கரூர் கலெக்டரை கலங்க வைத்த ராக்கம்மாள் பாட்டி!! நெகிழ்ச்சியான சம்பவம்!!

ஐந்து காட்டன் சேலைகள், பழங்கள் சகிதமாக பார்க்கப் போன கரூர் மாவட்டக் கலெக்டரிடம், "நீ மகனா கெடச்சதே போதும்ய்யா... எனக்கு சீலை செனத்தியெல்லாம் வேண்டாம்"
என்று கண்ணீரோடு ராக்கம்மாள் பாட்டி மறுக்க, அதனை வற்புறுத்தி கலெக்டர் கொடுக்க  கரூரில் மீண்டும் ஒரு பாச நிகழ்வு நடந்தது.
கரூர் மாவட்டம், சின்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 81 வயது மூதாட்டிதான் ராக்கம்மாள். இரு பெண் குழந்தைகள் இருந்தும், ராக்கம்மாளை பாரமாக நினைத்து ஒதுக்கி வைத்தனர். ஓட்டை உடைசல் வீட்டில், தட்டுமுட்டுச் சாமான்களோடு, ரேஷன் அரிசி தயவில் உயிர் வளர்த்து வந்த ராக்கம்மாளுக்கு, அணுசரனையாக யாரும் இல்லை; ஆறுதல் சொல்லி தெம்பூட்ட ஆள் இல்லை. 'நோய் பாதி, தனிமை மீதி'யாக அல்லாடி வந்தார். இந்நிலையில்தான், சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு, அலுவல் ரீதியாக அந்த கிராமத்திற்குச் சென்ற கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் காதுகளுக்கு, அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலர் மூலமாக, ராக்கம்மாளின் சோகக் கதை வந்து சேர்ந்தது. ஒருகணம் மனம் கசிந்தவர் அப்போதே, 'ராக்கம்மாளுக்கு ஏதாவது செய்ய வேண்டும்' என்று மனதிற்குள் முடிவெடுத்து மறுநாளே ராக்கம்மாள் பாட்டி முன்பு போய் நின்றார். 

அவர் கையோடு வீட்டில் சமைத்த நாட்டுக்கோழி குழம்பு, வடைபாயசத்தோடு கூடிய சைவ சாப்பாட்டையும் எடுத்துச் சென்றார். முழங்காலில் முகம் புதைத்து, வேதனையில் வெம்பிக்கொண்டிருந்த ராக்கம்மாள் பாட்டியை சமாதானம் செய்த கலெக்டர், "வாயாற சாப்பிடு" என்று சொன்னார். அதற்கு ராக்கம்மாள் பாட்டி, "பெத்த பிள்ளைகளே என்னை சீண்டல. எனக்குச் சாப்பாடு போட நீ யார்.." என்று கேட்டார். அதற்கு அன்பழகன், "நான் உனக்கு பிள்ளை. யார் கேட்டாலும், 'என் மகன் கரூர் கலெக்டரா இருக்கான்...பேரு அன்பழகன்னு சொல்லு' " என்று ராக்கம்மாளை அரவணைத்தார். "பெத்த மகள்கள் என்னை கண்டுக்கலை. யார் பெத்த பிள்ளையோ, நீ என்னை தாயா மதிக்குற. இந்த தெம்புலயே இன்னும் பத்து வருஷம் இழுத்துப் புடிச்சு வாழ்ந்திருவேன் தம்பி' என்று கண்ணீ வடித்தார். அங்கேயே அதிகாரிகளிடம், ராக்கம்மாள் பாட்டிக்கு முதியோர் உதவித்தொகை உடனே கிடைக்க ஏற்பாடு செய்ய சொன்னார் ஆட்சியர் அன்பழகன்.

அதோடு, கையோடு வாங்கி போயிருந்த புடவைகளையும் கொடுத்து, "கலங்காம இரு. அடிக்கடி உன்னை வந்து பார்த்துக்கிறேன். என்னை பார்க்க பிரியப்பட்டா சொல்லிவிடு. உடனே ஓடி வந்துருறேன்" என்றபடி, பிரியாவிடை கொடுத்து வந்தார். இது நடந்தது 2018 ஏப்ரல் மாதம். ஒரு வருடம் முடிந்தநிலையில், 'ராக்கம்மாள் எப்படி இருக்கிறார்?' என்று பார்த்து வர, ஆட்சியர் அன்பழகன் புறப்பட்டார். முன்பைவிட இப்போது வயோதிகம் இன்னும் அதிகம் வாட்ட, முகத்தை சுருக்கிப் பார்த்த ராக்கம்மாள், உடனே அன்பழகனை அடையாளம் கண்டுக்கொண்டார்.

"வாப்பா அன்பழகா. இந்த தாய மறக்காம வந்து பார்க்க வந்திருக்கியே" என்றபடி, அவரது கைகளை பிடித்து அழைத்து போய், வீட்டுக்குள் அமரவைத்தார். இருவரும் பரஸ்பரம் அன்பாய் நலம் விசாரித்துக் கொண்டனர். தனது கையோடு கொண்டு போயிருந்த ஐந்து செட் காட்டன் புடவைகளையும், பழங்களையும் கொடுத்து, "வச்சுக்கோ.." என ஆட்சியர் வழங்க அதை வாங்க மறுத்த ராக்கம்மாள் பாட்டி, "நீ எனக்கு மகனா கெடச்சதே போதும்ய்யா. இந்த சீலை செனத்தியெல்லாம் எனக்கு வேண்டாம்" என்று மறுத்தார். ஆனால், வற்புறுத்தி அவரிடம் கொடுப்பதற்குள் ஆட்சியருக்கு போதும் போதும் என்றானது. "நீ எதுக்கும் கலங்காம தைரியமா இரு. நான் உன்னை அடிக்கடி வந்து பார்த்துக்குறேன். நான் உன்னோட கடைசிகாலம் வரைக்கும் உனக்கு மகனா இருப்பேன்" என்றபடி, ராக்கம்மாளிடம் இருந்து விடைபெற்றார் ஆட்சியர் அன்பழகன்.

இந்த சம்பவம் குறித்து ஆட்சியர் , "ஒரு வருடம் ஆகியும் அவங்க என்னை மறக்கவில்லை. நான் கொடுத்த புடவைகளை முதல்ல வேண்டாம்னுட்டாங்க. 'அவங்களுக்கு தேவை அன்பும், ஆதரவும்தான்'ங்கிறது புரிஞ்சது. அது கிடைக்காமதான் அவங்க ஏங்கி கிடக்குறாங்க. நான் கடந்த வருஷம் அவங்க வீட்டுக்கு போனதுக்கு காரணமே, இந்த சம்பவத்தைப் பார்த்துட்டு, அவங்க பிள்ளைங்க அவங்களை அரவணைப்பாங்கிற நினப்புதான். ஆனா, இன்னமும் அவங்க ராக்கம்மாளை தள்ளியே வச்சுருக்காங்க. பிள்ளைங்களுக்காக காலம் முழுக்க ஓடியாடிய உடம்பு களைச்சுக் கிடக்கு. 'பிள்ளைங்க இப்படி தனித்தீவா விட்டுட்டாங்களே'னு அவங்க மனமும் ரணமாகி கிடக்கு. அவங்களுக்கு தேவை மனம் சந்தோஷப்படுற மாதிரியான நாலு நல்ல வார்த்தைகள்தான்; ஆறுதல் சொற்கள் தான். அதை கொடுக்கதான், இப்போ போனேன். நான் எங்க இருந்தாலும், அவங்களை என் கண் பார்வையிலேயே வச்சுருப்பேன். என்னால முடிஞ்ச சின்ன உதவி இதுதான்" என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.