ஐபிஎல்: ஈடன் கார்டனில் வாண வேடிக்கை!

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 28) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.
இரவு எட்டு மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

கொல்கத்தா அணி சார்பில் சுப்மன் கில்லும் கிறிஸ் லின்னும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே அதிரடி காட்டத் தொடங்கிய இருவரும் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். 29 பந்துகளைச் சந்தித்த கிறிஸ் லின் 54 ரன்கள் சேர்த்து ராகுல் சஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும். அப்போது கொல்கத்தா அணி 9.3 ஓவர்களில் 96 ரன்கள் சேர்த்திருந்தது. ரன் ரேட் பத்துக்கும் அதிகமாக இருந்ததால் அதை மேலும் அதிகரிக்க வழக்கமாக பின்வரிசையில் இறங்கும் ரஸ்ஸல் மூன்றாவது வீரராக களமிறக்கப்பட்டார். வந்த வேகத்தில் வாணவேடிக்கை காட்டத் தொடங்கினார். சுபமன் கில்லும் அவருடன் இணைந்து அடித்து ஆடினார். இதனால் பந்துகள் பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் பறந்துகொண்டே இருந்தன. 76 ரன்களில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். 7 பந்துகளைச் சந்தித்த அவர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 15 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 40 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்த ரஸ்ஸலையும் மும்பை பந்துவீச்சாளர்களால் ஆட்டமிழக்கச் செய்யமுடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 232 ரன்கள் குவித்தது.
233 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ரன் ஏதும் எடுக்காமல் டி காக் வெளியேற்றப்பட்டார். ரோஹித் ஷர்மாவும் 12 ரன்களுக்கு மேல் தாக்குபிடிக்கமுடியவில்லை. எவின் லெவிஸ் (15), சூர்யகுமார் யாதவ் (26), பொலார்ட் (20) என மும்பை அணி தனது விக்கெட்டுகளை வரிசையாக இழந்தது. இதனால் தோல்வியின் பிடியில் மும்பை அணி சிக்கியது. ஆனால் பின்னர் வந்த ஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டம் அந்த அணிக்கு வெற்றிக் கனவை காட்டியது. வந்த வேகத்தில் அரை சதம் கடந்த அவர் குறைந்த பந்துகளில் சதத்தை நோக்கி நகர்ந்து ஆட்டத்தை குறுகிய நேரத்தில் விறுவிறுப்பாக்கினார். ஆனால் எதிர்பாராதவிதமாக 91 ரன்களில் ஆட்டமிழந்தார். 34 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 6 பவுண்டரிகள், 9 சிக்ஸர்களுடன் இந்த ரன்களை அடித்தார். குர்ணல் பாண்டியா 24 ரன்களில் வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணியால் 198 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் 34 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
40 பந்துகளில் 80 ரன்களை சேர்த்த ரஸ்ஸல் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார். 4 ஓவர்கள் பந்துவீசி 2 விக்கெட்டுகள் கைப்பற்றியதுடன் 25 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்தார். இதனால் ஆட்டநாயகன் விருது அவருக்கு சொந்தமானது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.