வரலாற்று சிறப்பு மிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயம்!

வரலாற்று ரீதியாகவும் ஜதீக ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்ற இடமாக மட்டுவில் விளங்குகின்றது.


மதுரையை எரித்த கண்ணகி கடல் மார்க்கமாக இலங்கையின் வடபுலத்திற்கு வந்திறங்கி, தரை வழியாக மட்டுவில் வந்தடைந்து, பின்னர் வற்றாப்பளை சென்றடைந்ததாக கூறப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தில் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் கண்ணகி கணவனை இழந்த விதவை. ஊர் மக்கள் அவளை அன்போடும், நம்பிக்கையோடும், பத்தியோடும் ‘கிழவி’ என்று அழைப்பார்கள். அதனால்தான் என்னவோ எம் கிராமத்தவர்கள் வெள்ளைப் புடவையும், பொட்டில்லாத நெற்றியில் விபூதி பூசிய விதவைப் பெண்களை அபசகுனமாக பார்க்காமல், குலதெய்வமான கண்ணகியாகப் பார்க்கிறார்கள்!

12ஆம் நூற்றாண்டில் இராஜாதிராஜ சோழன் தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது, அவனது படைகள் வட இலங்கை மீது படையெடுத்து மட்டிவால் என்னும் ஊரில் தங்கியிருந்த படைவீரர்களையும், யானைகளையும் சிறைப்பிடித்து தமிழகத்திற்கு கொண்டு சென்றதாக ‘திருவாலங்காடு‘ மற்றும் ‘பல்லவராயன் பேட்டை‘க் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவ்வாறு கல்வெட்டுக்களில் கூறப்படும் ‘மட்டிவால்‘ என்ற இடத்தைப் பேராசிரியர் பரணவிதானா மற்றும் பேராசிரியர் நீலகண்டசாஸ்திரி ஆகியோர் தென்மராட்சியில் உள்ள தற்போதைய மட்டுவில் கிராமம் என அடையாளப்படுத்தியுள்ளனர்.


No comments

Powered by Blogger.