400-க்கும் மேற்பட்டவர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் போலி சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் சேர்ந்தவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் 424 பேர் புதன்கிழமை ஆஜராகினர்.

துப்புரவு பணியாளர் மற்றும் தபால் பிரிவு பணியாளர் பணிகளில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் கடந்த 2015-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், தமிழகம் முழுவதும் 900 பேரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நியமனம் செய்தது. இந்த பணிக்கு 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் 10-ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்தப் பணிகளில் அதிக கல்வித்தகுதி கொண்ட பலர் போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து பணியில் சேர்ந்துள்ளனர். இந்த முறைகேட்டுக்கு, வங்கி அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில், போலியான கல்விச் சான்றிதழை சமர்ப்பித்து பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் என சுமார் 400 பேர் பணியில் சேர்ந்ததும், பணி நியமனத்துக்காக அவர்களிடம் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் லஞ்சம் வாங்கியதும் தெரியவந்தது. மேலும், பணியில் சேர்ந்த பலரும் உயர்கல்வி முடித்திருப்பது தெரிந்திருந்தும், அவர்கள் 8-ஆம் வகுப்பு வரை மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளதாக பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் போலி சான்றிதழ்களை வழங்கியிருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக, வங்கியின் அப்போதைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் நரேந்திரா, தொழிற்சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், போலி கல்விச் சான்றிதழ் வழங்கிய ஆசிரியர்கள், அந்த சான்றிதழை சமர்ப்பித்து பணியில் சேர்ந்தவர்கள் என மொத்தம் 446 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, போலி கல்விச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். விசாரணையின் போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 4 பேர் இறந்து விட்டனர். இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஜவாஹர் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞர் எம்.வி.தினகர், 442 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து, குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொள்வதற்காக வங்கியின் முன்னாள் தலைவர் நரேந்திரா உள்ளிட்ட 424 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர், 18 பேர் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் ஆஜரானவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை, வரும் ஜூன் 12-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். ஒரே நேரத்தில் 400-க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்ததால், நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.