இன்ஸ்பெக்டர் ஜெய்ஹிந்த் தேவி தற்கொலை!

நெய்வேலியில் வேலைசெய்துவந்த காவல்துறை ஆய்வாளர் ஜெய்ஹிந்த் தேவி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவிரிப்பாக்கம் சேடன் குட்டை பகுதியில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலையில் தற்கொலை செய்துகொண்டார். காரணம், கணவனின் சந்தேகக் கொடுமை என்கிறார்கள் சக ஆய்வாளர்கள். விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரிந்துவந்த காவல் ஆய்வாளர் ஜெய்ஹிந்த் தேவி, மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டம் நெய்வேலி காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தேர்தல் பணியில் ஓய்வின்றி பணிபுரிந்தவர் இன்று (ஏப்ரல் 21) ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு நேற்றிரவு நெய்வேலியிலிருந்து பேருந்தில் புறப்பட்டார். பேருந்தை விட்டு இறங்கும் முன் தனது கணவர் மாணிக்கவேலை செல்போனில் தொடர்புகொண்டு திண்டிவனம் மேம்பாலத்தில் காத்திருக்கும்படி தெரிவித்தார். கணவரும் காத்திருந்தார், ஜெய்ஹிந்த் தேவி பேருந்தை விட்டு இறங்கியதும் கணவரோடு காவிரிப்பாக்கம் வீட்டுக்குச் சென்றவர், “ஏங்க எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு. கடையில் டிபன் வாங்கிட்டு வந்துடுங்க” என்றுள்ளார். கணவரும் டிபன் வாங்கி வந்தார். இருவரும் சாப்பிட்டார்கள். அப்போது கணவன் மாணிக்கவேலின் சந்தேக வார்த்தைகள் அதிகமாகிக்கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் உச்சக்கட்டத்தை எட்டியது பிரச்சினை. காவல் நிலையத்திற்கு சென்றாலும் டென்ஷன்,வீட்டுக்குச் சென்றாலும் டென்ஷன் இனி எதற்கு வாழவேண்டும் என்று முடிவு செய்தவர், தற்கொலை முடிவுக்கு வந்துவிட்டார். ஜெய்ஹிந்த் தேவியின் அம்மா, பிள்ளைகள் வீட்டிலிருந்திருந்தால் இந்த முடிவை எடுத்திருக்கமாட்டார். ஏழாம் வகுப்புக்கு செல்லக்கூடிய அபிதா, முதல் வகுப்பு செல்லக்கூடிய அக்‌ஷ்யா, ஜெய்ஹிந்த் தேவியின் அம்மா, அக்கா குடும்பங்கள் திருப்பதி வெங்கடாசல பெருமாள் தரிசனத்திற்கு சென்றுவிட்டார்கள். இந்த நிலையில்தான் இப்படி ஒரு விபரீதம். ஜெய்ஹிந்த் தேவி திண்டிவனத்தில் படித்துவிட்டு சும்மாயிருந்தபோது, ஒரு தனியார் கிளினிக்கில் வேலை பார்த்துவந்தார். அப்போதுதான், மாணிக்கவேலுடன் காதல் மலர்ந்தது. இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் முடிவுசெய்தார்கள். எஸ்.ஐ. தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த ஜெய்ஹிந்த் தேவி தனது விடாமுயற்சியால் தேர்ச்சி பெற்றார். 2004ஆம் ஆண்டில், பயிற்சி எஸ்.ஐ.யாக கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் சேர்ந்தார். ஜெய்ஹிந்த் தேவி எஸ்.ஐ.யாக ஆனதும், தன்னை கை விட்டுவிடுவாரோ என்ற தாழ்வு மனப்பான்மையில் இருந்தார் மாணிக்கவேல். ஆனால் ஜெய்ஹிந்த் தேவி காதலுக்கு மரியாதை கொடுத்து பத்திரிக்கை அடித்து திண்டிவனம் திருமண மண்டபத்தில் மாணிக்கவேலைத் திருமணம் செய்துகொண்டார். அப்படிப்பட்டவரைச் சந்தேக வியாதியால், வார்த்தைகளால் குத்தி ரணமாக்கி தற்கொலைக்குத் தூண்டும் வகையில் செய்துள்ளார் கணவர், இந்த சந்தேகம் இப்போது வந்தது இல்லை ,பலவருடமாகவே குடிபோதையில் பேசி வந்துள்ளார். இதுகுறித்து ஜெய்ஹிந்த் தேவியின் காவல்துறை தோழிகளிடம் விசாரித்தோம் “சார், காவல்துறையில் பெண்கள் படும் கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்லை. குடும்பத்தில் உள்ளவர்கள் தேவையில்லாமல் சந்தேகப்படுவார்கள். இதனால் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தற்கொலை முடிவுக்குப் போகாமல் பிள்ளைகளோடு பிரிந்துவந்து வாழ்ந்துவருகிறார்கள். சிலர் வேலையே வேண்டாம் என்று வி.ஆர்.எஸ். கொடுத்துட்டு வீட்டுச் சமையலறையில் அடிமைகளாக இருந்துவருகிறார்கள். ஜெய்ஹிந்த் தேவி அனைத்துக் கொடுமைகளையும் சகித்துக்கொண்டு இவ்வளவு நாட்கள் வாழ்ந்ததே அபிதா, அக்‌ஷ்யா இரு பிள்ளைகளுக்காகத்தான்” என்றார்கள். ஜெய்ஹிந்த் தேவியின் அக்கா ரேணுகா தேவி, “குடித்துவிட்டு வந்து ஜெய்ஹிந்த் தேவியை சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்துவதுதான் மாணிக்கவேலின் வழக்கம்” என்று திண்டிவனம் காவல்நிலையத்தில் தற்போது புகாரளித்துள்ளார்.

No comments

Powered by Blogger.