ஒருங்கிணைந்த பண்ணையம் ஏன் சிறந்தது?

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருக்கின்ற நீர் வளத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி அதிக லாபம் பெற்று வருடம் முழுவதும் வருவாய் கிடைக்கவும் ஒருங்கிணைந்த பண்ணையம் வழி செய்கிறது. 
``ஒன்றின் கழிவு இன்னொன்றின் மூலப்பொருள்!” - ஒருங்கிணைந்த பண்ணையம் ஏன் சிறந்தது?
விவசாயத்தில் ஒரு பயிரை மட்டும் பயிரிடாமல் பல பயிர்கள் அல்லது பண்ணையத் தொழிலை செய்து வந்தனர் நம் முன்னோர். அதேபோல அந்தந்தப் பகுதிகளில் விளையும் பொதுவான காய்கறிகளைப் பயிரிட்டு கணிசமான லாபத்தையும் சம்பாதித்து வந்தனர். நம் முன்னோர்களின் விவசாயத்தைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், ஒரு விவசாயி நிச்சயமாக இரண்டு மாடுகள், இரண்டு ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட பலவற்றையும் வைத்திருப்பதைப் பார்க்க முடியும். நிலத்தில் குறைந்தது இரண்டு வகையான காய்கறிகள், நெல், வயலைச் சுற்றிலும் அல்லது வரப்பின் ஓரங்களில் தென்னை மற்றும் பனை மரங்களை அதிகமாக நட்டு வைத்திருப்பர். இப்படிப் பல பயிர்களையும் கால்நடைகளையும் வளர்த்து விவசாயத்தில் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். இதையெல்லாம் பின்பற்றி காலநிலையைக் கவலையின்றி கடந்து வந்தனர். அவர்கள் பின்பற்றிய முறைக்குப் பெயர்தான் `ஒருங்கிணைந்த பண்ணையம்.’

ஒரு பண்ணையத் தொழிலை மட்டும் மேற்கொள்ளாமல், ஒன்றோடு ஒன்று தொடர்புடைய இரண்டு அதற்கு மேற்பட்ட பண்ணைத் தொழில்களை கூட்டாக மேற்கொள்ளுதலே ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகும். ஒரு பண்ணைத் தொழிலின் கழிவுப்பொருள் மற்றொரு பண்ணைத்தொழிலுக்கு இடுபொருளாக மாறுவதுதான் இதனுடைய சிறப்பு. இதனால் இடுபொருள்களின் செலவு குறையும். இன்றைக்கு வெளியில் வாங்கும் ரசாயன உரங்களுக்கு ஆகும் செலவுகள்தான் விவசாயிகளுக்குப் பெரிய தலைவலியாக இருக்கிறது. இந்த ஒருங்கிணைந்த பண்ணையத்தில் பண்ணையில் கிடைக்கும் உரங்களைப் பயன்படுத்தினாலே போதும். 

ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருக்கின்ற நீர் வளத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி அதிக லாபம் பெற்று வருடம் முழுவதும் வருவாய் கிடைக்கவும் ஒருங்கிணைந்த பண்ணையம் வழி செய்கிறது. 

இந்தியாவைப் பொறுத்தமட்டில் அதிக எண்ணிக்கையிலான கறவை மாடுகள் மட்டுமல்லாது, வெள்ளாடுகள், செம்மறியாடுகள், பன்றிகள் மற்றும் கோழிகள் உள்ளன. வேளாண்மையும் கால்நடை வளர்ப்பையும் முதன்மையாகக் கொண்டுள்ள நம் நாட்டில் 100 கோடிக்கும் மேற்பட்ட அளவில் விலங்கு மற்றும் தாவரக் கழிவுகள் ஆண்டுதோறும் கிடைக்கின்றன. விவசாயிகளின் நிலப்பரப்பு, நீர்ப்பாசன வசதி, வடிகால் வசதி மற்றும் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து பல்வேறு மானாவாரி அல்லது தரிசு நிலப்பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த பண்ணை மாதிரிகள் அமைக்கலாம். இதுதவிர, விவசாய நிலப்பரப்புகளும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்துகொண்டே வருகின்றன. அவற்றுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம் ஒரு தீர்வாக அமையும். 

ஒரு பயிரின் சாகுபடியை மட்டும் நம்பி இருக்காமல் கறவை மாடு, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, காடை வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, அசோலா ஆகிய உபதொழில்களையும் இணைத்து விவசாயத்தில் ஈடுபட்டால் கூடுதல் வருமானம் பெறலாம். இப்படி அமைப்பதன் மூலம் ஆண்டு முழுவதும் வருமானத்தைப் பெற முடியும். ஏதாவது ஒரு பயிர் கைவிட்டாலும் மற்றொரு உபதொழில் விவசாயிகளுக்குக் கைகொடுக்கும். இதனால் விவசாயத் தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து வேலை கிடைக்கும். பண்ணையில் கிடைக்கும் கழிவுப் பொருள்களைக் கொண்டு உரம் தயார் செய்ய வேண்டும். கழிவுப் பொருள்களை மறுசுழற்சி செய்து நமக்கான தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். பண்ணைக்கழிவுகள் மண்ணுக்கும் பயிருக்கும் நல்ல உரமாவதோடு பண்ணையை வளமாக்குகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் நிச்சயமாக மகசூலைப் பெருக்கி, செலவைக் குறைக்கலாம். 

ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் பண்ணைத் திட்டம் வகுக்கும்போதே நன்செய், புன்செய் நிலங்களுக்கு ஏற்றப் பயிர் திட்டத்தை அமைக்க வேண்டும். அதன் பின்னர், அந்தப் பயிருக்கு ஏற்றப் பொருளாதார ரீதியில் கைகொடுக்கக் கூடிய உபதொழில்களைப் பின்பற்ற வேண்டும். உபதொழில்கள் ஒவ்வொன்றும் மற்றொரு உப தொழிலைச் சார்ந்து இருக்க வேண்டும். பண்ணையில் விளையும் அல்லது உள்ளூரில் கிடைக்கும் தானியங்களைக் கொண்டே தீவனக் கலவை தயார் செய்தல் வேண்டும். அப்போதுதான் உபதொழில்களுக்கு ஆகும் உற்பத்திச் செலவு குறைந்து லாபம் கிடைக்கும். ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் பயிர் சுழற்சியால் முதல் போகம் நெல், இரண்டாம் போகம் பயறு, மூன்றாம் போகம் தானியங்கள் ஆகியவற்றைப் பயிரிடலாம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.