விங் கமாண்டர் அபிநந்தனை இடமாற்றம் செய்தது விமானப்படை!

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடிகொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதத் தளத்தின்மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து, எல்லை அருகே அமைந்திருக்கும் இந்திய நிலைகள்மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்த முயன்றது. அதற்கு, இந்திய விமானப்படை தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டது. இந்தச் சம்பவத்தின்போது, இந்திய விமானப்படை மிக் 21 பைசான் ரக விமானம் ஒன்றை இழந்தது. அந்த விமானத்தை இயக்கிய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தரையிறங்கவே, அந்நாட்டு ராணுவம் அவரைச் சிறைபிடித்தது. பின்னர், அமைதி நடவடிக்கையாக, வாகா எல்லையில் அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது.

இதன்பின், அவருக்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவருக்கு நான்கு வாரங்கள் மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது. இந்த விடுப்பு காலத்தை, சென்னையில் உள்ள குடும்பத்தினருடன் கழிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் ஸ்ரீநகருக்கே சென்று,  தான் சார்ந்த விமானப்படை வீரர்களுடன் தங்கி நெகிழ்ச்சி ஏற்படுத்தினார். மருத்துவ விடுப்பு முடிந்தபின், பரிசோதனைக்காக டெல்லி ராணுவ மருத்துவமனைக்கு வர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், அபிநந்தனை விமானப்படை அதிகாரிகள் தற்போது இடமாற்றம் செய்துள்ளனர். ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் இருந்து மேற்குப்பகுதி விமானப்படை தளத்துக்கு அவர்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீநகரில் தொடர்ந்து பணியாற்றினால், அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக் கருதி, பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் டிரான்ஸ்ஃபெர் செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, போர் காலத்தில் சிறப்பான பணிக்காக வழங்கப்படும் வீர் சக்ரா விருதுக்கு விங் கமாண்டர் அபிநந்தன் பெயர் பரிந்துரை செய்தது இந்திய விமானப்படை. பரம்வீர் சக்ரா, மகாவீர் சக்ரா விருதுகளுக்கு அடுத்து வழங்கப்படும் உயரிய விருது வீர் சக்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.