ஐ.தே.க.விற்கு எதிராக களமிறங்கும் வேட்பாளரை ஆதரிப்போம்!!


ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக எந்தவொரு வேட்பாளர் களமிறக்கப்பட்டாலும், அவருக்கு முழுமையான ஆதரவை வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாரென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “தீர்மானம் ஒன்றுக்கு வராத விடயம் தொடர்பாகவே நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றீர்கள். ஆனால், ஜனாதிபதி வேட்பாளர் குறித்து நாம் இன்னும் எந்தவொரு தீர்மானத்துக்கும் வரவில்லை. யாருக்கு ஆதரவு, வேட்பாளர் யார் என்பது குறித்து தலைவர் தான் தீர்மானிப்பார். கட்சியின் ஒருசிலரால் தீர்மானிக்க முடியாது. தேர்தல் வரும்போது உரிய நேரத்தில் அனைத்தும் அறிவிக்கப்படும். எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக களமிறங்கும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவோம் என்பதில் மட்டும் நாம் உறுதியாக இருக்கிறோம். கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே இந்த முடிவை எடுப்போம். மேலும், தேசிய அரசாங்கம் தொடர்பாகவும் கருத்துக்கள் வெளியிடப்படுகிறது. அவ்வாறான எந்தவொரு அழைப்பும் இதுவரை வரவில்லை. அழைப்பு வந்தால்கூட அது ஏற்றுக்கொள்ளப்படாது என்பதே எமது நோக்கமாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.