வவுனியாவில் யாழ்ப்பாண பேருந்துகள் கஞ்சா சோதனை!


யாழ்ப்பாணத்திலிருந்து கண்டிக்கு சென்ற பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும், வவுனியா புளியங்குளம் பகுதியில் கீழே இறக்கி சோதனை செய்யப்படுகின்றனர். நேற்று இரவு இந்த சோதனை நடவடிக்கைகள் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டது. பயணப் பொதிகள், அடையாள அட்டை என்பவற்றை விசேட அதிரடிப்படையினர் துருவித்துருவி சோதனை செய்கின்றனர். சுமார், 15 நிமிட சோதனையின் பின்னரே பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று இரவு 7.15 மணியளவில் கண்டி சென்ற இ.போ.ச பேருந்து, இரவு 9.25மணியளவில் புளியங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள விசேட அதிரடிப்படையினரின் முகாமுக்கு முன்பாக அமைக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை நிலையத்தில் வழிமறிக்கப்பட்டது.பயணப்பொதிகளுடன் இறங்கி வருமாறு பயணிகளிற்கு உத்தரவிடப்பட்டது. பயணப்பொதிகள், அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு 15 நிமிடங்களின் பின்னரே பேருந்து பயணத்தை தொடர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் சோதனை நடவடிக்கையால் பயணிகள் குழப்பமும், அச்சமுமடைந்திருந்தனர். விசேட அதிரடிப்படையினரிடம் இது குறித்து வினவியபோது, தமது வழமையான நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளனர். புளியங்குளம் படையினரின் சோதனை நடவடிக்கை முடிவடைந்து பேருந்து சென்றபோது, ஓமந்தை நொச்சிமோட்டை பாலத்தில் கடமையிலிருந்த பொலிசாரும் பேருந்தை வழிமறித்து சோதனையிட முயன்றனர். புளியங்குளத்தில் விசேட அதிரடிப்படையினர் சோதனையை முடித்து விட்டனர் என பயணிகள் தெரிவித்ததையடுத்து, பொலிசார் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றனர். இதேவேளை, வவுனியா பொலிசாரை இது குறித்து வினவியபோது, கஞ்சா போதைப்பொருள் கடத்தல் பற்றிய தகவலையடுத்தே சோதனை நடவடிக்கையை முடுக்கி விட்டதாக உத்தியோகப்பற்றற்ற முறையில்  தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.