குழந்தைகள் விற்பனை: வெளிவராத உண்மைகள்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த அமுதவல்லி என்ற ஓய்வு பெற்ற செவிலியர் குழந்தை இல்லாத தம்பதிகளுக்குக் குழந்தைகளை வாங்கி விற்பது தொடர்பாகக் கடந்த 23 ஆம் தேதி வெளியான ஆடியோ பேச்சைத் தொடர்ந்து, மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் வழங்கிய புகாரின் பேரில் நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இவ்விவகாரத்தில் சில வெளிவராத உண்மைகள் தற்போது
தெரியவந்திருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரிலுள்ள தட்டாங்குட்டை அருகேயுள்ள காட்டூர் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (55). ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கியில் இரவுக் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமுதவல்லி (50). இவர் செவிலியர் உதவியாளராக (FNA) சேலம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், போன்ற இடங்களில் பணியாற்றியிருக்கிறார். 2012ஆம் ஆண்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய போது விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார்.
தம்பதிகளை கணித்து குழந்தைகளை வாங்கும் அமுதவல்லி
பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய போது அந்த மருத்துவமனைகளில் பிரசவத்துக்கு வரும் பெண்களின் குடும்ப சூழ்நிலையைக் கணித்து, இவர்களால் குழந்தையை வளர்க்க முடியாது எனத் தெரியும் தம்பதிகளிடம் ஆறுதலாகப் பேசி, அவர்களின் சம்மதத்துடன் குழந்தைகளை விலைக்கு வாங்கி வெளியூரில் உள்ள வசதியான குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
தருமபுரியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக ஏற்பட்ட பண பேரத்தில் குழந்தையை விலை கொடுத்து வாங்க முடியாத தம்பதி, இந்த தகவலை அவர்களுக்குத் தெரிந்த ஒரு நண்பரிடம் சொல்லி விலையைக் குறைத்து வாங்க முடியுமா என்று கேட்டுள்ளனர்.
இந்த செய்தி ராசிபுரத்தில் உள்ள 24*7 என்ற முழுநேர செய்திகளைக் கொடுத்துவரும் ஒரு தொலைக்காட்சி செய்தியாளருக்குத் தெரிய வந்திருக்கிறது. தருமபுரியைச் சேர்ந்த சதீஸ்குமார் என்ற பெயரில் அமுதவல்லியிடம் பேசிய அந்த செய்தியாளர் பேசும் ஆடியோ மூலமாகத் தான் இந்த செய்தி வெளியுலகத்துக்கு வந்தது.
அமுதவல்லியிடம் பேசும் அந்த செய்தியாளர் யார் என்பதை அவருடைய ஆடியோ வாய்ஸ்சை வைத்து நண்பர்கள் மூலம் தெரிந்து அவரிடம் பேசினோம். “என்னுடைய பெயரையும், முழு விபரத்தையும் வெளியிட்டால் எனக்குப் பல சிக்கல்கள் வரும். அதனால் என்னைப் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசினார்.
சார், இந்த வேலையை நான் மட்டும் செய்யவில்லை. என்னோடு நான்கைந்து நண்பர்கள்சேர்ந்துதான் இதைச் செய்தோம். ஒரு மாதம் முன்பாகவே சேலத்திலிருந்து, உங்க ஊரில் குழந்தைகள் விற்பனை நடக்கிறது. திருச்சி, மதுரை, நெல்லை, திண்டுக்கல் எனப் பல ஊர்களிலிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு போகிறார்கள் என்று சொன்னார்கள்.
அமுதவல்லி சிறிய புள்ளி தான்
எல்லா தொடர்புகளுமே முகத்துக்கு முகம் பார்க்காமல், செல்போன் மூலமே இருப்பதால் ராசிபுரத்தில் உள்ள பெண் யார் என்பதை எங்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. கடைசியாகத்தான், செல்போன் மூலமாக பேசியதில், இந்த அமுதவல்லி யார் என்பது தெரியவந்தது. அதன் பின்னர் தான் அதை வாட்ஸ் அப்பில் வெளியிட்டோம்.
இந்த நெட்வொர்க்கில் அமுதவல்லி ஒரு சிறிய புள்ளி தான். இதைப்போல வெளியூர்களில் பலர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் போலீசார் விசாரணையின் கீழ் கொண்டு வருவார்களா? என்பது தெரியவில்லை. அமுதவல்லி மூலமாக விற்பனை செய்யப்பட்டுள்ள எல்லா குழந்தைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ் கொடுத்துதான் விற்பனை செய்திருக்கிறார்கள்.
அமுதவல்லியிடம் பேசியதிலிருந்தும், அக்கம் பக்கம் விசாரித்ததிலிருந்தும் பிறந்த இரண்டொரு நாள் ஆன பல குழந்தைகளை தன்னுடைய வீட்டிலேயே கொண்டுவந்து பல வாரங்கள் வைத்திருந்து பின்னர் நல்ல விலைக்கு விற்பனை செய்துள்ளார்.
கடந்த ஆறு மாதம் முன்பாக ராசிபுரம் பேருந்து நிலையத்தின் அருகில் அமுதவல்லி வீட்டுக்குப் போகும் வழியில் சாக்கடையில் ஒரு குழந்தை செத்துக் கிடந்தது. இந்த குழந்தை அமுதவல்லி வாங்கிக்கொண்டு வந்த குழந்தையாகத்தான் இருக்கவேண்டும் என்ற சந்தேகம் உள்ளது. இதைப்பற்றியும் போலீசார் விசாரிக்க வேண்டும்.
குழந்தையை விற்பனை செய்பவர்களுக்கு சில ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, அந்த குழந்தையைப் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார் அமுதவல்லி. இந்த நெட்வொர்க்கில் உள்ள எல்லோரையும் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டாலும், குறைந்தபட்சம், வியாபாரமாகச் செய்த அமுதவல்லி மற்றும் பொய்யான பிறப்புச் சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள் மீதாவது போலீசார் முறையாக நடவடிக்கை எடுத்தால் நல்லது.” என்கிறார் அந்த செய்தியாளர்.
அமுதவல்லியின் பின்னணி
அமுதவல்லியைப் பற்றித் தெரிந்துகொள்ள அவர் பணியாற்றிய அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அவருடன் பணியாற்றிய ஊழியர்கள் கூறுகையில், ”இந்த அம்மாவின் சொந்த ஊர் பட்டணத்தில் உள்ள காலனி பகுதியாகும். திருச்செங்கோடு, வேலூர், நாமக்கல் மருத்துவமனையில் வேலையிலிருந்தபோது அங்கே இந்தம்மாவுக்குக் குறைவான நேரம் தான் வேலை இருக்கும், மீதி நேரம் எல்லாம் குழந்தைகளை விலைக்கு வாங்கி விற்கும் வேலையைச் செய்து வந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்திலேயே சிறப்பான முறையில் இயங்கும் இந்த ஹாஸ்பிடலில் காலை எட்டு மணிமுதல், மாலை ஐந்து மணி வரை வேலை அதிகம் இருக்கும். அதற்குப் பிறகும் மூன்று மணி நேரம் மீட்டிங் இருக்கும். அதனால், தன்னுடைய சொந்த வேலையைக் கவனிக்க நேரம் போதவில்லை என்பதால் வேலையை ரிஸைன் செஞ்சிட்டு போயிட்டாங்க.
இங்கே டிரான்ஸ்பரில் வரும்போதே இந்த அம்மாவுக்கு இரண்டு கார், இரண்டு வீடு சொந்தமா இருந்தது. இப்போது இன்னொரு வீடு சொந்தமா வாங்கியிருக்காங்க. மருமகன் மூலமாக அம்மு டிராவல்ஸ் என்ற பெயரில் நான்கைந்து கார் வாடகைக்கு ஓடிக்கிட்டு இருக்கு. ராசிபுரம் பக்கமுள்ள பட்டணத்தில் இந்தம்மா வீடு காலனிப் பகுதியிலிருந்ததால், குழந்தையை வாங்க வரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இந்த குழந்தை காலனிப் பகுதியைச் சேர்ந்த குழந்தை என்று வாங்க மாட்டார்கள் என்பதால், தன்னுடைய வீட்டை ராசிபுரம் பேருந்து நிலையத்துக்குப் பக்கமாக மாற்றிக்கிட்டாங்க” என்று அதிர்ச்சியளிக்கும் தகவலை தெரிவித்தார்கள்.
குழந்தைகளை விற்க ஏற்ற இடம்
அமுதவல்லியின் வீடு இருக்கும் இடத்துக்குச் சென்றோம், ராசிபுரம் பேருந்து நிலையம் பின்பக்கம் உள்ள டாஸ்மாக் ஏ.சி. பாருக்கு பின்னால் தனியாகக் காட்டுக்குள் அமைந்திருக்கிறது அமுதவல்லியின் வீடு. இது குழந்தைகளைக் கொண்டுவந்து வியாபாரம் செய்ய ஏற்ற இடம் என்பதைக் காட்டியது.
அமுதவல்லியிடம் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணை முடித்து அவரை நேற்று இரவு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் செய்துள்ளனர். நேற்று மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஈரோடு அருள்சாமி, நிஷா, செல்வி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ராசிபுரம் மற்றும் நாமக்கல்லைச் சேர்ந்த நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் சிலர் குழந்தைகளைத் தத்து எடுக்கத் தேவையான பத்திரம் தயாரித்துக் கொடுத்ததாகக் கூறி அவர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் முக்கிய காவல்துறை அதிகாரிகளிடம் பேசும்போது, “அமுதவல்லி கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார். யாருக்குமே நேரடியான தொடர்புகள் இல்லாமல் அமுதவல்லியின் செல்போன் மூலம் தான் எல்லா வியாபாரமும் நடந்துள்ளது. கொல்லிமலை, ஈரோடு, குமாரபாளையம், தருமபுரியை மையமாக வைத்துத் தான் இந்தம்மா குழந்தைகளை வாங்கியுள்ளார். தமிழகத்தின் பல ஊர்களுக்கு குழந்தைகளை விற்பனை செய்துள்ளார்” என்று தெரிவித்தனர்.
செயற்கை கருவூட்டல் மருத்துவமனைகளில் தொடர்பு
”இந்த கும்பலிலிருந்த பலரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சிம்கார்டுகளை மாற்றியுள்ளனர். தற்போதுள்ள அமுதவல்லியின் செல்போனில் கிடைத்துள்ள தரவுகளின் படியும், அவர் சொன்ன தகவல்களின் படியும் கடந்த ஒரு ஆண்டுக்குள் எட்டு குழந்தைகளை விற்பனை செய்துள்ளனர்.
அதில், ஐந்து குழந்தைகளை கொல்லிமலையிலிருந்து வாங்கியுள்ளனர். இந்த குழந்தைகளைக் கொல்லிமலை மேலே இருக்கும் பவர்காடு என்ற இடத்தில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் ஜீப் ஓட்டுநராக பணியாற்றும் முருகேசன் என்பவர்தான் விலைக்கு வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்த முருகேசனின் சொந்த ஊர், நாமக்கல் அருகில் உள்ள பொட்டிரெட்டிப்பட்டியாகும். இவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாக வேலைக்குச் சேர்ந்துள்ளார். வேலையில் சேர்ந்தது முதல் பவர்காட்டிலேயே தான் இருந்து வருகிறார். இவரும், அமுதவல்லியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
சேலம், திருச்சி, ஈரோடு, தருமபுரி போன்ற ஊர்களில் உள்ள செயற்கை கருவூட்டல் மருத்துவமனைகளில் வேலை செய்யும் பலர் அமுதவல்லியுடன் தொடர்பிலிருந்துள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் தங்களின் செல்போன் எண்ணை மாற்றி விட்டனர். இதில் ஒரு சிலரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளோம். இன்னும் சிலர் அமுதவல்லியைப் பிடித்ததும் தலைமறைவாகி விட்டனர்” என்று சொல்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்
”கடந்த இரண்டு ஆண்டில் கொல்லிமலையில் உள்ள பவர்காடு ஆரம்பச் சுகாதார நிலையத்தில், பிறந்த இருபது குழந்தைகளின் பெற்றோர்களிடம் தற்போது குழந்தைகள் இல்லை. அதில், சிலர் முருகேசன் மூலமாக அமுதவல்லியிடம் குழந்தையை விற்றுள்ளனர். சிலர் மலைமேல் உள்ள தங்கள் உறவினர்களுக்குத் தத்துக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள்.
கொல்லிமலையில் உள்ள மலைவாழ் சமூக மக்களின் வழக்கப்படி, அவர்களுடைய உறவினர்களுக்குள் ஆண் குழந்தைகளை தத்துக்கொடுப்பதும், பெண் குழந்தைகளைத் தத்து எடுப்பதும் இன்றளவும் வழக்கத்தில் உள்ளது. போலீசார் விசாரணைக்குப் போகும்போது குழந்தை இல்லாமல் உள்ள வீடுகளைச் சேர்ந்த குழந்தைகளை உண்மையிலேயே உறவினர்களுக்குத்தான் தத்து கொடுத்துள்ளார்களா? என்பதை ஒரு தனிப்படையினர் விசாரித்து வருகிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குழந்தையை வாங்கியவர்களைப் பற்றியும், விற்றவர்களைப் பற்றியும் முழுமையான தகவல்கள் இல்லை. இதையெல்லாம் கண்டுபிடித்து, குழந்தையை வாங்கியவர்களைக் கண்டுபிடித்தாலும், இரண்டு மூன்று ஆண்டுகள் ஒரு பெற்றோரிடம் வளர்ந்து வரும் ஒரு குழந்தையை இப்போது போலீசார் பிடுங்கிக்கொண்டு வந்து அந்தக் குழந்தையைப் பெற்றவர்களிடமும் கொடுக்கமுடியாது.
நேராக அரசு காப்பகத்தில் தான் கொண்டுபோய் ஒப்படைக்கவேண்டும். இது குழந்தையை வளர்த்தவர்களை மட்டுமல்ல அந்த குழந்தையின் மனதையும் பெரிய அளவில் பாதிக்கும். அதனால், ஒரு வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளை மட்டும் மீட்டுக் கொண்டுவந்து விடலாம் என்ற முயற்சியில் உள்ளோம். புலி வாலை பிடித்தது போல உள்ள இந்த விசாரணை இன்னும் எத்தனை நாள் போகும் யார், யாரெல்லாம் சிக்குவார்கள் என்று உறுதியாகச் சொல்லமுடியாது.” என்று கூறுகின்றனர் சாப்பாட்டுக்கே வழியில்லாத கிராமப்புற ஏழை மக்களின் வறுமைக்கும், குழந்தை இல்லாத பெற்றோர்களின் பாசப் போராட்டத்துக்கும் இடையில் நாமக்கல் போலீசார் சிக்கிக்கொண்டுள்ளனர். குழந்தை பெற்றவர்கள், விற்றவர்கள், வாங்கியவர்கள், விசாரணை செய்துவரும் போலீசார் என இதில் யார் வெற்றி பெற்றாலும் பாதிப்பு குழந்தைகளுக்கே என்பதுதான் வேதனையான உண்மை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.