தனுசு ராசி நேயர்களே: ஹரிஷுக்கு இரு நாயகிகள்!
ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கும் தனுசு ராசி நேயர்களே படத்தின் இரண்டாவது கதாநாயகியாக ரெபா மோனிக்கா ஜான் இணைந்துள்ளார்.
புத்தகம், ஜன்னல் ஓரம், ஜீவா உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ள சஞ்சய் பாரதி ‘அஸ்ட்ரோ காமெடி’ ஜானரில் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் தனுசு ராசி நேயர்களே. ஜோசியம் தொடர்பான திரைக்கதையை காமெடி கலந்து உருவாக்கியுள்ள அவர் ஏ.எல். விஜய்யிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்திற்குப் பின் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தி கதாநாயகியாக இணைந்திருந்தார். தற்போது இரண்டாவது கதாநாயகியாக ரெபா மோனிகா ஜான் ஒப்பந்தமாகியுள்ளார்.
படத்தில் இணைந்தது குறித்து ரெபா மோனிகா ஜான், “இந்த படத் தயாரிப்பு நிறுவனம் மலையாளத்தில் நிறைய படங்களை தயாரித்துள்ளது. அவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். அவர்கள் தான் எனது பெயரை பரிந்துரைத்தார்கள். சஞ்சய்யும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க என்னை பரீசிலித்துவந்தார். கதையைக் கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 22ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ரெபா மோனிகா விரைவில் படக்குழுவுடன் இணையவுள்ளார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திலும் ரெபா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தனுசு ராசி நேயர்களே படத்தை பழசி ராஜா, காயங்குளம் கொச்சுன்னி போன்ற வெற்றிப் படங்களை தந்த பிரபல மலையாள தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ கோகுலம் மூவிஸ் இப்படத்தினை தயாரிக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார்.
கருத்துகள் இல்லை