தூத்துக்குடி: கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை!

தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி போட்டியிடுகிறார். இதற்காகக் கடந்த ஒருமாத காலமாக தூத்துக்குடி குறிஞ்சி நகரில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து கனிமொழி பிரச்சாரம் செய்து வந்தார். இன்று மாலை 6 மணியோடு பிரச்சாரம் முடிந்துவிட்ட நிலையில் தூத்துக்குடி இல்லத்தில் கனிமொழி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் அங்குள்ள அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று இரவு 7.50 மணி முதல் இந்த சோதனை நடந்து வருகிறது. வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்து ஒரு மணி நேரம் கூட ஆகாத நிலையில், கனிமொழி வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர். வருமான வரித்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி உட்பட 4 பேர் கொண்ட குழு இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வீட்டுக்கு வெளியில் நிற்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரிகள் இரண்டு வாகனத்தில் சென்றுள்ளனர். வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனை நடந்துவரும் அப்பகுதியில் திமுகவினர் திரண்டு வருகின்றனர். திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் அங்கு சென்றுள்ளார். ஆனால் அதிகாரிகள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், “ எங்கு 2,000 ரூபாய் கொடுக்கிறார்கள், எங்கு 500 ரூபாய் கொடுக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஓபிஎஸ் மகன் போட்டியிடும் தேனியில் 1,000 ரூபாய் கொடுக்கிறார்கள் என்று வீடியோவுடன் ஆதாரம் வெளியாகியிருக்கிறது. ஆனால் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் இல்லை. அமைச்சர் வேலுமணியின் பினாமியாக இருக்கிற காண்ட்ராக்டர் சபரீசன் வீட்டில் நடந்த மிகப்பெரிய ரெய்டு பற்றி எந்தத் தகவலும் வெளியில் வரவில்லை. திமுக மீது களங்கம் ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது ஜனநாயகப் படுகொலை. தற்போது தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். யார் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் ஊடகங்களின் வாயிலாகப் பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டு வைக்கிறேன். தமிழிசை சவுந்தரராஜன் வீட்டில் கோடி கோடியாகப் பணம் வைத்துள்ளார்கள். அங்கு ஏன் ரெய்டு நடக்கவில்லை? சிபிஐ, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, நீதி மன்றம் என்ற அந்த வரிசையில் தற்போது தேர்தல் ஆணையத்தையும் மோடி அரசு கைக்குள் வைத்துக்கொண்டு தேர்தலை குலைக்க நினைக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.