இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி!

ஈஸ்டர் தினத்தில், இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில், தங்கச்சிமடத்தில் அனைத்து சமுதாயத்தின் சார்பில் அமைதிப்பேரணி நடைபெற்றது. இலங்கைத் தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில், நேற்று முன்தினம் காலை, ஒரே சமயத்தில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதிலிருந்து மீளும் முன்னரே, மேலும் இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இச்சம்பவங்களில், இதுவரை 300 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்பில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  
யேசு கிருஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை, உலகம் முழுவதும் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் உள்ள தேவாலயங்களில் ஆயிரக்கணக்கானோர் வழிபாட்டிற்காகத் திரண்டிருந்தபோது, இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. மேலும், கொழும்பில் உள்ள பல்வேறு ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தில், இந்தியர்கள் 6 பேர் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவரும் பலியாகியுள்ளனர். இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில், தங்கச்சிமடத்தில் அமைதிப்பேரணி மற்றும் மெழுகுவத்தி வழிபாடு நடந்தது. இங்குள்ள புனித தெரசாள் ஆலயத்தில் இருந்து தொடங்கிய இந்த அமைதிப்பேரணியில் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பங்குத் தந்தைகள், மீனவர் சங்கத் தலைவர்கள், வர்த்தகர் சங்கத்தினர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கைகளில் கறுப்புக்கொடி ஏந்திச்சென்றனர். சுமார் ஒரு கி.மீ தூரம் பேரணியாகச் சென்ற இவர்கள், தங்கச்சிமடம் குழந்தை ஏசு ஆலயத்தில் ஒன்றுகூடினர். அங்கு, இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில் மெழுகுவத்தி ஏற்றி சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.