ஜநாவில் சிங்கள தலைமைகளும் நச்சுக்கனியாகும் தமிழ் தலைவர்களும்!!

ஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும் நச்சுக்கனியாகும் தமிழ் தலைவர்களும்.


ஐநா கற்பகதருவல்ல. அதேவேளை திருப்பாற் கடலேயாயினும் அதைக் கடையாமல் அமிர்தம் எடுக்க முடியாது. 196 உறுப்பு நாடுகளைக் கொண்ட உலகளாவிய மிகப் பெரிய நிறுவனம் ஐநா சபை. அதற்கென்று குறிப்பிடக்கூடிய அளவு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. ஆனால் அதற்காக அது கேட்டதெல்லாம் வழங்கவல்ல ஒரு கற்பக விருட்சமல்ல.

        ஐநா சபையை அதற்குரிய சாதக, பாதக அம்சங்களோடு இணைத்துப் புரிந்துகொள்ள வேண்;டியது அவசியம். முதலாவது அர்த்தத்தில் இது அரசுகளின் சபையாகும். ஆதலால் அரசற்ற தேசிய இனங்கள், மற்றும் மக்கள் கூட்டங்கள் என்பவற்றின் நலன்களை அது நீதியின்பால் நிலைநிறுத்தும் என்று கருதுவதற்கில்லை. அப்படி எங்காவது அல்லது எப்போதாவது நீதி வழங்கப்பட்டாலும் அது ஐநா சபையில் அதிகாரம் செலுத்தக்கூடிய பலம் பொருந்திய அரசின் அல்லது அரசுகளின் நலன்களோடு சம்பந்தப்பட்டே நிகழ முடியும்.

           ஐநா சபையின் கட்டமைப்பைப் பார்க்கும் போது பாதுகாப்புச் சபையில் மொத்தம் 20 நாடுகள் உள்ளன. அதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐந்தும் நிரந்தர உறுப்பு நாடுகளாகும். இந்த 5 நிரந்தர உறுப்பு நாடுகளுக்கும்தான் வெட்டுவாக்கு (VETO) அதிகாரம் உண்டு. பாதுகாப்புச் சபையில் 20 நாடுகள் உள்ள போதிலும் மேற்படி 5 நாடுகளில்  ஏதாவது ஒன்று தனது வெட்டுவாக்கு அதிகாரத்தைப்  பிரயோகித்தால் எத்தகைய தீர்மானத்தையும் ஐநா சபையில் நிறைவேற்றாது தடுத்து நிறுத்த முடியும்.

          இந்த வெட்டுவாக்கு அதிகாரங்கொண்ட அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய 4 நான்கு நாடுகளினதும் மொத்த மக்கள் தொகை 60 கோடியே 50 இலட்சமாகும். அதேவேளை இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 134 கோடியாகும். இங்கு இந்தியாவின் மக்கள் தொகையைவிடவும் அரைவாசிக்கும் மேல் குறைவான மேற்படி 4 நாடுகளுக்கு தலா ஒன்றாக 4 வெட்டுவாக்கு அதிகாரம் உண்;;;டு. ஆனால் மேற்படி இந்த 4 நாடுகளைவிடவும் இரண்டு மடங்கிற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவிற்கு வெட்டுவாக்கு அதிகாரம் கிடையாது. மேலும் பாதுகாப்புச் சபையிலுள்ள 20 நாடுகளில் 19 நாடுகள் ஒரு தீர்மானத்தை ஆதரிக்கும் போது ஒரு நாடு தனது வெட்டுவாக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தினால் அத்தீர்மானம் நிறைவேற்றப்படாது தடுக்கப்பட்டுவிடும். இந்த இரண்டு உதாரணங்களுமே ஐநா சபையின் ஜனநாயகத்தை கேலிக்குரியது என பிரகடனப்படுத்தி நிற்கின்றன.

         அதேவேளை பலம் பொருந்திய நாடுகளால் ஐநா சபையின் அனுமதியின்றி எதனையும் செய்யமுடியாது என்றுமில்லை. உதாரணமாக 1999ஆம் ஆண்டு ஐநா சபையின் அனுமதியைப் பெறாமல் நோட்டோ நாடுகள் யூகோஸ்லாவியாவின் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதாவது அப்போது யூகோஸ்லாவியாவில் கொசோவா மக்கள் மீது சேர்பிய இராணுவம் இனப்படுகொலையைப் புரிந்துகொண்டிருந்த போது அமெரிக்கா அங்;;கு படையெடுப்பை மேற்கொள்ள முடிவெடுத்தது. அதற்கு அப்போது ஐநா பாதுகாப்புச் சபையில் ரஷ்யாவும், சீனாவும் வெட்டுவாக்கு அதிகாரத்தைப் பயன்படுத்தும் என்ற நிலை காணப்பட்டது. எனவே அமெரிக்கா ஐநா சபைக்கு வெளியே “நோட்டோ” மூலம் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு  சேர்பிய இராணுவத்தைத் தோற்கடித்ததுடன் இனப்படுகொலையை முடிவிற்கும் கொண்டு வந்தது.

              40 அமெரிக்க சார்பு நாடுகளின் கூட்டுப் படையுடன்  2003 ஆம் ஆண்டு அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்து வளைகுடா யுத்தத்தை முன்னெடுத்தது. அப்போது இப்படையெடுப்பிற்கு ஐநாவின் அனுமதி நேரடியாகப் பெறப்படவில்லை.
2003 ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை உலகெங்கும் இப்படையெடுப்பிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட 3000 ஆர்;ப்பாட்ட ஊர்வலங்களில் மொத்தம் 3 கோடியே 60 இலட்சம் மக்கள் பங்கெடுத்துள்ளனர். உலகில் இதுவரை நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களில் ஒரு விடயத்திற்கு எதிராக அதிகூடிய தொகையிலான மக்கள் பங்கெடுத்த ஆர்ப்பாட்டம் இதுவென கின்னஸ் பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது. ஆனாலும் இவற்றையும் மீறி, ஐநாவின் நேரடி அனுமதியும் பெறாமல் அமெரிக்கா தனக்கான 40 நட்புநாடுகளின் கூட்டோடு இப்படையெடுப்பை மேற்கொண்டு இறுதியில் சதாம் ஹ{சைனின் ஆட்சியைக் கவிழ்த்து அவரை தூக்கிலிடவும் வழி செய்தது.

         இப்படையெடுப்பிற்கு ஐநாவின் அனுமதி கிடைப்பது சாத்தியமற்றது என்ற நிலை காணப்பட்ட போது அத்தகைய அனுமதியின்றியேயாயினும் ஈராக்கிற்கு எதிராக படையெடுப்பை மேற்கொள்வதற்கான தீர்மானத்தை புஷ் நிர்வாகம் எடுத்தது. அனுமதிக்கான வாய்ப்பு இல்லாது போன நிலையில் மனிதகுலத்திற்கு கேடுவிளைவிக்கவல்ல ஆபத்தான ஆயுதங்கள் ஈராக்கில் உண்டா என்பதை பரிசோதிப்பதற்கென “ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானம் 1441” என்ற தீர்மானத்தை ஐநா பாதுகாப்புச் சபையில் 2002ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்கா நிறைவேற்றியது. இத்தீர்மானம் படையெடுப்பிற்கான அனுமதியல்ல. ஆனால் இத்தீர்மானத்தை தனக்குப் போதுமான நியாயமாகக் காட்டி அமெரிக்கா தனது கூட்டு நாடுகளின் உதவியுடன் ஈராக் மீதான படையெடுப்பை மேற்கொண்டு தனது இலக்கை அடைந்தது.

       இதற்கு முன் ஐநாவின் அனுமதியின்றி 1974ஆம் ஆண்டு சைப்ரஸ் வாழ் துருக்கியின மக்களை பாதுகாப்பதற்கென்று கூறி துருக்கிய இராணுவம் துருக்கிய சைப்ரஸ் பிரதேசத்திற்குள் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு இன்றுவரை அது துருக்கிய நிர்வாகத்திற்கு உட்பட்ட பாதுகாப்பு பிரதேசமாகக் காணப்படுகிறது. துருக்கிய இராணுவமும் இதுவரை அங்கு நிலைகொண்டுள்ளது.

        மேலும் 2014 ஆம் ஆண்டு உக்ரைன் வாழ் கிரிமிய மக்களை  பாதுகாப்பதற்கெனக் கூறி ரஷ்யா அங்கு படையெடுப்பை மேற்கொண்டு கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டது. இதுவும் ஐநாவை மீறியே நிகழ்ந்தது.
எனவே ஐநா சபையை வல்லமை பொருந்திய நாடுகள் தமக்கேற்ப பயன்படுத்த முடியும் அல்லது அதனை மீறிச் செயற்படவும் முடியும் என்பதே வரலாற்று நடைமுறையாகும்.

        தனக்கு ஏற்றதைச் செய்ய வல்லமை பொருந்திய ஒரு பெரிய நாடொன்றினால் ஐநா சபையை தனக்குச் சாதமாகப் பயன்படுத்தவும் முடியும் அல்லது அதை மீறிச் செயற்படவும் முடியும்.  சிறிய நாடொன்றினால் நேரடியாக ஐநா சபையில் எதனையும் சாதித்திட முடியாது. ஆனால் ஒரு பெரிய நாட்டின் துணையுடன் தனக்கான இலக்கை ஐநா சபை வாயிலாக அடையச் சிறிய நாட்டிற்கு வாய்ப்புண்டு. அதேவேளை அரசற்ற இனங்களுக்கு ஐநா சபையில் குரல் இல்லை. ஆனாலும் அந்த அரசற்ற இனம் ஒரு பெரிய நாட்டோடு தனக்கு இருக்கக்கூடிய வாய்ப்பைப் பயன்படுத்தி ஐநா சபையில் அப்பெரிய நாட்டின் வாயிலாக தனது இலக்கை அடைய அரசியல் அர்த்தத்தில் நடைமுறை சார்ந்த இடமுண்டு.

        சிறிய நாடுகளுக்கு ஐநாவில் இடமில்லை. ஆனால் சிறிய நாடான இஸ்ரேல் பலம்பொருந்திய அமெரிக்காவின் துணையுடன் ஐநாவில் தனக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுகிறது. அல்லது அமெரிக்காவின் துணையுடன் ஐநாவை மீறிச் செயற்படவும் முடிகிறது. அதேபோல அரசற்ற இனங்களுக்கும் ஐநாவில் இடமில்லை. ஆனால் அரசற்ற சைப்ரஸ்-துருக்கிய இனம் அமெரிக்க  சார்பு துருக்கியைப் பயன்படுத்தி ஐநாவைக் கடந்து செயற்படுகிறது. அல்லது ஐநாவிற்குள் தனது செல்வாக்கைச் செலுத்துகிறது.

       பொதுவாக அரசற்ற இனங்களுக்கு ஐநாவில் இடமில்லை என்றபோது அரசற்ற இனங்களால் தமக்குப் பயனில்லை என்று காணும் பெரிய அரசுகள் தமது அரச நலன்கருதி அரசற்ற இனத்திற்கு எதிராக அந்த இனத்தை ஒடுக்கும் அரசுடன் இசைந்து செயற்படுவதே பெரிதும் நடைமுறையாக உள்ளது.

        அரசற்ற இனங்கள் நான்காம் உலக நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த அரசற்ற இனங்கள் மத்தியில் ஏற்படும் கொந்தளிப்புக்கள், போராட்டங்கள், அமைதியின்மைகள் என்பன பெரிய அரசுகளின் சர்வதேச ரீதியான நலன்களையோ, அந்த நாட்டிற்குள் அதற்கான வர்த்தக நலனையோ பாதிக்கும் நிலை  வரலாற்றில் எழத் தொடங்கியது.

        இந்த இடத்திற்தான் அரசியலை அதற்கான தத்துவார்த்த உள்ளடக்கத்தில் அதிகம் புரிந்துகொள்ளப்பட வேண்டியது அவசியப்படுகிறது. இத்தகைய நாடுகளின் கொந்தளிப்புக்களுக்கும், குமுறல்களுக்கும் ஒரு வடிகால் அமைக்கத் தவறினால் அங்கு ஆயுதப் போராட்டங்கள், அமைதியின்மைகள் என்பன இயல்பாகவே எழும். இப்பின்னணியிற்தான் வினைத்திறன் மிக்க ஒரு ஆற்றுப்படுத்தலை இத்தகைய பாதிக்கப்படும் இனங்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு இந்த பெரிய அரசுகள் ஐநா மனிதஉரிமைகள் ஆணையம் என்ற ஓர் அமைப்பை 2006ஆம் ஆண்டு கவர்ச்சிகரமாய் வடிவமைத்தன.

       எமது சமூகத்தில் ஒருவர் மரணமடையுமிடத்து அனைவரும் கூடி ஒப்பாரி வைப்பது வழக்கம். இந்த “ஒப்பாரி” என்பது ஒருவகை ஆற்றுப்படுத்தலாக அமைகிறது. அதேபோல பாதிக்கப்படும் அரசற்ற இனங்களை கொந்தளிக்காது தணிப்பதற்கான ஒருவகை ஒப்பாரிக்கான முற்றமாக ஐநா மனிதஉரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது. இங்கு மனிதஉரிமைகள் ஆணையம் முதல் நிலையில் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படக்கூடுமானாலும் அது ஒளடதம் அல்ல. எப்படியாயினும் அதைப் பயன்படுத்தவும் ஒரு பலம் பொருந்திய நாட்டின் திட்டவட்டமான ஆதரவு வேண்டும்.

       மனிதஉரிமைகள் ஆணையம் என்ற இந்த “ஒப்பாரி முற்றத்தை” கையாள்வதற்கு பலம்பொருந்தி நாட்டின் வெளிப்படையான நேரடி ஆதரவு மிகவும் அவசியமானது. ஆதலால் பலம்பொருந்திய ஒரு பெரிய நாட்டை வென்றெடுப்பதற்கான வழிமுறைதான் சர்வதேச அரசியலில் வெற்றிகளை ஈட்டுவதற்கான வழியேதவிர வெறுமனே ஒப்பாரி முற்ற அரசியல் அல்ல.

       முள்ளிவாய்க்காலுக்கு முன்னும் பலம்பொருந்திய எந்தொரு நாட்டின் ஆதரவையும் தமிழ் மக்கள் பெற்றிருக்கவில்லை. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும் அப்படி எந்தொரு நாட்டின் ஆதரவையும் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை.

        சர்வதேச போர்க்குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கு இலங்கை அரசியல் யாப்பில் இடமில்லை என்று சிங்களத் தலைவர்கள் சொல்கிறார்கள். மேலும் இலங்கை  இறைமையில் வெளிநாடுகள் தலையிடக்கூடாது என்றும் கூறுகிறார்கள். யூகோஸ்லோவியாவின் யாப்பில் அமெரிக்கா படையெடுப்பதற்கு சரத்துக்கள் இருந்ததா என்பதையும், ஜனாதிபதி மிலோசவிக்கை சர்வதேச நீதி விசாரணைக்கு உட்படுத்துவற்கும் அந்த நாட்டின் யாப்பில் சரத்துக்கள் இருந்ததா என்ற கேள்வியை சிங்களத் தலைவர்களிடம் தமிழ்த் தலைவர்கள் எழுப்புவதில்லை. இனங்களைப் படுகொலை செய்வதற்கான அதிகாரத்திற்குப் பெயர் இறைமை என்றதாக இருக்க முடியாது.

        பங்களாதேஷில் இனப்படுகொலை புரிந்த பாகிஸ்தானின் இறைமையை மீறித்தான் 1971ஆம் ஆண்டு இந்தியா இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வெற்றி பெற்றது. இது யூகோஸ்லாவியாவின் மீதான நேட்டோ படையெடுப்பிற்கும் பொருந்தும். சைப்ரஸ் மீதான துருக்கிய படையெடுப்பிற்கும் பொருந்தும். உக்ரைனில் கிரிமிய மக்களை பாதுகாப்பதற்கான ரஷ்ய படையெடுப்பிற்கும் பொருந்தும்.

       முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இலங்கை அரசின் கழுத்தில் வீழுந்திருக்கும் ஒரு தூக்குக் கயிறு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த தூக்குக் கயிற்றை மனிதஉரிமைகள் ஆணையத்தின் முற்றத்தில்; நின்று தமிழ்த் தலைவர்களின் தோளில் தாவியவண்ணம் கழற்றுவதுதான் சிங்களத் தலைவர்களின் சர்வதேச அரசியல் வியூகமாகும். அதனைக் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோளில் ஏறி மிக வெற்றிகரமாகச் செய்துவருகிறார்கள்.

       இப்போது பிரச்சினை இதுதான்.  இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச அரசியலை முன்னெடுப்பது. இதற்கு பலம்பொருந்திய பெரிய நாட்டின் அல்லது நாடுகளின் ஆதரவை வென்றெடுப்பது.

       கொம்யூனிஸம், சோசலிஸம், புரட்சி, விடுதலை, ஜனநாயகம் என்று பேசிய எவரும் சீனாவிலோ, ரஷ்யாவிலோ, கியூபாவிலோ புகலிடம் பெறவில்லை. அகதிகளாய், உயிர்ப்பிச்சை பெறுவோராய், புகலிடம் தேடிகளாய் ஆசியாவில் இந்தியாவிடமும், மற்றும் மேற்குல நாடுகளான மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், வட அமெரிக்க நாடுகளுக்கும், ஆவுஸ்ரேலிய, நியூஸிலாந்திற்கும்தான் தமிழ் மக்கள் இதுவரை சென்று அடைக்கலம் புகுந்துள்ளனர். இயல்பான அடைக்கலம் புகுந்திருக்கும் இந்த வழித்தடந்தான்  ஈழத் தமிழரின் விடுதலைக்கான வெளியுறக் கொள்கைக்கான பாதையுமாகும்.

          இந்த வழித்தடத்தில் கற்களும், முட்களும், சகதிகளும் செறிந்துள்ளன என்பது உண்மைதான். ஆனாலும் இந்த கற்களையும், முட்களையும் தாண்டவல்ல அரசியல் வித்தையை, அரசியற் சாணக்கியத்தை ஊன்றுகோலாகக் கொண்டுதான் இப்பாதையால் பயணித்து வெற்றியடைய முடியும். இது ஒரு யதார்த்தம். இதைவிட வேறுவழி கிடையாது.

          எந்தொரு பெரிய நாடாயினும் தனக்கென நலன் இல்லாமல் உனக்கு உதவாது. நலன்களுக்கு இடையேயான பரஸ்பர பரிமாற்றத்திற்குப் பெயர்தான் சர்வதேச உறவுகள். முள்ளிவாய்க்காலின் பின்;னான பத்தாண்டுகளில் சர்வதேச ரீதியாகவும், உள்நாட்டு ரீதியாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் தோல்வியடைந்துவிட்டது என்பதை தன் முதுகில் எழுதி ஒட்டியுள்ளது. கூடவே சர்வதேச அரங்கிலும், உள்நாட்டு அரங்கிலும் இனப்படுகொலை அரசை பாதுகாப்பதற்கு தோள் கொடுத்தும் உள்ளது.

 
        இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக மாற்று அரசியல் பேசிய அரசியல் சக்திகள் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு பலமான கூட்டுத் தலைமைத்துவத்தை உருவாக்குவதில் இதுவரை வெற்றியீட்டவில்லை. இது தொடர்ந்தும் நீடிக்குமேயானால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் தமிழினம் என்ற ஒன்றைப்பற்றி பேசவே இடமில்லாதவாறு சிங்களமயமாக்கல் பரிபூரண வெற்றியடைந்துவிடும். அதற்கான இறுதிக் கட்டியமாக “மஹாவலி L வலயம்” காட்சியளிக்கிறது.  ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்கி தமிழ் மக்களின் பலத்தையும், வளத்தையும் ஒருங்கிணைத்து அதன் அடிப்படையில் வெளியுறவுக் கொள்கையைக் கையாளவல்ல சக்தியாக உருவெடுக்காது விட்டால் தமிழ் மக்களை மேலும் அழிவிற்கு உள்ளாக்கிய பழிக்குரிய தலைமுறையாக இது போய்விடும்.

-மு.திருநாவுக்கரசு

No comments

Powered by Blogger.