வாக்குகள் நீக்கம்!! அதிகாரிகளின் அசமந்தமா? அராஜகமா,?

கன்னியாகுமரி தொகுதியில், கடற்கரை கிராமங்களில் வாக்காளர் பட்டியலில் ஆயிரக்கணக்கான மீனவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக எழுந்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்தூர் பகுதியில் அதிகாரிகளை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில், குளச்சல் மற்றும் கிள்ளியூர் தொகுதியில் மீனவர் கிராமங்கள் அதிகமாக உள்ளன. இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்து சில பகுதிகளில் வாக்களிப்பதற்கான பூத் சிலிப் வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்தது. இந்த நிலையில், குளச்சல் மற்றும் கிள்ளியூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட முட்டம் மீனவர் கிராமத்தில், சுமார் 300 வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை எனப் புகார் எழுந்தது. மேலும், இனயம் மற்றும் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட தூத்தூர் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை எனப் புகார் எழுந்தது.


தூத்தூர் பயாஸ் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, தூத்தூர் மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தரையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும், தூத்தூர் வாக்குச்சாவடிக்கு வந்த கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவிடமும் மக்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், கலெக்டர் எந்தப் பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இனயத்தில் வர்த்தகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராடிய பகுதியைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளது.

மேலும், ஓகி புயலின்போது காணாமல்போன மீனவர்களைக் கண்டுபிடிக்கக்கோரி போராட்டம் நடத்திய தூத்தூர் பகுதியிலும் அதிகமானோரின் வாக்குகள் காணாமல் போயுள்ளன. 2016 சட்டசபைத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு இப்போது வாக்குரிமை மறுக்கப்படுவது அநியாயம். முன்கூட்டியே பூத் சிலிப் கொடுத்திருந்தால், விடுபட்ட பெயர்கள் குறித்து தெரியவந்துவிடும் என்பதால், பூத் சிலிப்கூட வழங்கப்படவில்லை" என்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.