பார்வையற்றோருக்கு ‘பிரெய்லி’ வாக்காளர் அட்டை..!

புதுச்சேரியில், பார்வையற்ற மற்றும் பார்வை குறைபாடுள்ள வாக்காளருக்கு ‘பிரெய்லி’ வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. பார்வையற்ற மற்றும் பார்வை குறைபாடுள்ள வாக்காளருக்கு இதுவரை சாதாரண அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. இதனால், அந்த அட்டையை அவர்கள் பயன்படுத்துவதற்கு மற்றவர்களின் உதவியையே நாட வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில், மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் சிரமங்களை உணர்ந்த இந்திய தேர்தல் ஆணையம், அவர்களுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு அங்கமாக, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 1,036 பார்வையற்ற வாக்காளர்களுக்கு, ‘பிரெய்லி’ வாக்காளர் அடையாள அட்டைகளை புதுச்சேரி தேர்தல் துறை தயாரித்துள்ளது. பிரெய்லி புள்ளிகள் ஒளிபுகும் ஸ்டிக்கர்கள் அச்சடிக்கப்பட்ட இந்த அட்டையின் முன்பக்கத்தில், அடையாள அட்டை எண், வாக்காளர் பெயர், தந்தை பெயர் போன்ற விவரங்கள் உள்ளது. பின் பக்கத்தில், இனம், பிறந்த திகதி, முகவரி, தொகுதி எண் மற்றும் பெயர் போன்ற தகவல்கள் உள்ளன. இந்த அட்டையில் உள்ள விவரங்களை, பார்வையற்ற மற்றும் பார்வை குறைபாடுள்ள வாக்காளர்கள் தாங்களாகவே தடவிப்பார்த்து தெரிந்துகொள்ளலாம். புதுச்சேரி தேர்தல் அதிகாரி அருண், பார்வையற்ற வாக்காளர்களுக்கு நேற்று (15ம் திகதி) இந்த அட்டைகளை வழங்கினார். முதன்முறையாக இந்த தேர்தலில்தான், ‘பிரெய்லி’ வாக்காளர் அடையாள அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.