தற்கொலைக் குண்டுதாரியின் கடைசி நிமிடங்கள்!

உலகத்தையே உலுக்கியெடுத்த  தொடர் குண்டுவெடிப்பில் தற்கொலை படைத்தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரின் கடைசி பல மணி நேரக் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. 

ஈஸ்டர் பண்டிகையின்போது, கடந்த 21-ம் தேதி கொழும்பு மற்றும் நீர்க்கொழும்பு, கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டதில், 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கொடூரமான இந்தத் தாக்குதலை, தாங்களே நடத்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அறிவித்தது. ஒன்பது பேர் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவ்வமைப்பு கூறியது.
அவர்களில், நசார் முகமது அசார் (34 வயது) எனும் நபர் தற்கொலைத் தாக்குதலுக்கு முன்பு என்னென்ன செய்தார் என்பதைக் காட்டும் காணொலியை, Sky News ஊடகம் வெளியிட்டுள்ளது. தாக்குதலுக்கு முன்னதாக, நள்ளிரவு முதல் அதிகாலை, காலைவரையில் அந்த ஆசாமியின் நடவடிக்கைகள் இந்தக் காணொலியில் பதிவாகியுள்ளன.
மட்டக்களப்புவில் உள்ள சீயோன் தேவாலயத்தில்தான் இந்த ஆசாமி, குண்டுகளை வெடிக்கச்செய்து, தற்கொலைத்தாக்குதலை நடத்தினான். சம்பவம் நிகழ்ந்த ஞாயிறு, நள்ளிரவு 2 மணிக்கு மேல், பேருந்து ஒன்றில் மட்டக்களப்பு நகரில் வந்து இறங்குகிறான். அங்கிருந்து ஓர் ஆட்டோவில் பயணம்செய்கிறான். ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், மட்டக்களப்பு ஜமி உஸ் சலாம் மசூதியின் வளாகத்தில் அந்த நபர் இறங்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. வாகனத்திலிருந்து இறங்கும் அவன், இரண்டு பைகளுடன் மசூதிக்குள் நுழைகிறான். அப்போது, அங்கு, அதிகாலை 3.13 மணி என்பதை காட்சிப்பதிவு காட்டுகிறது. 
அதே இடத்தில் இங்கும் அங்குமாக இரண்டரை மணி நேரம் உலாவிக்கொண்டிருந்த அவன், கைப்பேசியை அவ்வப்போது பார்த்தவண்ணம் இருந்தான். ஒரு கட்டத்தில் அந்தப் பகுதிக்கு போலீஸ் வாகனம் ஒன்று வந்தது; ஆனால், வாகனத்தில் இருந்த போலீஸார், நசார் முகமது அசாரை சரியாக கவனிக்காததாகவோ அல்லது அவனுடைய நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரியதாகத் தெரியாமலோ இருந்திருக்கலாம் என்கிறது ஸ்கை நியூஸ் ஊடகம்.
அதிகாலை 5.42 மணிக்கு மசூதியானது திறக்கப்பட்டதும், அந்த நபர் உள்ளே நுழைகிறான். அந்தப் பைகளுடனேயே அந்த வளாகத்துக்குள் செல்லும் அவன், கழிப்பிடப் பகுதிக்குச் செல்கிறான். பிறகும் யாருடனோ அங்கு உரையாடுகிறான். காலை 6 மணி ஆனதும் மசூதிக்குள் பலருடன் இணைந்து தொழுகையில் ஈடுபடுகிறான். அது முடிந்தபிறகு, பேன்ட் பாக்கெட்டுக்குள் ஒரு கையைவிட்டபடியே நகர்கிறான். 
அடுத்த காட்சிகளில், நீல நிற டி-சட்டையிலும் கறுப்பு நிற ட்ராக்சூட்டிலும் இருக்கும் அவன், இரண்டு நாற்காலிகளுக்கு இடையில் தனியாக தொழுவதைப் பார்க்கமுடிகிறது. அதன் பிறகு, ஆரஞ்சுநிற சட்டையையும் உற்சாகபான விளம்பரம் பொறித்த தொப்பியையும் அணிந்துகொண்டு, தற்கொலைத் தாக்குதலுக்குத் தயார் ஆகியிருக்கிறான். (மற்ற கொலையாளிகளும் இதே தொப்பியை அணிந்திருந்தனர்) 
உடனடியாக, அவன், தன்னுடைய இலக்கை நோக்கி புறப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. மெதுவாக அங்கிருந்து நகர்கிறான். இடையில் மசூதியில் அவன் இருந்தபோது, நீலநிற சட்டையில் இருந்தான். காலை 9.30 மணி ஆனதும் மீண்டும் ஆரஞ்சுநிற சட்டை, பேஸ்பால் தொப்பி, முதுகுப்பைக்கு மாறிவிட்டான்.  அவன் மசூதியைவிட்டு வெளியேறிக்கொண்டே, பேன்ட் பாக்கெட்டிலிருந்து கைப்பேசியை எடுத்து,  அதில் வந்த தகவல்களைப் பார்த்து, பதில் அனுப்புவது தெரிகிறது. அப்படியே சர்வசாதாரணமாக நடந்து, தெருவுக்குள் கொலையாளி இறங்குவதுடன் காட்சி முடிகிறது.
இலங்கை
ஒட்டுமொத்த தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சக்ரான் ஹாசிமின் சொந்த ஊரான காத்தான்குடியைச் சேர்ந்தவன் தான் இந்த நசாரும் என்கிறார்கள், இலங்கை போலீஸார். சக்ரானுக்கும் நசாருக்கும் மிகவும் நெருக்கம் என்றும் சக்ரானுடன் வெளிநாட்டுக்குச் சென்றவன், தாக்குதலுக்கு மூன்று நாள்களுக்கு முன்னர்தான் ஊருக்குத் திரும்பியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.