பேரம் பேசும் சந்தர்ப்பத்தை தமிழ் அரசியல் கைதிகளுக்காக கூட்டமைப்பு பயன்படுத்த வேண்டும்-சிவசக்தி!!

தற்போதைய ஆட்சியாளர்களின் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பேரம் பேசும் இறுதிச் சந்தர்ப்பமாக ஏப்ரல் ஐந்தில் நடைபெறவுள்ள வரவு- செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பே உள்ளது. அதனை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பயன்படுத்த வேண்டும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போர் நிறைவுக்கு வந்து ஒரு தாசாப்தத்தினை தொடவுள்ள நிலையில் இன்னமும் இலங்கையின் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது இவர்களின் விடுதலையும் பிரதான பேசுபொருளாக இருந்தது. ஆனால் ஆட்சி மாறிய பின்னர் அந்த விடயத்தினை அழுத்தமாக பிடிப்பதற்கு தமிழ்த் தரப்புக்கள் தவறியே வந்துள்ளன. ஒவ்வொரு வரவு செலவுத்திட்டத்திற்குமான இறுதி வாக்கெடுப்பிற்கு சற்று முன்னர் அரசாங்கத்தின் தலைவர்களுக்கும், கூட்டமைப்புக்கும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன.

இதன்போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும் பத்தோடுபதினொன்றாக கூறப்படுமே தவிர, செயல் எதுவுமே செயல் வடிவம் பெறுவதில்லை. வரவு செலவுத்திட்டத்தில் ஒவ்வொரு வருடமும்

பாதுகாப்பு செலவீனத்திற்கு  பெருந்தொகை நிதி ஒதுக்கப்படுகிறது. இவ்வாண்டும் 398.7 பில்லியன் ரூபா ஒதுக்கபட்டும் ஆதரித்து வாக்களிக்கும் செயற்பாட்டினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைவிடவில்லை.

எதிர்வரும் ஏப்ரல் ஐந்தாம் திகதி தற்போதைய ஆட்சியாளர்களின் இறுதி வரவுசெலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் கூட்டமைப்பின் வாக்குகள் அதீத செல்வாக்கினை செலுத்துவதாக உள்ளன. எந்தவொரு நிபந்தனையுமின்றி கம்பெரலிய திட்டம் கிடைத்துவிட்டது என்ற மாயைக்குள் சிக்கி எழுந்தமானமாக ஆதரவளிக்காது, தமிழ் அரசியல்

கைதிகளின் விடுதலைக்கு உறுதியான பதிலளிக்க வேண்டும் என்ற விடயத்தினை முன்வைத்து பேரம்பேசவேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தினை நழுவ விட்டால் எதிர்காலத்தில் கூட்டமைப்பினது எந்த ஒத்துழைப்பும் அரசாங்கத்திற்கு தேவைப்படாது. அதன் பின்னர் கூட்டமைப்பால் அரசாங்கத்தினை கிடுக்கிப்பிடிக்க முடியாது என்பதே யதார்த்தமாகும். ஆகவே வரவு செலவுத்திட்டம் முதல் ஜெனீவா வரை அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இருபது- முப்பது வருடங்கள் இளைமையை, உறவுகளை தொலைத்து சிறைகளில் வாடுகின்றவர்களின் விடுதலையை இதயசுத்தியுடன் வலியுறுத்தி மனிதபிமானத்தின் பால் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டியது அவசியமாகின்றது.

இந்தச்சந்தர்ப்பத்தினையும் கைவிட்ட பின்னர் பாராளுமன்றத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும் என்றும் பயங்கர பின் விளைவுகளை சந்திக்கவேண்டி வரும் என்றும் எச்சரிக்கைவிடுவதாலும், சூளுரைப்பதாலும் எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை. அத்தோடு மீண்டும் முன்னனாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று கூறிக்கொண்டு ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்  மூன்று தடவை கால நீடிப்பிற்கு ஆதரவை வழங்கி விட்டு போர்க்குற்றம் மனித உரிமை மீறல்களோடு சம்பந்தப்பட்டவர்களை பாதுகாத்து வைத்துக்கொண்டு மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்று கூறுவது கேலிக்கூத்தான விடயமாகும். இவை அனைத்துமே தேர்தலுக்கான முன்னுரைகளாகவே அமையும் என்பதை மக்கள் நன்கே அறிந்துள்ளனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.