விருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020!

விகாரி வருட ராசிபலன்கள்14.4.2019 முதல் 13.4.2020 வரை
(விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை)
பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ,ந,நி,நே,நோ,ய,யி,யு உள்ளவர்களுக்கு)

வெற்றிக்கொடி பறக்கும்!
விருச்சிக ராசி நேயர்களே,

விகாரி வருடம் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் பொழுதே தனாதிபதி குரு தன ஸ்தானத்திலும், 9-ம் இடத்திற்கு அதிபதியான சந்திரன் தன் சொந்த வீடான 9-ம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் ஒளிமயமான எதிர்காலம் அமைய உத்திரவாதம் கிடைக்கப் போகின்றது. வியக்கும் தகவல்களும், வெற்றி வாய்ப்புகளும் வீடு தேடி வரும் விதத்தில் கிரகநிலைகள் சாதகமாக விளங்குகின்றன.தைரியகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் உங்கள் ராசியைப் பார்க்கும் விதத்தில் இந்த ஆண்டு தொடங்குகின்றது. தொழில் ஸ்தானாதிபதி சூரியன் உச்சம் பெற்றிருக்கின்றார். வாக்கு, தனம், குடும்பம் என்று வர்ணிக்கப்படும் இடமான 2-ம் இடத்தில் மாபெரும் கிரகங்களாக விளங்கும் குரு, சனி, கேது ஆகிய மூன்றும் சஞ்சரிக்கின்றார்கள். எனவே தொழில் வளம் மிகச்சிறப்பாக இருக்கும். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகவே கிடைக்கும்.ஏழரைச் சனியின் 2-வது சுற்று நடப்பவர்கள் பணமழையிலும், பாச மழையிலும் நனைவார்கள். முதல் சுற்று நடப்பவர்கள் மற்றும் மூன்றாவது சுற்று நடப்பவர்கள் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.ஆண்டின் தொடக்கத்தில் சுக ஸ்தானத்தில் சுக்ரன் இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அகலும். அதிநவீன வாகனங்களை வாங்கி மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். பூமி வாங்குவது, வீடு கட்டுவது. கட்டிய வீட்டை மராமத்து செய்வது வீட்டை விரிவுபடுத்துவது, புதிய கட்டிடத்திற்கு தொழிலை மாற்றுவது, நடக்கும் தொழில் பங்குதாரர்களை மாற்றம் செய்வது போன்றவற்றை பரிசீலனை செய்து செயல்படுத்துவீர்கள்.சகடயோகம் இருப்பதால் வரவும் செலவும் சமமாக இருக்குமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். தன ஸ்தானம் மிகமிக வலுவாக உள்ளது. எனவே உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். தொழில் புரிபவர்கள் பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைவர். அரசியல் செல்வாக்கு மிக்கவர்களின் தொடர்பால் பொதுவாழ்வில் ஈர்க்கப்பட்டும் அதன் மூலமும் புகழ்குவிக்கப் போகிறீர்கள்.தனுசு குருவின் சஞ்சாரம்
(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)இக்காலத்தில் குருவின் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. ‘ஆறினைக் குருதான் பார்த்தால் அடைந்திடும் கடன்கள் யாவும்’ என்பார்கள். எனவே கடன்சுமை குறையும். கவலைகள் தீரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்பதவிகள் கிடைக்கும். உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியந்து, நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்கலாம். எதிரிகள் விலகுவர்.ஆரோக்கியத் தொல்லை அகல மாற்று மருத்துவம் உங்களுக்கு கைகொடுக்கும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு தொண்டர்களின் ஒத்துழைப்பால் பணிகளைச் சிறப்பாக முடித்து புதிய பதவிகளைப்பெறும் சூழ்நிலை உண்டு.குருவின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் இழப்புகளை ஈடுசெய்யும் விதத்தில் புதிய வாய்ப்புகள் அடுக்கடுக்காக வந்து சேரும். சென்ற ஆண்டில் தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். முன்னோர்கள் செய்த திருப்பணிகளை முறையாகச் செய்யவேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். மூத்த சகோதரத்தின் வழியே வந்த பகைமாறும்.குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் இத்தனை நாட்கள் நீங்கள் பாடுபட்டதற்கு ஏற்ற பலன் இப் பொழுது கிடைக்கப் போகின்றது. ‘பத்தினை குருதான் பார்த்தால் முத்தான தொழில்கள் வாய்க்கும், முன்னேற்றம் அதிகரிக்கும்’ என்று முன்னோர்கள் சொல்வர்.எனவே சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தொழில் வளம் சிறப்பாக இருக்கும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு புதிய தொழில் ஒன்றைத் தொடங்க முன்வருவீர்கள். வாடகை இடத்தில் தொழில் நடைபெறுமேயானால் அந்த இடத்தை விலைக்கு வாங்கலாமா? என்று ஒருசிலர் யோசிப்பர். இந்த யோசனைக்கு இப்பொழுது வெற்றி கிடைக்கும்.வெளிநாட்டில் இருந்துகூட ஒருசிலருக்கு அழைப்புகள் வரலாம். ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் சிறப்பாக அமையும். பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு குறுகிய காலத்திற்குள் பெரிய லாபம் வரலாம்.உத்தியோக வாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும்.

அதே நேரத்தில்அரசு பணிக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு அழைப்புகள் வந்து ஆச்சரியப்பட வைக்கும். தொட்ட காரியங்கள் வெற்றி பெற வைக்கும் நேரமிது. தொடர்புகள் பல வழிகளிலும் வந்து சேரும். வாழ்க்கைத் துணைக்கும் வேலை கிடைக்கும். வாரிசுகளுக்கும் வேலை கிடைக்கும். எனவே பொருளாதார நிலை உயர்ந்து புதிய திட்டங்கள் தீட்ட முன்வருவீர்கள்.


விருச்சிக குருவின் சஞ்சாரம்(18.5.2019 முதல் 28.10.2019 வரை)

இக்காலத்தில் குருபகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும், பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்கு உள்ளேயும் உலா வருகின்றார். இதன் பயனாக மிகச்சிறந்த மாற்றங்கள் உங்களுக்கு வந்துசேரப்போகின்றது. ஜென்ம குருவின் ஆதிக்ககாலத்தில் சாதனைகள் நிகழ்த்தி சரித்திரத்தில் இடம்பெறப் போகிறீர்கள். அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.தன பஞ்சமாதிபதியாக குரு விளங்குவதால் அவர் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் பொழுது பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். மனதளவில் நினைத்தவற்றை மறு கணமே செய்து முடிப்பீர்கள். ஆற்றல் பளிச்சிடும். அருகில் இருப்பவர்களுக்குச் சொல்லும் ஆலோசனைகள் அனைத்தும் வெற்றிபெற்று உங்களைப் போற்றிக் கொண்டாடுவர்.இறைநம்பிக்கையால் எதையும் சாதிக்கும் ஆற்றல் உங்களுக்கு வந்து சேரும். கல்யாணக் கனவுகள் நனவாகும். வசதி வாய்ப்போடு கூடிய வரன்கள் வந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே வாரிசுகளின் வளர்ச்சி, பூர்வீக சொத்துக் களால் லாபம், தாய்வழி உறவு, புத்தி சாதுர்யம், முன்னோர் சொத்துக் களால் ஆதாயம், சுற்றமும் நட்பும் உதவுதல், விவாக வாழ்வில் மகிழ்ச்சி, வாகன யோகம், கடல் கடந்து செல்லும் வாய்ப்பு போன்றவற்றில் எல்லாம் நல்ல வாய்ப்புகளையும், வளர்ச்சியையும் இந்த குருபார்வை கொடுக்கப் போகின்றது.உத்தியோகத்தில் உயர்பதவிகள், சம்பள உயர்வு இப்பொழுது தானாக வந்து சேரும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.சனியின் சஞ்சார நிலை

ஆண்டு முழுவதும் சனி பகவான் 2-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். ஏழரைச்சனியில் பாதச்சனியாக உலா வருகின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகின்றார். எனவே சனியின் பார்வை 4, 8, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே தாய்வழி ஆதரவு தக்க விதத்தில் கிடைக்கும்.ராசிப்படி சனி பகவான் சகாய ஸ்தானாதிபதியாவார். எனவே உங்களைப் பொறுத்தவரை சனியின் பார்வை சகாயங்களையும், நன்மைகளையுமே கொடுக்கும். எனவே ஆடை, ஆபரண சோக்கை, தங்கம், வெள்ளி போன்றவைகள் வாங்கும் யோகம், சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும் நிலை, அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள், கல்வி முன்னேற்றம் ஆகியவை ஏற்படும் நேரமிது. மேலும் வெளிநாட்டு முயற்சிகள் கூட அனுகூலம் தரலாம். சனியின் வக்ர காலத்தில் உடன்பிறப்புகளை கொஞ்சம் அனுசரித்துச்செல்வது நல்லது.ராகு-கேதுக்களின் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் கேதுவும், 8-ம் இடத்தில் ராகுவும் இருக்கின்றார்கள். சுயபலம் அற்ற கிரகம் என்று வர்ணிக்கப்படும் அந்தப் பாம்பு கிரகங்கள் இருக்கும் ஸ்தானத்திற்கு அதிபதியைப் பொறுத்தே பலன்களை வாரிவழங்கும். அந்த அடிப்படையில் கேது, குரு வீட்டில் இருப்பது யோகம்தான். மேலும் குருவோடும் இணைந்தும் சஞ்சரிக்கின்றார். குரு பார்த்தாலும் கோடி நன்மை, சேர்ந்தாலும் கோடி நன்மை, என்பர்.குருபார்வை ராகுவின் மீது பதிகின்றது. எனவே இந்த ராகு கேதுக்களின் ஆதிக்கம் நன்மை தரும் விதத்திலேயே இருக்கின்றது. தொழிலில் முன்னேற்றம், பணவரவில் திருப்தி, குடும்பத்தில் குதூகலம், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து போன்றவைகள் கிடைக்கும்.சனி-செவ்வாய் பார்வைக்காலம்(14.4.2019 முதல் 23.6.2019 வரை)

இக்காலத்தில் கொஞ்சம் கவனமுடன் செயல்பட வேண்டும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. விரயங்கள் கூடுதலாக இருக்கும். பயணங்கள் அதிகரிக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அங்காரகனுக்கும், சனிக்கும் உரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டுவந்தால் பற்றாக்குறை அகலும்.பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்

விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப்புத்தாண்டு பொன்கொழிக்கும் ஆண்டாக அமையப்போகின்றது. மண், பூமி சேர்க்கை, மக்கட்செல்வங்களின் கல்யாண வாய்ப்புகள், பொன், பொருள்களில் முதலீடு செய்யும் யோகம், பொருளாதார வளர்ச்சி போன்றவைகள் உருவாகும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்பட்டு உறவினர் களின் பாராட்டுக்களையும் பெறுமளவிற்கு வாழ்க்கையை அமைத்துக் கொள்வர். கடக ராசியில் ஆண்டு பிறப்பதால் பெற்றோர்களின் ஆதரவு பெருமைப்படத்தக்கதாக அமையும். உற்றார், உறவினர்களும், உடன்பிறப்புகளும் உங்கள் முன்னேற்றத்தைக்கண்டு ஆச்சரியப் படுவர். புகுந்த வீட்டிற்கும், பிறந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீர்கள்.பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வும் தானாகவே வந்து சேரும். வீடுகட்ட, வாகனம் வாங்க எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகள் அனைத்திலும் சாதகமானநிலை நிலவும். குலதெய்வ வழிபாடும். தெசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும் திருப்தியான வாழ்க்கையை உங்களுக்கு அமைத்துக் கொடுக்கும்.வருடம் முழுவதும் வசந்தகாலமாக வழிபாடு

செல்வ வளம் பெருக வெள்ளிக்கிழமை தோறும் விநாயப் பெருமான் வழிபாடும், வியாழக் கிழமை அன்று குரு வழிபாடும் செய்வது நல்லது. ராகு-கேதுக் களுக்குரிய நாகசாந்திப் பரிகாரங்களைச் செய்வதோடு, நாக கவசமும் பாடி வழிபட்டால் நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.