காலுக்குள் தீர்த்தம் இருக்க காததூரம் அலைவதா?

காரைநகரில் குடிதண்ணீர் இல்லை எனவும் அதனால் தாங்கள் அவலங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.  போராட்டங்களையும் நடத்த முற்படுகின்றனர்.


காரைநகரில் வசிக்கும் மக்களுக்கான குடிதண்ணீர் இங்கேயே இருக்கின்ற நிலையில் அவர்கள் அதைப் பயன்படுத்தாமல் வெளியே இருந்து கொண்டுவரப்படும் தண்ணீருக்காகக் காத்திருக்க வேண்டிய நிலைக்கு மாற்றப்பட்டுள்ளமை கவலைக்குரியது.

காரைநகருக்கு வெளியிடங்களில் இருந்து கொண்டுவரப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அவலப்பட்ட நிலையில் இதற்கான தீர்வு குறித்து சிந்தித்தோம்.

காரைநகரில் உள்ள நன்னீர் கிணறுகள் தொடர்பான தரவுகளைத் திரட்டத் தொடங்கினோம். நானும் நண்பன் திருச்செல்வமும் முன்னாள் கிராம சேவையாளர் திரு.நடேசன் அவர்களும் இப்பணியில் ஈடுபட்டோம்.

என்ன ஆச்சரியம்....! மூன்று நாள்கள் தேடுதலில் 32 நன்னீர் கிணறுகளை அடையாளம் கண்டிருக்கின்றோம்.

ஆலயங்கள், வயல் வெளிகள், பொது இடங்களில் இக்கிணறுகள் உள்ளன. இவற்றில் சில தனியாருக்கு சொந்தமானவை.

சில கிணறுகள் தற்போது மக்களின் குடிதண்ணீர் பயன்பாட்டில் உள்ளன. மேலும் சில நன்னீர் கிணறுகளை மக்கள் குளிப்பதற்காக பயன்படுத்துகின்றனர்.

குளிப்பதற்கு மாற்றுக் கிணறுகளும் அங்கு இருக்கின்ற போதிலும் நன்னீர் கிணறுகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

பயன்படுத்தப்படாமல் உள்ள கிணறுகளையும் குளிப்பதற்கு பயன்படுத்தும் கிணறுகளையும் இறைத்துச் சுத்தமாக்கி உடனடியாகவே குடிதண்ணீருக்காகப் பயன்படுத்தலாம்.

ஏனைய கிணறுகளை திருத்திய பின்னர் பயன்படுத்தலாம். தனியார் கிணறுகளை உரியவர்களின் அனுமதியுடன் பயன்படுத்துவது இங்கு முக்கியமானது.

தேடல் மேலும் தொடரவுள்ளது. பெரும்பாலும் 50 வரையான நன்னீர் கிணறுகள் காரைநகரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தனை கிணறுகளில் நன்னீர் இருக்கின்ற நிலையில் காரைநகர் மக்கள் தண்ணீருக்காக  அடுத்தவர்களிடம் தங்கியிருக்கும் நிலை கவலைக்குரியது.

எவரிடமும் எதிர்பார்க்காமல் பிரதேசங்களில் உள்ள சனசமூக நிலையங்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள் போன்றனவே இப்பணிகளை முன்னெடுக்கலாம்.

1990 களுக்கு முன்னர் காரைநகரில் 10,000 வரையான குடும்பங்கள் வசித்தன. அப்போது காரைநகருக்கு வெளியே இருந்து குடிதண்ணீர் கொண்டுவரப்படவில்லை.

ஆனால் யுத்தத்திற்கு பின்னர் மக்கள் சொந்த நீரை வெறுக்கவைக்கப்பட்டுள்ளனர்.
கிணறுகளில் சென்று தண்ணீர் எடுக்கவிடாமல் சோம்பேறிகளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலை விரைவில் மாற்றப்படவேண்டும்.









கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.