செந்தில் பாலாஜி: வழக்கும் அபராதமும்!

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் வேட்பு மனுவை ஏற்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றும் வரும் நிலையில், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த தேர்தலில், அரவக்குறிச்சியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜியின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சியைச் சேர்ந்த ஏ.பி.கீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், ”2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்த போது, பணப்பட்டுவாடா காரணமாக, அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின், 2016 நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளது” எனச் சுட்டிக்காட்டியுள்ளார். ”செந்தில் பாலாஜியின் ஊழல் நடவடிக்கைகளால் தான் கடந்த முறை அரவக்குறிச்சி தொகுதிக்குத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பதால், இம்முறை அவரது வேட்புமனுவை ஏற்கக் கூடாது எனவும், அவ்வாறு அவரை போட்டியிட அனுமதித்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும்” எனவும் மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை நேற்று (ஏப்ரல் 27) விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, 2016ஆம் ஆண்டு இதே கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்ததை மறைத்து இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதாகக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக, மனுதாரருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், 15 நாட்களில் இந்த தொகையைச் செலுத்தவும் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.