சக்தி வாய்ந்த துப்பாக்கிகளுக்குத் தடை!!

நியூஸிலாந்தில் ராணுவ பாணி தானியங்கி துப்பாக்கிகளுக்கு (எம்எஸ்எஸ்ஏ) தடை விதிக்கும் புதிய சட்ட மசோதாவுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த நாட்டு மசூதிகளில் கடந்த மாதம் நடைபெற்ற மசூதித் தாக்குதலின் எதிரொலியாகக் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவுக்கு ஆதரவாக 119 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
மசோதாவுக்கு எதிராக ஒரே ஒரு வாக்கு மட்டுமே பதிவானது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதா மீதான விவாதத்தின்போது காவல்துறை அமைச்சர் ஸ்டூவர்ட் நாஷ் கூறியதாவது:
கிறைஸ்ட்சர்ச் நகர மசூதிகளில் நடத்தப்பட்டுள்ள மிகக் கொடூரமான துப்பாக்கிச் சூடு, நியூஸிலாந்தில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகள் போதிய அளவுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது. நாட்டில், சட்டப்பூர்வ காரணங்களே இல்லாமல் ஏராளமானவர்களிடம் பயங்கரமான ஆயுதங்கள் குவிந்துள்ளன.
இது, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.
இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்த ஒரே ஒரு எம்.பி.யான டேவிட் சேமூர், புதிய துப்பாக்கி உரிமச் சட்டம் அவசர கதியில் கொண்டு வரப்படுவதாக விமர்சித்தார்.
நியூஸிலாந்தில் 15 லட்சம் பேரிடம் துப்பாக்கிகள் உள்ளதாகவும், அதில் 13,500 துப்பாக்கிகள் ராணுவத்தில் பயன்படுத்தப்படுவதைப் போன்ற தானியங்கி வகையைச் சேர்ந்தது எனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அத்தகைய துப்பாக்கிகளைப் பயன்படுத்திதான் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரு மசூதிகளில் இனவாத இளைஞர் ஒருவர் கடந்த மாதம் 15-ஆம் தேதி தாக்குதல் நடத்தினார். அந்தத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.
பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக, எம்எஸ்எஸ்ஏ வகை துப்பாக்கிகளை பொதுமக்கள் வைத்திருப்பதற்குத் தடை விதிக்கும் வகையில் புதிய துப்பாக்கி உரிமச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.