ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிட விடயத்தில் தலையிட முடியாது-உச்சநீதிமன்றம்!

ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் கட்டும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள்து. தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார் ஜெயலலிதா. அவரது உடல் சென்னை மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அதே இடத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட முடிவெடுத்தது அதிமுக அரசு. இதற்காக 50 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.எல்.ரவி என்பவர் வழக்குத் தொடுத்தார். ‘சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு பொது இடத்தில் நினைவிடம் அமைப்பது என்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்’ என்று மனுதாரர் வாதாட தமிழக அரசுத் தரப்போ, “ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதே அவர் காலமானார். அவர் காலமானபின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. மேலும் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம், சென்னை மாநகராட்சி ஆகிய அமைப்புகளின் அனுமதிபெற்றே நினைவிடம் எழுப்பப்படுகிறது” என்று வாதாடியது. சென்னை உயர் நீதிமன்றம் எம்.எல். ரவியின் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். இந்த மனுவை இன்று (ஏப்ரல் 22) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ‘தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது’ என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் வேகம் பிடிக்கும் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.