ஒரே பூத்தில் 200 ஓட்டுக்கள் மாயமான பின்னணி??!!

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பூத்தில், வேப்பேரி பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓட்டு இல்லாததால், அவர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
வாக்களிக்க முடியாத பெண் ஜூலியானா என்பவர், ''எங்கள் தெருவில் செத்தவருக்கெல்லாம் ஓட்டு இருக்கு. ஆனா உயிரோடு இருக்கிற எங்களுக்கு இல்லை'' என்று ஆவேசமாகக் கூறினார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சில இடங்களில் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இன்னும் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக, வாக்குப்பதிவில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில், வேப்பேரி வள்ளுவன் தெரு, வடமலை தெரு, முத்து தெரு, வெங்கடாச்சலம் தெரு உள்ளிட்ட பகுதி மக்களுக்கான வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இன்று காலை ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தனர். அவர்களில் 200-க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஓட்டு போட முடியாதவர்கள் விளக்கம் கேட்டனர். அதற்கு, அவர்கள் அலட்சியமாகப் பதிலளித்தனர். இதனால் வாக்களிக்க முடியாமல் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

 இதுகுறித்து வேப்பேரியைச் சேர்ந்த ஜூலியனா ஜெயப்பிரியா கூறுகையில், ``எங்கள் வீட்டில் தாத்தா, பாட்டி, எனக்கு என மூன்று பேருக்கு வாக்குகள் இல்லை. ஆனால், என்னுடைய சகோதரிக்கும் அம்மாவுக்கும் வாக்கு உள்ளது. ஒரே முகவரியில்தான் நாங்கள் பல ஆண்டுகளாக குடியிருந்துவருகிறோம். இந்தத் தவறு எப்படி நடந்தது என்று தெரியவில்லை. எங்களுக்கு மட்டுமல்ல, அந்தப் பகுதியில் உள்ள பலருக்கும் அதே நிலைமைதான்.

ஓட்டு போட முடியாத ஜூலியானாஎங்கள் தெருவில் உள்ள தாத்தா ஒருவர், இறந்து இரண்டாண்டுகளாகிவிட்டன. ஆனால், அவருக்கு வாக்கு உள்ளது. ஆனால் அவரின் மகன் உயிரோடு இருக்கிறார். அவருக்கு வாக்கு இல்லை. பக்கத்து வீட்டைச் சேர்ந்த குடும்பத்தினர் அனைவருக்குமே ஓட்டு இல்லை.அதைக் கேட்டால், தேர்தல் பணியில் உள்ள ஊழியர்கள் அலட்சியமாகப் பதிலளிக்கின்றனர். சுமார் 3 மணி நேரம் வாக்குச்சாவடியில் காத்திருந்தேன். எவ்வளவோ போராடிப் பார்த்துவிட்டேன். ஆனால், எந்தப்பயனும் இல்லை" என்றார் ஆவேசத்துடன்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத முத்து தெருவைச் சேர்ந்த பெண் ஒருவர், ``சார், என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. ஆனால் வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை. ஆனால், என் வீட்டில் மற்றவர்களுக்கெல்லாம் வாக்கு இருக்கிறது. என்னுடைய ஓட்டு மட்டும் எப்படி மாயமானது என்று தெரியவில்லை. தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் செய்யும் தவறால், நான் இன்று ஓட்டு போட முடியவில்லை. 'சர்கார்' படம் போல நீதிமன்றத்துக்குச் சென்றால்தான் நியாயம் கிடைக்குமா?" என்றார்.

 மூதாட்டி ஒருவர்,  வாக்காளர் அடையாள அட்டையை நம்மிடம் காண்பித்தபடி பேசினார். ``நான் பிறந்தது முதல் இங்கேதான் குடியிருந்துவருகிறேன். ஒவ்வொரு தேர்தலிலும் நான் தவறாமல் ஓட்டு போட்டுள்ளேன். அடுத்த தேர்தலுக்கு உயிரோடு இருப்பனா என்று தெரியவில்லை. இதனால் வாக்களிக்க வந்தேன். ஆனால், எனக்கு ஓட்டு இல்லை என்று கூறி வெளியில் அனுப்பிவிட்டனர். இதற்குத் தேர்தல் ஆணையம் கண்டிப்பாக பதில் சொல்லியே தீர வேண்டும்" என்றார்.

இதுகுறித்து மத்திய சென்னை தேர்தல் அலுவலர்களிடம் கேட்டபோது, ``ஒரே பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஓட்டுகள் மாயமாகியிருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. தேர்தல் ஆணையம், மக்களிடையே எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அக்கறை இல்லாமல் உள்ளனர். தேர்தல் ஆணையம் வெளியிடும் வாக்காளர் பட்டியலை மக்கள் சரிபார்க்க வேண்டும். அப்போது, பெயர் விடுபட்டிருந்தால் சிறப்பு முகாமில் பெயரை சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், அந்த வாய்ப்பை அவர்கள் தவறவிட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பதால், அவர்களை ஓட்டு போட அனுமதிக்கவில்லை. அதே நேரத்தில், ஒரே பகுதியில் பலருக்கு ஓட்டுகள் இல்லை என்ற புகாரை கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
புரசைவாக்கத்தில் உள்ள ஒரே பூத்தில் 200-க்கும் மேற்பட்டவர்களின் ஓட்டுகள் மாயமான பின்னணியில், அரசியல் பிரமுகர் ஒருவர் தலையீடு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் சார்ந்துள்ள கட்சிக்கு ஓட்டு போடாதவர்களின் பெயர்களை நீக்கிவிட்டதாக அந்தப் பிரமுகர்மீது வாக்களிக்க முடியாதவர்களில் சிலர் குற்றம்சாட்டினர்.

இன்று நடந்த தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டைஇருக்கிறது. ஆனால், வாக்காளர் பட்டியலில் என்னுடைய பெயர் இல்லை என்று பொதுமக்கள் பரவலாகக் குற்றம் சாட்டினர். அதே நேரத்தில், ஒரே நபருக்கு இரண்டு அல்லது மூன்று வாக்காளர் அடையாள அட்டை இருப்பதுடன், அவர்களின் பெயர்கள் ஒரே பாகம் எண்ணில் தொடர்ச்சியாக இடம்பிடித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நத்தமேடு கிராமத்தில் உள்ள பூத் ஒன்றில், பாகம் எண் 138ல், இரண்டு பேருக்கு நான்கு  ஓட்டுகள் இருந்தன. இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.