வன்முறை கலாசாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டது திமுகதான்-ஓ.பன்னீர்!!

வன்முறைக் கலாசாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டது திமுகதான் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்
எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து மாஸ்கோ நகர், கொங்கு மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியின்போதுதான் இலங்கையில் போர் நடைபெற்று 4 லட்சம் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும், 5 லட்சம் பேர் உடல் உறுப்புகளை இழந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இலங்கைத் தமிழர்கள் அழிவுக்குக் காரணமாக இருந்த ஆட்சிதான் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி. வன்முறைக் கலாசாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டதும் திமுக ஆட்சியில்தான்.
தற்போது தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. கல்வி, தொழில் துறையில் சிறந்து விளங்குவதுடன் சட்டம்-ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்பதிலும் முதல் மாநிலமாகத் திகழ்கிறது.
வரும் 2023-ஆம் ஆண்டுக்குள் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாகத் திகழும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் கூடுதலாகத்தான் செயல்படுத்தி வருகிறோம். உதாரணமாக பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பொருள்களுடன் நிகழாண்டு ரூ.1,000 வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் எந்தவிதமான திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.
மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் அதிமுக காணாமல் போயிவிடும் என்கிறார் ஸ்டாலின். அவரது தந்தை கருணாநிதியாலே முடியாதபோது ஸ்டாலினால் எப்படி முடியும்? புயல், பூகம்பமே வந்தாலும் இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. இது மக்களுக்கான இயக்கம் என்றார். பிரசாரத்தின்போது அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன்,கே.சி. கருப்பணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சு.குணசேகரன், கே.என்.விஜயகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
வெள்ளகோவிலில்...
முன்னதாக, ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கு ஜி.மணிமாறனை ஆதரித்து திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
முந்தைய காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடவில்லை. இதை உச்சநீதிமன்றம் வரை சென்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்த வைத்தார்.
தற்போது மாநில அரசு அறிவித்த ஏழைத் தொழிலாளர்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு உயர்நீதிமன்றம் சென்று திமுக தடை பெற்றுள்ளது. 60 லட்சம் பேர் பயன்பெறும் இத்திட்டம் உறுதியாகச் செயல்படுத்தப்படும்.
நெல் உற்பத்தியில் இந்தியாவில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம் பெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு தடையை உடைக்க பிரதமர் மோடி உதவினார். கொப்பரை விலை கிலோ ரூ.52-இல் இருந்து ரூ.95-ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.