தொடர் தோல்வி... அடிமேல் அடிவாங்கும் ரியல் மாட்ரிட்!

லா லிகா, கோபா டெல் ரே... இப்போது சாம்பியன்ஸ் லீக்.. ஒரு வார இடைவெளியில் அனைத்துக் கோப்பைகளையும் கைநழுவவிட்டுள்ளது ரியல் மாட்ரிட்.

`அவே கோல்' என்ற கால்பந்தின் விதி பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கலாம். எதற்காக நாக் அவுட் போட்டிகளில் அவே கோல்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படுகிறது, கிரிக்கெட்டில் உள்ளூர் ஆடுகளம், அந்த நாட்டு அணிக்கு எப்படிச் சாதகமோ, அதே அளவு கால்பந்திலும் சொந்த மைதானங்கள், உள்ளூர் அணிகளுக்குச் சாதகமாக இருக்கும். கிரிக்கெட் பிட்ச் போல, டெக்னிக்கலாக ஆட்டத்தில் அதனால் எந்த மாற்றமும் ஏற்படாது என்றாலும், உளவியல் ரீதியான தாக்கம் அதிகமாக இருக்கும்.

சுமார் 50,000 உள்ளூர் ரசிகர்களின் தூற்றலுக்கு மத்தியில், மன ரீதியாகத் திடமாக இருக்கும் எதிரணிகளால்தான் போட்டியளிக்க முடியும். அதிலும், கேம்ப் நூ, ஓல்ட் டிராஃபோர்ட் போன்ற மிகப்பெரிய ஆடுகளங்களில், பலமான அந்த அணிகளை வீழ்த்துவதெல்லாம் குதிரைக் கொம்பு. ஆனால், ரியல் மாட்ரிட்... நடப்பு ஐரோப்பிய சாம்பியன் ரியல் மாட்ரிட்... 12 முறை சாம்பியன்ஸ் லீக் வென்ற ரியல் மாட்ரிட்... தொடர்ந்து நான்காவது முறையாக, சொந்த மைதானமான சேன்டியாகோ போர்னபோவில் தோற்றிருக்கிறது. சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கே தகுதி பெறாமல் வெளியேறி இருக்கிறது.


இன்று அதிகாலை, அயாக்ஸ் அணி, போர்னபோ மைதானத்துக்குள் நுழைந்தபோது, நிச்சயம் யாருமே இந்த முடிவை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அயாக்ஸ் அணி வீரர்கள்கூட தங்கள் கனவிலும் இதை நினைத்திருக்கமாட்டார்கள். 18 நிமிடங்களில் இரண்டு கோல்கள் வாங்கி பின்தங்கிய ரியல் மாட்ரிட், அடுத்த 18 நிமிடங்களில் லூகாஸ் வஸ்க்யூஸ், வினிசியஸ் ஜூனியர் என இரண்டு முக்கிய வீரர்களைக் காயத்தால் இழந்தது. தொடக்கத்தில், வரேன் அடித்த ஹெடர் கிராஸ் பாரில் பட்டு வெளியேறியது, பேல் அடித்த ஷாட், போஸ்ட்டில் பட்டு வெளியேறியது என முதல் பாதி அவர்களுக்கு அதிர்ச்சிகளை மட்டுமே கொடுத்தது.

இரண்டாவது பாதியின் தொடக்கத்தில், சில நல்ல அட்டாக்குகள் மேற்கொண்டும் அவர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மாறாக, கவுன்ட்டர் அட்டாக்கில் அயாக்ஸ் அணிதான் கோல் அடித்தது. முதல் சுற்றில் 2-1 என இரண்டு அவே கோல்களுடன் முன்னிலை பெற்றிருந்த மாட்ரிட் 3-0 எனப் பின்தங்கியது. இனி கூடுதல் நேரத்துக்கு வாய்ப்பே இல்லை. 3 கோல் அடித்தாகவேண்டிய நிலை. ஒருவழியாக அசேன்சியோ 70-வது நிமிடத்தில் முதல் கோல் அடிக்க, அடுத்த இரண்டாவது நிமிடம் ஃப்ரீ கிக்கில் கோல் வாங்கியது மாட்ரிட். 4-1. ஹகிம் ஜியாச், டேவிட் நெரஸ், டுசான் டேடிக், லாசே ஷோன் என ஆளுக்கு ஒரு கோல் அடித்து, அயாக்ஸ் அணியின் சரித்திர வெற்றிக்கு வழிவகுத்தனர்.

சொந்த மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் லீக் நாக் அவுட் போட்டிகளில் இவ்வளவு பெரிய தோல்வியை அந்த அணி சந்தித்ததே கிடையாது. லா லிகா, கோபா டெல் ரே... இப்போது சாம்பியன்ஸ் லீக்.. ஒரு வார இடைவெளியில் அனைத்துக் கோப்பைகளையும் கைநழுவவிட்டுள்ளது ரியல் மாட்ரிட். 90 நிமிடம் முடிந்து, அந்தக் கடைசி விசில் அடித்தபோது, பேர்னமோ மைதானத்தில் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக இருந்தன. தங்கள் அணியின் மோசமான ஆட்டத்தைச் சகிக்க முடியாத ரசிகர்கள் பாதியிலேயே வெளியேறினர். ஒன்றா, இரண்டா... தொடர்ந்து நான்கு போட்டிகளாக உள்ளூர் மைதானத்தில் தோல்வியடைந்தால்..?!


பிப்ரவரி 17, ஜிரோனா அணியிடம் 2-1 தோல்வி. 28-ம் தேதி கோபா டெல் ரே இரண்டாம் சுற்றில் பார்சிலோனா அணியிடம் 3-0 எனப் பேரடி. 3 நாள்கள் கழித்து லா லிகா `எல் கிளாசிகோ' போட்டியில் மீண்டும் தோல்வி (1-0). இப்படித் தொடர்ந்து 3 ஹோம் கேம்களில் தோற்றிருந்தது மாட்ரிட். அதிலும் 2 தோல்விகள் தொடர்ச்சியாக எல் கிளாசிகோவில். இப்படித் தொடர்ச்சியான தோல்விகளால், மாட்ரிட் ரசிகர்கள் துவண்டுபோயிந்த நிலையில்தான், சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றின் இரண்டாவது லெக் ஆட்டத்துக்கு பேர்னபோ வந்தது நெதர்லாந்து கிளப்பான அயாக்ஸ்.

முதல் லெக் ஆட்டத்தின்போது, மாட்ரிட் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் வேண்டுமென்றே மஞ்சள் அட்டை பெற்று, இந்த ஆட்டத்து சஸ்பெண்ட் ஆனார். ஏனெனில், சாம்பியன்ஸ் லீக் தொடரில், இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்றால், அடுத்த ஆட்டம் ஆட முடியாது. ஒருவேளை, அதைக் காலிறுதி, அரையிறுதி போட்டியின்போது பெற நேர்ந்தால் கஷ்டமாகிவிடும் என்பதால், போன ஆட்டத்தில் பெற்று, பலம் குறைந்த அயாக்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் வெளியே அமர முடிவு செய்து அப்படிச் செய்திருந்தார் அவர். ஆனால், பேர்னபோவின் கண்ணாடி அறைக்குள் அமர்ந்திருந்த அவர் கண் முன்னாலேயே, தன் அணியின் டிஃபன்ஸ் நொறுங்கியதைக் கண்டார் அவர்.

டிஃபண்டர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை, ஃபுல் பேக் வீரர்கள் சரியாக, டிஃபன்ஸிவ் தேர்டில் டிராக் செய்யவில்லை, நடுகள வீரர்கள் அயாக்ஸ் வீரர்களைச் சரியாக மேன் மார்க் செய்யவில்லை. ஓர் அணி தோற்பதற்கு இதைவிட வேறு எந்தத் தவறும் செய்ய  தேவையில்லை. அனைத்துத் தவறுகளையும் மாட்ரிட் களத்தில் செய்தது. எதிராளிகளைக் குறைத்து மதிப்பிட்டு, இவற்றை விடப் பெரிய தவற்றை கேப்டன் ரமோஸ் முதல் போட்டியிலேயே செய்ய, மூன்று முறை தொடர்ந்து வென்ற தொடரின் இரண்டாம் சுற்றிலேயே இம்முறை வெளியேறியிருக்கிறது மாட்ரிட். தோல்வியை மட்டுமல்லாமல், தங்கள் ரசிகர்களின் அவநம்பிக்கையையும் சேர்ந்தே பெற்றிருக்கிறது உலகின் ரொப் கால்பந்து கிளப்!
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.