இன்று டாக்டர் கோவூர் அவர்களின் பிறந்த தினம்.!

தமிழகத்தில் தந்தை பெரியார் போன்று இலங்கையில் டாக்டர் கோவூர் அவர்களின் பணி மிகவும் போற்றத்தக்கது. என்றும் நினைவில் கொள்ள வேண்டியது.

டாக்டர் கோவூர் அவர்களை நான் 1975களில் நெல்லியடி மத்திய மாகாவித்தியாலய மைதானத்தில் நடந்த “மனோ இரவு” என்னும் நிகழ்வில் கண்டேன்.
மேடையில் நின்ற அவர் ஏதோ சில வார்த்தைகளை கூறினார். அப்போது கீழே நிகழ்வு பார்த்தக்கொண்டிருந்த சிலர் மயங்கினார்கள்.
அவர்களை மேடைக்கு அழைத்து மயக்க நிலையிலேயே அவர்கள் ஆடவும் பாடவும் செய்தார். பின்னர் அவர்களின் மயக்க நிலையை போக்கினார். இதன் மூலம் “கிப்னோடிச” முறையை அவர் எமக்கு அறிமுகப்படுத்தினார்.
அவரது இந்த செய்கை அவரைப் பற்றி அறியும் ஆர்வத்தை எனக்கு கொடுத்தது. அப்போது அவர் இந்தியாவில் சாய்பாபாவின் புட்டபர்த்திக்கே சென்று சவால் விட்டவர் என்று எனது தந்தையார் கூறியது எனக்கு மேலும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
சாய்பாபாவின் புட்டபர்த்தி வாசலில் நின்று அங்கு வந்த பக்தர்களுக்கு பாபா போன்று விபூதி எடுத்துக் கொடுத்தாராம் கோவூர் அவர்கள்.
அப்பாவி பக்தர்கள் இவர் இன்னொரு பாபா என்று நினைத்து அவரை வழிபட்டார்களாம். அவர்களிடம் கோவூர் தான் செய்தது மந்திரம் அல்ல, வெறும் தந்திரமே என்றும் பாபாவும் இதையே செய்வதாகக் கூறினாராம்.
பக்தர்களுக்கு தனது மோசடிகள் தெரிந்துவிடுமோ என அஞ்சிய பாபா தனது செல்வாக்கு மூலம் பொலிசாரைக் கொண்டு கோவூரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினாராம்.
மந்திரத்தால் தாலி வரவழைக்கும் பாபா மந்திரத்தால் “கொண்டா” மோட்டார் சைக்கிள் வரவழைத்துக் காட்டுவாரா? என்பதே கோவூர் பாபாவுக்கு விட்ட சவால். அதை பாபா ஒருபோதும் நிறைவேற்றவில்லை.
கோவூர் பற்றி மேலும் அறியும் எனது ஆர்வம் அவரது “மனக் கோலங்கள்”, “கோர இரவுகள்” என்னும் புத்தகங்களைப் படிக்க வைத்தன. இவை வீரகேசரி பிரசுரமாக அன்று வெளியிடப்பட்டவை. அதிக அளவில் விற்கப்பட்டவை.
இதில் அவர் தான் சிகிச்சை அளித்த நோயாளிகளின் கதைகளைக் கூறியிருக்கிறார். பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நோயாளிகளை அவர் தனது கிப்னோடிச சிகிச்சை மூலம் சுகப்படுத்தியிருக்கிறார். இந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவர் அயராது பகுத்தறிவு பிரச்சாரம் செய்திருக்கிறார்.
இன்றும் இலங்கையில் மட்டுமல்ல எம்மவர்களுக்கு லண்டன், கனடாவிலும் பேய் பிசாசு பிடிக்கிறதாம். இங்கும் பில்லி சூனிய கூத்துகள் அரங்கேறுகின்றன. எனவே இதற்கு எதிராக ஆயிரம் கோவூர்களின் பணி அவசியமாகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.