட்டில் பெரும்பான்மையினர் சிறந்த வாழ்க்கையை வாழவேண்டும் எனவும் தமிழர்கள் மழுங்கடிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருதுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
கிழக்கு அபிவிருத்தி செயலணியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயும் விசேட கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.


இதன்போது அக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சீ.யோகேஸ்வரன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“வாழைச்சேனை கடதாசி ஆலை 1956ஆம் ஆண்டிலிருந்து விடுதலைப்புலிகள் காலம் வரையிலும் சிறப்பாக இயங்கிவந்தது. தேசிய வர்த்தக விருதும் அன்றைய காலத்தில்பெற்றுக்கொண்டது.
அக்காலத்தில் வயிக்கோல் மூலம் மட்டுமல்லாமல் கழிவு கடதாசிகள் கொண்டும் உற்பத்திகள் நடைபெற்றன. இன்று கழிவுக்கடதாசிகள் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
ஆனால் அக்கடதாசி கழிவுகளை இங்கு பயன்படுத்த முடியும். இதன்மூலம் பல உற்பத்திகளை செய்யமுடியும்.
மேலும் வாழைச்சேனை கடதாசி ஆலையில் 3000க்கும் மேற்பட்டவர்கள் கடமையாற்றினர். ஆனால் தற்போது அவர்கள் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் வறுமையில் வாழ்கின்றனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலையினை மீண்டும் இயங்குவதற்காக நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டோம்.
இதன்போது சீனாவின் உதவியுடன் அதனை இயக்குவதற்கு,ஏற்பாடுகளை மேற்கொண்டு இறுதிக்கட்டம் எட்டப்படும்போது, வடக்கு- கிழக்கில் சீனாவினை அனுமதிக்கமுடியாதென என பிரதமர் ரணில் கூறினார்.இதனால் அத்திட்டத்தை கைவிட்டோம்.
அதனைத் தொடர்ந்து கொரியாவின் உதவியுடன் தொழிற்சாலையினை முழுமையாக புனரமைத்து, மீள இயங்கச்செய்வதாக தெரிவித்ததை தொடர்ந்து அது தொடர்பான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் பிரதமர், குறித்த தொழிற்சாலையில் தொழில்நுட்ப பூங்கா செய்யவேண்டும், சுற்றுலாத் துறையினை அபிவிருத்தி செய்யவேண்டும் என்று கூறி வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு வந்த 20மில்லியன் டொலர்களையும் எம்பிலியப்பிட்டியவுக்கு கொண்டுசென்று அதனை அபிவிருத்தி செய்தார்.
தற்போது அபுதாபியிலிருந்து தமிழர்களின் ஒத்துழைப்புடன் 20000மில்லியன் டொலர் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவும் நிதி வழங்குவதற்கு தயாராகவுள்ளது.
இவ்வாறு வாழைச்சேனை கடதாசி ஆலையினை புனரமைத்து மீள இயங்கச்செய்வதற்கு தேவையான நிதியுதவிகளை வழங்க பலர் தயாராகவுள்ளனர். ஆனால் அதற்கான அனுமதியை வழங்குவதற்கு அரசு தயங்குகின்றது.
அந்தவகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே இதற்கான தடைகளை ஏற்படுத்துகின்றார். சிங்கள மக்கள் மட்டுமே வாழவேண்டும், தமிழர்களை மழுங்கடிக்கவேண்டும் என அவர் கருதுகின்றார்.
மேலும் தொழிற்சாலையை மீள இயங்கச்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரதமர் தொடர்ச்சியாக தயக்கம் காட்டுகின்றார்” என சீ.யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். 

No comments

Powered by Blogger.