தேர்தல் ஆணையம் ஒரு நாடகக் கம்பெனி: சீமான்!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “சுயேச்சைகளுக்கு வழங்கப்பட்ட சின்னங்கள்கூடத் தெளிவாக பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் எங்கள் சின்னம் தெளிவாகப் பொறிக்கப்படவில்லை. நாங்கள் வளர்ந்துவிடக் கூடாது, வெல்லக் கூடாது, புதிய ஆற்றலாக உருவாகிவிடக் கூடாது என்பதற்காகவே இப்படிச் செய்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையமே ஒரு ஏமாற்றுதான். தேர்தல் ஆணையம் ஒரு நாடகக் கம்பெனியாக செயல்படுகிறது. பறக்கும் படைகளை நியமித்துப் பொதுமக்களின் பணத்தைப் பறிக்கிறார்களே தவிர ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்படுகிறதா இல்லையா? பணப் பட்டுவாடா பற்றிய செய்திகள் ஊடகங்களில் வருகின்றன. அதை ஏன் தடுக்கவில்லை? ஓட்டுக்குப் பணம் கொடுத்தாலும், வாங்கினாலும் ஓராண்டுச் சிறை என எழுதி வைத்திருக்கிறார்கள். இதுவரை சிறைக்குச் சென்றவர்கள் எத்தனை பேர்? பணப் பட்டுவாடா நடப்பதால் அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் தேர்தலை நிறுத்தினார்கள். பணம் கொடுத்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கோடி கோடியாகச் செலவு செய்து விளம்பரப் பதாகைகளை வைக்கிறார்கள். அத்துடன் உங்களது சமூகப் பொறுப்பு முடிந்துவிட்டதா? வாக்குக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் தேர்தலில் நிற்க பத்து ஆண்டுகள் தடை எனத் தகுதி நீக்கம் செய்யுங்கள். அப்போதுதான் பணம் கொடுக்க பயப்படுவார்கள். கல்வி, மருத்துவம், குடிநீர், போக்குவரத்து என எல்லாவற்றையும் தனியார் முதலாளிகள்தான் முறையாக செய்வார்கள் என அரசு நம்பிவிட்டால் தேர்தல் எதற்கு? இந்தியாவையே அம்பானிக்கும் அதானிக்கும் டெண்டர் விடலாமே. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் வெளிப்படையாக மக்கள் பணம் பெற்றுச் செல்கின்றனர். தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன? பல தேசிய இனக்குழுக்களின் ஒன்றியம்தான் இந்தியா. இந்தியாவிற்கு தேசியக் கட்சிகள் எதற்கு? தேசிய கட்சியாக இருக்கும் காங்கிரஸ், கர்நாடகத்தில் மாநிலக் கட்சியாக மாறிவிடுகிறது. தமிழகத்துக்குத் தண்ணீர் கிடையாது என பாஜகவும் காங்கிரஸும் கூறுகின்றன. அவர்கள் எப்படி தேசியக் கட்சியாவார்கள்? இதை மத்தியில் ஆளுபவர்களும் கேள்வி கேட்பதில்லை. இங்கே இருக்கும் கம்யூனிஸ்டுகள்தான் கேரளாவில் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் வேறு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். பிறகு எதற்கு தேசியக் கட்சிகள்? மாநிலக் கட்சிகள்தான் மாநிலங்களை ஆள வேண்டும். எல்லோரும் கூடி விவாதித்து மத்தியில் ஆட்சியாளரை நியமிப்போம். இங்கே கூட்டணி ஆட்சிதான் இருக்கிறதே தவிர கூட்டாட்சி இல்லை. ஒரே ஆள் கையில் அதிகாரத்தை குவித்து மோடி ஒரே நாளில் பணம் செல்லாது என அறிவிக்கிறார். மோடி, ராகுலைத் தவிர நாட்டை ஆள 133 கோடி மக்களில் யாருமே இல்லையா? இங்கே தேசியம் என்று எதுவுமே இல்லை” என்று பேசினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.