பி.இ. கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

நடப்பு கல்வியாண்டின் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடத்துவதற்கான தேதியை உயர் கல்வித் துறை (ஏப்ரல் 21) அறிவித்துள்ளது தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 550க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் லட்சக்கணக்கான பொறியியல் இடங்கள் நிரப்பப்படவுள்ளன. பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில், இன்று உயர் கல்வித் துறை கலந்தாய்வுக்கான தேதியை அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை உயர் கல்வித் துறை ஏற்படுத்தியது. தமிழகத்தில் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, உதவி மையங்கள் வாயிலாகவும், மாணவர்கள் வீட்டிலிருந்தபடியும் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் வகையில் கலந்தாய்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ஆண்டும் அதே முறையில் கலந்தாய்வு நடைபெறும் நிலையில், அதற்கு மே 2ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 3ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, அரசு அமைத்துள்ள உதவி மையங்களில் ஜூன் 6 முதல் 11ஆம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து, ஜுன் 17ஆம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு, ஜூன் 20, 21, 22 ஆகிய தேதிகளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு பிரிவினருக்குக் கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 3ஆம் தேதி முதல் ஜூலை 30ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று உயர் கல்வித் துறை அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைக் கழகம் கலந்தாய்வு நடத்தி வந்த நிலையில் இந்த ஆண்டு முதல், தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் கலந்தாய்வை நடத்தவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.