சீனாவின் 'விபரீத' பரிசோதனை !

                                                                 Photos: Reuters

இந்த ஆராய்ச்சி தவறானது என்று ஒரு குழுவும், அறிவியலில் இதுவொரு முக்கியமான ஆய்வு என்றும் இரு வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தப் பரிசோதனை பொறுப்பற்றது. மரபணு மாற்றத் தொழில்நுட்பத்துக்கான நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மனித வரலாற்றில் நவீன கால அறிவியல் கொண்டுவந்துள்ள முக்கியமான ஆராய்ச்சிகளுள் ஒன்று மரபணு ஆராய்ச்சி. நமது மூதாதையர்களைப் புரிந்துகொள்ள, மனிதனின் உயிர்க்கூறு பண்புகளைத் தெரிந்துகொள்ள, நோய்களை எதிர்கொள்ள எனப் பல்வேறு வகைகளில் இந்த மரபணு ஆராய்ச்சி நமக்குக் கைகொடுத்துவருகிறது. மனிதர்களின் இயல்பையே மாற்றும் அளவுக்கு வல்லமை வாய்ந்த ஆராய்ச்சி இது என்பதால், எப்போதும் இதுகுறித்த சர்ச்சைகளும் வந்துகொண்டே இருக்கும். ஒருபக்கம் விஞ்ஞானிகள் ஆதரிப்பதும் இன்னொருபக்கம் எதிர்ப்பதுமாக அந்த விவாதங்கள் இருக்கும். தற்போது மீண்டும் அப்படி ஒரு ஆராய்ச்சி உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

சீன விஞ்ஞானிகள், மனித மூளையின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய மரபணுக்களைக் குரங்குகளில் செலுத்தி சோதனை செய்திருக்கிறார்கள். இதன்மூலம் மனித மூளையில் ஏற்படும் வளர்ச்சிகளைப் போலவே குரங்குகளின் மூளையும் வளர்ச்சியடையும் எனத் தெரிவிக்கிறார்கள். அந்நாட்டின் தேசிய அறிவியல் மதிப்பாய்வு நிறுவனத்திடம், குரங்குகளில் மனித மரபணு குறித்த ஆய்வுகளைச் சீன விஞ்ஞானிகள் சமர்ப்பித்திருக்கிறார்கள். அதில் எவ்வாறு குரங்குகளில் மனித மரபணுக்களைச் செலுத்தினார்கள், அப்படி மனித மரபணுக்கள் செலுத்தப்பட்ட பிறகு, அந்தக் குரங்குகள் இப்போது இருக்கும் நிலை என அனைத்தையும் தெரிவித்துள்ளனர்.

மனித மூளையிலிருக்கும் மரபணுவான மைக்ரோசிபாலின் (microcephalin) MCPH1-ஐ சீன விஞ்ஞானிகள் 11 ரீசஸ் குரங்களுக்குச் செலுத்தியுள்ளனர். ரீசஸ் குரங்குகள் கிட்டத்தட்ட மனிதர்களைப் போன்று செயல்படக்கூடியவை என்பதால் அந்தக் குரங்குகளுக்குச் செலுத்தியுள்ளனர். இதன்மூலம் 'மனிதன் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தான்' என்பதைக் கண்டறியலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மரபணு மாற்ற பரிசோதனை மேற்கொள்ளப்படும் குரங்குகள்



குரங்குகள் கருப்பையில் கருவாக இருக்கும்போதே மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு, குட்டிகள் உருவாக்கும் வேலைகள் தொடங்கப்பட்டன. அவ்வளவு ஏன், குரங்குகள் கருத்தரிப்பதிலிருந்தே அவர்களின் ஆய்வு தொடங்கிவிடுகிறது. பெண் குரங்குகளின் கருமுட்டைகளுக்குள் இந்த MCPH1 என்ற ஜீனை ஒரு வைரஸ் மூலம் உள்ளே செலுத்துகிறார்கள். இது அந்த ஜீனை குரங்குகளில் மூளைக்குக் கொண்டு செல்கிறது. அதன் பிறகு தாய்க் குரங்குகளிடமிருந்து அறுவைசிகிச்சை மூலம் பிறக்க வைக்கும் குரங்குக் குட்டிகள் இன்குபேட்டரில் வைத்து வளர்க்கப்பட்டன. வளர்ந்த சில நாள்களுக்குப் பிறகு ஒரு சில விஷயங்களில் மனிதர்களைப் போன்றே குரங்குகள் செயல்படத் தொடங்கியுள்ளன. மூளை வளர்ச்சி, நினைவாற்றல், முடிவு எடுக்கும் திறன் போன்றவை மற்ற குரங்குகளைக் காட்டிலும் அதிகமாக இருந்தன. ஜீன் செலுத்தப்பட்டவுடன் 11 குரங்குகளில் ஆறு குரங்குகள் இறந்திருக்கின்றன. மீதமுள்ள ஐந்து குரங்குகளை வைத்து ஆராய்ச்சி நடத்தியுள்ளனர்.

இந்த மரபணுவைக் குரங்குகளுக்குச் செலுத்திய பின்னர், குரங்குகளின் மூளை வளர்ச்சி அடைவது அவற்றின் இயல்பான வேகத்தில் இல்லாமல், மனிதனின் மூளை வளர்ச்சிபோல நேரம் எடுத்துக்கொள்கின்றன என்பதும் சோதனை மூலம் தெரியவந்துள்ளது. மூளை வளர்ச்சியைக் கண்டறிய குரங்குகளுக்கு MRI ஸ்கேனும் செய்யப்பட்டுள்ளது. குரங்குகளின் மரபணுக்களில் மனித மரபணுக்களைச் செலுத்தி அவற்றின் தன்மையையே மாற்றியமைத்துள்ளார்கள் சீன ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆய்வு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், குரங்குகளுக்கு மனித மூளையின் மரபணுவைச் செலுத்தியது தொடர்பாகப் பல ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கண்டனங்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த ஆராய்ச்சி தவறானது என்று ஒரு குழுவும், அறிவியலில் இதுவொரு முக்கியமான ஆய்வு என்றும் இரு வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்தப் பரிசோதனை பொறுப்பற்றது. மரபணு மாற்றத் தொழில்நுட்பத்துக்கான நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆச்சர்யம் என்னவென்றால் அந்தச் சீன விஞ்ஞானிகள் குழுவில் பணியாற்றிய ஓர் ஆராய்ச்சியாளரே அதைத் தவறு என்று விமர்சனம் செய்திருக்கிறார். ஆராய்ச்சியில் இருந்து பின்வாங்க முடிவெடுத்துள்ளார்.

மரபணு மாற்றம் என்பது என்ன?

ஓர் உயிரினத்தின் மரபணுவில் உள்ள டி.என்.ஏ-வை நீக்குதல், சேர்த்தல் மற்றும் அழித்தல் என்று மரபணு அமைப்பையே மாற்றியமைப்பதை 'மரபணு மாற்றம்' என்று அழைக்கிறது அறிவியல். மனிதர்களுக்கு இருக்கும் நோய்களை விரட்டவும், நோய்களில் இருந்து மனிதர்களைப் பாதுகாக்கவும் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இது அசாத்திய திறன்களைக் கொண்ட சூப்பர்ஹீரோ மனிதர்களை உருவாக்கப் பயன்படும் என்பதும் சிலரது கருத்தோட்டமாக உள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் அதிகமான மோப்பத் திறனும், கூர்மையான இரவுப் பார்வையும் உருவாக்க முடியும். மரபணு மாற்றத்துக்காக உலக ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச விதிகளை வகுத்திருக்கிறார்கள். உலக அளவில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் இந்த விதிகளைப் பின்பற்றித்தான் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். ஆனால், உலக அளவில் அபாயகரமான ஆராய்ச்சிகளில் ஒன்றாக மரபணு மாற்ற ஆய்வு பார்க்கப்படுகிறது. மேலும், இது மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கிச் சமத்துவமின்மைக்கும் வழிவகுக்கும்.

இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவது விலங்குகளை அழிவுப்பாதையை நோக்கி அழைத்துச்செல்லும். இது விலங்குகள் துன்புறுத்தலை மேலும் அதிகரிக்கவே செய்யும். இந்தச் சோதனைகள் ஒருவிதமான ஆர்வத்தால் மட்டுமே செய்யப்படுகின்றன. உண்மையில் விலங்குகள் இயற்கையான வாழ்விடங்களில் மட்டுமே இருக்க வேண்டும். இப்போது உருவாக்கியிருக்கும் குரங்குகள் எங்கு தங்கும், எப்படிச் சிந்திக்கும், என்ன செய்யும் என்பது போன்ற கேள்விகளுக்கு விடையில்லை. ஒருவேளை இந்தக் குரங்குகளுக்கு மனிதர்களைப் போன்ற மூளை வளர்ச்சி ஏற்பட்டால் அவையும் மனிதர்களைப் போலவே வாழ முடிவுசெய்தால் அவை வாழ்வதற்கான இடம் இங்கு ஏது? மனிதர்களின் எண்ணிக்கையே சராசரி அளவைவிட அதிகமாகிவிட்ட நிலையில் குரங்குகளையும் மனிதர்களைப் போல் மாற்றிக்கொண்டிருந்தால் என்ன மாதிரியான விளைவுகளை நாம் சந்திப்போம் என்று யூகங்களின் அடிப்படையிலாவது ஏதேனும் திட்டமிடுதல் இருக்கின்றதா. இவையெல்லாம் நாளையே நடக்கக்கூடியதா என்றால், இல்லைதான். ஆனால், எதிர்காலம் நாம் யூகிப்பதைவிடவும் ஆபத்தானதாக இருந்தால் என்ன செய்வது என்ற அச்சமும் எழாமல் இல்லை.

ஹாலிவுட்டில் 'தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்' என்றொரு திரைப்படம் உண்டு. அதில் இதே போன்றதொரு ஆராய்ச்சியால் குரங்குகள் தனி நாகரிக சமுதாயமாக மாறி மனிதர்களுக்கும் குரங்குகளுக்கும் வாழ்விடச் சண்டைகள் நிகழத் தொடங்கி அதுவே போர் வரைக்கும் இட்டுச்செல்லும். ஒருவேளை அறிவு வளர்ச்சியடைந்த குரங்குகள் மனிதர்களைத் தாக்கினால் என்ன ஆகும்? "உடனே இந்த ஆராய்ச்சியை நிறுத்த வேண்டும். சீன ஆராய்ச்சியாளர்கள் உயிரினங்களையும் அவற்றின் தன்மையையும் இன்னமும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அவர்களின் இதுபோன்ற ஆய்வுகள் நமக்குக் காட்டுகின்றன" என்று சமூக ஆர்வலர்களும் ஆராய்ச்சியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.