கங்குலி என்னை தூக்கிக் கொண்டாடிய அந்தத் தருணம்..!
பன்ட் அதிரடியால், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியைப் பதிவுசெய்தது டெல்லி அணி. போட்டி முடிந்ததும் பன்ட்-ஐ தூக்கிக் கொண்டாடினார் கங்குலி.
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று, ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் அணியும் டெல்லி அணியும் மோதியது. டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பந்துவீச முடிவுசெய்தது. ரஹானேவின் அதிரடி சதம் மற்றும் ஸ்மித்தின் அரை சதத்தின் உதவியுடன் ராஜஸ்தான் அணி 191 ரன்கள் குவித்தது.
அடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு, பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அதிரடியான தொடக்கம் அளித்தனர். அதன் பின்னர் களமிறங்கிய பன்ட், களத்தில் வாணவேடிக்கை காட்ட, 19.2 ஓவர்களில் வெற்றியை எட்டிப்பிடித்தது டெல்லி அணி. இந்த வெற்றியின்மூலம், டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. சென்னை அணி டெல்லியை ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அணி, கடந்த சீசன் போன்று இல்லாமல் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிவருகிறது. சைலன்டாக, வெற்றிகளைப் பெற்று முன்னேறி வந்துள்ளது. டெல்லி அணி வீரர்கள், தேர்வில் மட்டுமல்லாது வேறு சில மாற்றங்களும் செய்தது. அதில் முக்கியமானது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை ஆலோசகராக நியமித்தது. நேற்றைய போட்டியில், பன்ட் 36 பந்துகளில் எடுத்த 78 ரன்கள், டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஆட்டம் முடிந்து பன்ட் திரும்பும்போது, அனைத்து டெல்லி வீரர்களும் அவருக்கு கைகுலுக்கிப் பாராட்டு தெரிவித்தனர். ஆனால் கங்குலி, பன்ட் -ஐ தூக்கிக் கொண்டாடினார். எப்போதும் மைதானத்தில் தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டும் கங்குலி, நேற்றும் அதனைச் செய்யத்
மேலும், ட்விட்டிலும் பன்ட்-ஐப் பாராட்டினார் கங்குலி. அவரைத் தூக்கிவைத்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ``இதற்கு நீங்கள் தகுதியானர்... யூ ஆர் வாவ்” எனப் பதிவிட்டிருந்தார்.
நேற்றைய போட்டி முடிந்த பின்னர், பிரித்வி ஷா பன்ட் -ஐ பேட்டி கண்டார். அந்தப் பேட்டியின்போது, கங்குலி உங்களை தூக்கிக் கொண்டாடியதுகுறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த பன்ட், ``போட்டி முடிந்த பின்னர் நான் திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது எதிரில் வந்த அனைவரும் தங்களது அன்பை வெளிப்படுத்தினர். கங்குலி என்னைத் தூக்கியபோது, நான் ஸ்பெஷலாக உணர்ந்தேன். அது, ஒருவிதமான உணர்வு” என அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தத் தெரியாமல் நெகிழ்ச்சியுடன் பேசினார் பன்ட். கண்டிப்பாக இந்த மொமென்ட், பன்ட் வாழ்வில் மறக்க முடியாதபடியாக இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்களும், தாதா கங்குலி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.
கருத்துகள் இல்லை