கமலுடன் ஐஏஎஸ் சாதனையாளர்!

ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற கேரள மாணவி ஸ்ரீதன்யா இன்று (ஏப்ரல் 27) மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை மத்திய தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. இந்த தேர்வில் கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம் இடியம்வயலைச் சேர்ந்த ஸ்ரீதன்யா சுரேஷ் தேர்ச்சி பெற்றார். குரிசியா பழங்குடியினத்தைச் சேர்ந்த ஸ்ரீதன்யா அகில இந்திய அளவில் 410ஆவது இடத்தைப் பிடித்தார். இவரது பெற்றோர் சுரேஷ், கமலம் இருவருமே கூலி வேலை செய்து வருகின்றனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதலாவது பழங்குடியினப் பெண் என்ற பெருமையை பெற்றவர் ஸ்ரீதன்யா. இவருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். வயநாடு தொகுதிக்குப் பிரசாரத்திற்கு வந்த ராகுலை ஸ்ரீதன்யா மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சந்தித்தனர். இதனிடையே பேட்டி ஒன்றில் பேசிய ஸ்ரீதன்யா, நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசனை சந்திக்க விரும்புவதாக கூறியிருந்தார். இந்நிலையில், ஸ்ரீதன்யாவை சென்னை வரவழைத்து கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். பின்னர் ஸ்ரீதன்யாவும், கமலும் சிறிது நேரம் உரையாடினர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த ஸ்ரீதன்யா, கமலை சந்தித்தது சிறந்த அனுபவமாக இருந்தது என்றும், அவர் ஒரு சிறந்த மனிதர் என்றும் கூறியுள்ளார். அவரைத் தொடர்ந்து பேசிய கமல், ‘ஸ்ரீதன்யா மிகப்பெரிய சாதனையாளர்; அதுதான் அவரின் முதல் தகுதி. ஸ்ரீதன்யாவின் தேர்ச்சி என்பது நாடு பெருமைப்பட வேண்டிய விஷயமாகும். அவருடைய இனத்தில், குலத்தில் உறவுக்காரர்கள் யாரும் செய்யாத விஷயத்தை இவர் செய்திருக்கிறார்” என்று பெருமிதம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.