சாய்ந்தமருது தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பு!!

கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.  தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


ஐ.எஸ். அமைப்பின் செய்திப் பிரிவான அமாக் முகவரகம், தீவிரவாதியின் புகைப்படத்துடன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இதில் குறித்த தீவிரவாதி, 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான பிரதான தீவிரவாதியான மொஹமட் சஹ்ரானுடன், கையில் துப்பாக்கி ஏந்திய நிலையில் காணப்படுகிறார். இவர்களின் பின்னணியில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கொடி காணப்படுகிறது.

அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகத்திற்குரிய ஆயுதக்குழுவினருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு கடுமையான துப்பாக்கிச்சமர் இடம்பெற்றது.

இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்தச்சமர் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் அங்கிகள் தயாரிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய குறித்த பகுதியிலுள்ள வீடொன்றை சுற்றிவளைத்து பாதுகாப்புத் தரப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது, அங்கிருந்த தீவிரவாதிகள் அடுத்தடுத்து இரண்டு குண்டுகளை வெடிக்கவைத்தனர்.

சாய்ந்தமருது – அஷ்ரப் வைத்தியசாலையின் பின்புறமாக உள்ள சுனாமி வீட்டுத்திட்டப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த பரஸ்பர துப்பாக்கிச்சமர் மற்றும் குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து, 6 சிறுவர்கள், 3 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தமாக 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையிலேயே, இங்கு இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து, குறித்த பிரதேசத்தில் தொடர்ந்தும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, தீவிரமான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.