இந்தியாவால் அமெரிக்காவுக்கு இழப்பு: ட்ரம்ப்!
அமெரிக்காவின் காகிதத் தயாரிப்புகள், பிரபல ஹார்லி டேவிட்சன் பைக்குகள் உள்ளிட்ட அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா மிக அதிகமான வரி விதிப்பதாகவும், அதன் விளைவாக அமெரிக்காவுக்கு ஏராளமான கோடி டாலர்கள் இழப்பு ஏற்படுவதாகவும் அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தில் க்ரீன் பே சிட்டியில் ரிபப்ளிக்கன் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டொனால்ட் ட்ரம்ப், “ஒவ்வொரு நாடும் அமெரிக்காவைப் பல ஆண்டுகளாகச் சுரண்டிவருகின்றன. வரிகளின் அரசனாக உள்ள இந்தியா, அமெரிக்கப் பொருட்கள் மீது அளவுக்கு அதிகமான வரிகளை விதித்து வருகிறது.
இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளால் பல ஆண்டுகளாக நாம் ஏராளமான கோடி டாலர்களை இழந்துள்ளோம். ஆனால், இனியும் நாம் இழக்கப்போவதில்லை. வெளிநாட்டுக் காகிதத் தயாரிப்புகள் மீது நாம் வரி விதிப்பதே இல்லை. ஆனால் நமது காகிதங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும்போது என்ன நடக்கிறது? இந்தியா, சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் நமது காகிதங்கள் மீது ஏராளமான வரிகளை விதிக்கின்றன.
ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு இந்தியாவில் 100 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது. ஆனால் அவர்களது பைக்குகள் நம் நாட்டிற்குள் வரும்போது நாம் எந்த வரியும் விதிப்பதில்லை. ஆகையால் நான் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புகொண்டு பேசினேன். பின்னர் வரியை 50 விழுக்காடாக குறைத்தனர். ஆனால் அது மட்டும் போதுமா? அவர்களது பைக்குகளுக்கு நாம் சுழியம் வரி விதிக்கிறோம். அவர்களோ 50 விழுக்காடு வரி விதிக்கின்றனர். இதையெல்லாம் நாம் வேகமாக மாற்றி வருகிறோம்” என்று பேசினார்.
கருத்துகள் இல்லை