லஞ்சம் பெற்ற வழக்கில்போலீஸ் உதவி கமிஷனர் கைது!!

சென்னை அசோக்நகர் போலீஸ் உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜை விஜிலென்ஸ் போலீஸார் இன்று கைது செய்தனர். மசாஜ் சென்டர் விவகாரத்தில் அவர் சிக்கியதாக விஜிலென்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


சென்னை அசோக்நகர் உதவி கமிஷனர் அலுவலகத்தைச் சுற்றி விஜிலென்ஸ் போலீஸாரின் நடமாட்டம் இன்று காலை முதலே இருந்தது. பிற்பகலில் உதவி கமிஷனர் அறைக்கு ஒருவர் சென்றார். அவரிடம் உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜ் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் அதிரடியாக அந்த அறைக்குள் டி.எஸ்.பி குமரகுருபரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நுழைந்தனர். அவர்கள் வின்சென்ட் ஜெயராஜிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து மசாஜ் சென்டரை நடத்துவதற்கு 50,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறி அவரைக் கைது செய்தனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் கேட்டதற்கு, ``அசோக்நகர் 5வது அவென்யூவில் மசாஜ் சென்டரை நடத்திவருபவர் செந்தில்குமரன். இந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாகக் கூறி போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதுதொடர்பாக செந்தில்குமரனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து, செந்தில்குமரனிடம் காக்கிகள் பேரம் பேசியுள்ளனர். அப்போது, உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜின் பெயரைக் குறிப்பிட்ட காக்கிகள் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் எஃப்.ஐ.ஆர் போட்டு உள்ளே தள்ளிவிடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். இதனால் செந்தில்குமரன் அதிர்ச்சியடைந்தார்.

இந்தத் தகவலை எங்களிடம் அவர் புகாராக எங்களிடம் கூறினார். உடனே லஞ்சம் கேட்கும் காக்கிகளை கையும் களவுமாகப் பிடிக்க திட்டமிட்டோம். அதன்படி காக்கிகள் கேட்ட பணத்தைக் கொடுக்க செந்தில்குமரன் சம்மதம் தெரிவித்தார். அதன்படி நாங்கள் கொடுத்தனுப்பிய பணத்துடன் செந்தில்குமரன்  உதவி கமிஷனர் அறைக்குள் அவர் சென்றார். அங்கு, அவர் பணத்தை உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜிடம் கொடுத்தபோது நாங்கள் அவரைப் பிடித்தோம். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.

செந்தில்குமரன் கொடுத்த புகாரில், ``அசோக்நகரில் செயல்படும்  ஒரு கிளப்பின் தலைவராக உள்ளேன். அதற்குரிய அனுமதியை பெற்றுள்ளேன். கிளப்பில் ஒரு பகுதியில் மசாஜ் சென்டர் (ஸ்பா) செயல்படுகிறது. அதை ரூபா என்பவர் நடத்திவந்தார். இந்தநிலையில் உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜ், மாதந்தோறும் 50,000 ரூபாய் மாமூலாகக் கேட்டு தொந்தரவு செய்தார். ஆனால், நாங்கள் பணம் கொடுக்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் உதவி கமிஷனர் அனுப்பியதாகப் போலீஸ் சீருடையில் எஸ்.ஐ ரத்னகுமார் தலைமையில் இரண்டு பேர் வந்தனர். அவர்கள் `ஸ்பாவை (மசாஜ் சென்டர்) மூடச்சொல்லி ஏசி சார் சொன்னார். மீறி நடத்தினால் கேஸ் போட்டு உள்ளே தள்ளிவிடுவோம்' என்று கூறினர். அப்போது நான் ஸ்பா நடத்துவதற்கு உரிமை உள்ளது என்று தெரிவித்தேன். உடனே அவர்கள் ஏ.சி சாரை சந்திக்கும்படி என்னிடம் கூறினர். அதன்படி நானும் ஏ.சி வின்சென்ட் ஜெயராஜைச் சந்தித்தேன். அவர், 50,000 ரூபாய் கேட்டார். அப்போது நான், அந்தளவுக்கு பிசினஸ் நடக்கவில்லை என்று கூறினேன். உடனே அவர் `நீ ஒரு பிசினஸ் மேன். எப்படியாவது தொழில் செய்து எனக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்தாக வேண்டும்' என்று கூறினார். எனவே, வின்சென்ட் ஜெயராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜிலென்ஸ் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், உதவி கமிஷனர் கைது விவகாரத்தில் மசாஜ் சென்டருக்குச் சென்ற எஸ்.ஐ மற்றும் போலீஸாரிடம் விசாரணை நடத்திவருகிறோம். விசாரணை முடிவில்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியவரும் என்றார்.

உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜ் தரப்பில் பேசியவர்கள், ``திட்டமிட்டு சிக்க வைத்துள்ளனர். லஞ்சம் வாங்குபவர்கள் யாராவது இப்படியா வெளிப்படையாக வாங்குவார்கள். வேறு ஒரு அதிகாரிக்கு வீசப்பட்ட வலையில் உதவி கமிஷனர் சிக்கிவிட்டார்" என்று கூறினர். லஞ்சம் கேட்ட வழக்கில் போலீஸ் உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜ் கைதான சம்பவம் காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.