விளம்பரங்களில் நயன்தாரா: பின்னணியில் யார்?

டாடா குழுமத்தைத் சேர்ந்த ஸ்கை விளம்பரத்தைத் தொடர்ந்து இப்போது டாடா குழுமத்தைச் சேர்ந்த ‘தனிஷ்க்’ நகைக்கடை விளம்பரத் தூதராக நடிகை நயன்தாரா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டைட்டன் ஜூவல்லரி (சந்தைப்படுத்துதல் பிரிவு) உதவி துணைத்தலைவர் தீபிகா திவாரி, “தனிஷ்க் நகைக்கடை விளம்பர தூதராக நடிகை நயன்தாரா நியமிக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய சந்தைகளில் எங்களது புதிய விளம்பரத் தூதராக அவருடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். நயன்தாராவின் வருகை எங்களின் பயணத்தை மேலும் சிறப்பாக்குவதுடன், எங்கள் பிராண்டுக்கு மிகவும் பொருத்தமான, நேர்த்தியான வசீகரத்தையும், ஆரவார வரவேற்பையும் பெற உதவும் என நம்புகிறோம். அதேவேளை பல்வேறு சமூகங்களுக்கான பிரத்தியேக கலெக்‌ஷன்களுடன் திருமண கலெக்‌ஷனான ‘ரிவா’ நகைகளும் தனிஷ்க்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டது குறித்து நயன்தாரா, “தனிஷ்க் மக்கள் மனதில் இடம்பிடித்த பிராண்ட் ஆகும். அந்த பிராண்டின் ஒரு அங்கமாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன். இங்குள்ள நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட நகைகள் என்னை ஈர்த்துள்ளன. ‘தனிஷ்க்’ உடனான எனது இந்த உறவு என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது” என்றார். புதிய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் நயன்தாரா, ஒப்பந்தப்படி அட்சய திருதியை முதல் ‘தனிஷ்க்’ நகைக்கடையின் அனைத்து விளம்பரங்கள், பிரச்சாரங்கள், பத்திரிகை விளம்பரங்கள், வெளி விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் இடம்பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா வளர்ந்து வந்த நேரத்தில் பல விளம்பரங்களில் நடிக்க அழைப்பு வந்தது. அப்போதெல்லாம், திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே என் வேலை, விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்தார். திரையில் மட்டும்தான் நயன்தாராவைப் பார்க்க முடியும் என்பது அவருக்குப் பெரிய மதிப்பைத் தந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதில் மாற்றம் வந்திருக்கிறது. பெரும் தொகை கிடைக்கிறது என்றால் விளம்பரங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறாராம் நயன்தாரா. அதற்குக் காரணம் அவருடைய நண்பர் விக்னேஷ்சிவன்தான் என்கிறார்கள்.

No comments

Powered by Blogger.