பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பவர் ஸ்டாலின்-எடப்பாடி!!

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பவர் திமுக தலைவர் ஸ்டாலின் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆனைமலை, பொள்ளாச்சி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் வேதனை அளிக்கிறது. துரதிருஷ்டவசமானது. இந்த சம்பவத்தை வைத்து திமுகவினர் அரசியல் செய்கின்றனர். மக்களிடம் தாங்கள் செய்த திட்டங்களைக் கூறி வாக்கு சேகரிக்க முடியாமல் ஸ்டாலின் இதுபோன்று அநாகரிகமாக செயல்படுகிறார்.
பொள்ளாச்சி சம்பவம் குறித்து முதலில் புகார் கொடுக்க கூறியதே பொள்ளாச்சி ஜெயராமன்தான். பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரே இந்தப் பிரச்னையை யாரும் அரசியல் செய்து ஆதாயம் தேடவேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. சிபிஐக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றங்கள் குறித்து அதிமுகவினர் மீது குறை கூறி வருகிறார் ஸ்டாலின்.
சில நாள்களுக்கு முன்பு கோவையில் இருந்து திமுக வேட்பாளர்கள் நேர்காணலுக்கு சென்ற சூலூரைச் சேர்ந்த அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், ஒன்றியச் செயலாளர் சன் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் கபிலன் ஆகியோர் ரயிலில் கர்ப்பிணிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்டவர்கள்.
கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மகன் மணிமாறன் தனக்கும், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்துள்ளார். இதைப் பற்றியெல்லாம் ஸ்டாலின் ஏன் பேசவில்லை.
கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட மனோஜ், சயன் ஆகியோர் கேரளத்தில் பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள். அவர்களுக்கு ஜாமீன் பெற்றுக் கொடுத்தவர் ஸ்டாலின்.
பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு ஆதரவாக இருப்பவர் திமுக தலைவர் ஸ்டாலின்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறார்.
தமிழகம் சட்டம், ஒழுங்கில் முதன்மை மாநிலம் என்று மத்திய அரசிடம் விருதுபெற்றுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் ஸ்டாலினுக்கு நெருக்கமான ரமேஷ், சாதிக் பாட்ஷா ஆகியோர் மர்மமான முறையில் இறந்ததாக வழக்குகள் கைவிடப்பட்டன.
சாதிக் பாட்ஷாவின் மனைவி, தனது கணவர் கொலை செய்யப்பட்டார் என ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற வழக்குகளை மீண்டும் கையில் எடுத்து விசாரிப்போம் என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.