ஐம்பது விஹாரைகளுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளால் அச்சுறுத்தல்!

நாட்டின் 50 விஹாரைகளை இலக்குவைத்து, பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எனவே, வெசாக் மற்றும் பொசன் நிகழ்வுகளை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். காணாமற் போயுள்ளதாகக் கருதப்படும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின், மனைவியான சந்தியா எக்னெலிகொடவுக்கு, அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான வழக்கு இன்று (திங்கட்கிழமை) ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போது, நீதிமன்றில் ஆஜரான பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், சந்தியா எக்னெலிகொடவுக்கு நஷ்டஈடாக 50 ஆயிரம் ரூபாவை வழங்கினார். இதனால், இந்த வழக்கு விசாரணையானது இன்றுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, சிறைச்சாலைக்கு செல்வதற்காக நீதிமன்றிலிருந்து வெளியில் வந்த கலகொட அத்தே ஞானசார தேரரிடம், நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. எனினும், இவ்விடயம் தொடர்பில் தன்னால், தற்போது எதுவும் கூற முடியாது என்று தெரிவித்தார். அத்தோடு, நாடளாவிய ரீதியாக உள்ள 50 விஹாரைகளை இலக்குவைத்து தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், எனவே வெசாக் – பொசொன் நிகழ்வுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், இவ்விடயம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வேண்டுமெனில் தன்னை சிறைச்சாலையில் வந்து சந்திக்குமாறும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.