திமுக அணிக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள்!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திரையுலகைச் சார்ந்தவர்கள் தங்களுக்கு விருப்பமான கட்சிகள், தலைவர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
முன்னணி நடிகரான விஜய் இந்த தேர்தலில் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. மார்ச் 17ஆம் தேதி மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும், திமுக அணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை விஜய் மக்கள் இயக்க மதுரை மாவட்டப் பொறுப்பாளர் தங்கப்பாண்டி நேரில் சந்தித்துத் தங்கள் ஆதரவைத்
தெரிவித்தார்.
இதனால் விஜய் ஆதரவு திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அப்போது விஜய் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு கட்சியான காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி வேட்பாளர் வசந்தகுமாருக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் சபின் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள், காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளருக்குப் பொன்னாடை போர்த்திய விஜய் ரசிகர்கள், நடிகர் விஜய்யையும், வேட்பாளர் வசந்தகுமாரையும் வாழ்த்தி கோஷம் போட்டனர். இது குறித்தும் விஜய் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
சர்கார் படத்தின் வெளியீட்டின் போது அதிமுகவைச் சார்ந்தவர்கள் படம் திரையிடும் திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த விஜய் கட் அவுட்கள், பேனர்களை அகற்றினர். படத்திற்கு எதிராகப் போராட்டமும் நடத்தினர்.
அதிமுகவினருக்கு எதிரான இந்த எதிர்ப்பு தற்போது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளிப்படுகிறது. விஜய் ரசிகர்கள் சிலர் தங்கள் வீடுகளின் முன்னால் ‘இது விஜய் ரசிகரின் வீடு அதிமுகவினர் ஓட்டு கேட்டு வரவேண்டாம்’ என்ற வாசகம் அடங்கிய போஸ்டர்களை வைத்துள்ளனர். இதைப் புகைப்படமாக எடுத்துத் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

No comments

Powered by Blogger.