சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்கிறார் விஜயகாந்த்?

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாகவே பாதிப்படைந்துள்ளது. தொண்டையில் ஏற்பட்ட நோய்த் தொற்று, சிறுநீரகப் பிரச்னையால் அவர் பெரிதும் அவதிப்படுகிறார். சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டவர், 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரிலுள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் ஒரு மாத காலம் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக்கொண்டும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. 2018 ஜூலை மாதம் அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்த பின்னர், விஜயகாந்த்தின் உடல்நிலையில் முன்னேற்றம் தென்பட்டது. இரண்டாம் கட்டமாக, கடந்தாண்டு டிசம்பர் 18-ம் தேதி அமெரிக்கா சென்றவர், இரண்டு மாதகாலம் அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சென்னைக்குத் திரும்பினார். தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டமாக அவர் மீண்டும் அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், சென்னையில் மட்டுமே விஜயகாந்த் பிரசாரம் செய்தார். நான்கு இடங்களில் தலா மூன்று நிமிடங்களுக்கு மேல் பேசவும் செய்தார். 2017 ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தலின் போது, வேனிலேயே தொகுதியை வலம் வந்த விஜயகாந்த்தால் பேசவே முடியவில்லை. தற்போது பேசும் அளவுக்கு உடல்நிலை தேறியிருந்தாலும், இன்னமும் நிதானம் கைகூடவில்லை. தேர்தலில் வாக்களிக்கவே அவர் மிகவும் சிரமப்பட்டது கண்கூடாகத் தெரிந்தது. சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்லும் விஜயகாந்த்துடன், அவர் மனைவி பிரேமலதாவும், மகன் சண்முகப் பாண்டியனும் செல்வார்கள் எனக் கூறப்படுகிறது. 4 தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தை மகன் விஜய் பிரபாகரன், மைத்துனர் எல்.கே.சுதீஷ் இருவரையும் கவனிக்கச் சொல்லிவிட்டு, விஜயகாந்த் அமெரிக்கா செல்லலாம் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.