கடையடைப்பு போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு!!

வடக்கு மற்றும் கிழக்கில் கடையடைப்பு போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


இந்த போராட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அன்றைய தினம் இடம்பெறும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு புகையிரத வீதியில் உள்ள இணையம் அலுவலகத்தில் கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அ.அமலநாயகி, அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ரி.செல்வராணி, திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் எஸ்.சரோஜா தேவி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை வெளியிட்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கிழக்கு, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்நுட்ப கல்லூரி, ஆசிரிய பயிற்சி கல்லூரி, ஆசிரிய சங்கங்கள், பாடசாலை மாணவர்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், ஊடக சங்கங்கள், சமய தலைவர்கள், இளைஞர் கழகங்கள், விளையாட்டு கழகங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினம் வர்த்தக சங்கத்தினர் வடக்கு, கிழக்கில் தமது வர்த்தக நிலையங்களை மூடியும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து சங்கத்தினர் தமது போக்குவரத்து சேவைகளை நிறுத்தியும் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் தமது அரசியல் வேறுபாடுகளை களைந்து இந்த போராட்டத்தில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூவின மக்களும் தமது நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு வழங்குமாறும் அச்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை சர்வதேச நாடுகளுக்கு நல்லிணக்க செயற்பாடுகளில் ஈடுபடுவதாக காட்டிக்கொண்டு இலங்கை அரசாங்கம், கடத்தல்களில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன் இனவழிப்பு செயற்பாடுகளுக்கு துணைபோவதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.