தலைவர் பிரபாகரன் ஏன் இயக்குனர் மகேந்திரனைத் தேர்ந்தெடுத்தார்?

மகேந்திரனைத் தவிர வேறு சில தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குனர்களும் வன்னி வந்து சென்ற போதும் தன் மக்களுக்கு சினிமா கற்றுக் கொடுக்கவும்
தன்னுடன் சினிமா பற்றி உரையாடவும் ஏன் இயக்குனர் மகேந்திரனைத் தேர்ந்தெடுத்தார்? தமிழ்நாட்டில் தமிழ் உணர்வுள்ள, புலிகளை ஆதரிக்கின்ற இன்னும் பல இயக்குனர்கள் இருந்தும் நம் நாட்டு இயக்குனர் பாலுமகேந்திரா இருந்தும தலைவர் ஏன் இயக்குனர் மகேந்திரனை வன்னிக்கு வரவழைத்தார்?;

அறம்!

தலைவர் எப்பவும் அறத்தின்பால் நம்பிக்கை கொண்டவர். அவர் சினிமாவை நேசித்தார் என்பது உண்மைதான். ஆனால் அறத்தைப் பேணும் சினிமாக்களையே அவர் நேசித்தார். அத்தகைய படங்களை இயக்கும் இயக்குனர்களையே மதித்தார். அவர்களே தன் மக்களுக்கு உதாரண புருசர்களாகவும் வழிகாட்டிகளாகவும் இருக்க வேண்டும் என விரும்பினார். அவர் இயக்குனர் மகேந்திரனைத் தேர்ந்தெடுக்க காரணம் இந்த அறம்தான்

இங்கு நான் அறம் எனக் கூறும் போது அது விஷன், தொலைநோக்கு, அணுகுமுறை, கொள்கை என்வற்றைக் குறிக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

மகேந்திரன் அவர்கள் வன்னியில் இருந்து திரும்பிய பின்னர் தலைவருடனான சந்திப்பின் போது தாங்கள் பேசிக் கொண்ட விடயங்களைச் சொல்லும் போது, 'உங்கள் முள்ளும் மலரும் படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு மிகவும் பிடித்திருந்தது' எனத் தலைவர் தன்னிடம் சொன்னதாகச் சொல்கிறார். உண்மையில் அந்தக் கிளைமாக்ஸ் தலைவருக்குப் பிடிக்கக் காரணம் என்ன?

பலரும் அந்த கிளைமாக்சை அண்ணன் தங்கை சென்டிமென்ட்டுக்கூடாகப் பார்ப்பதுண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. அது மக்கள் சக்தியின் பலத்தைக் காட்டும் ஒரு உன்னதமான, எளிமையான கிளைமாக்ஸ். அதனாற்தான் அது தலைவரின் மனதில் அவ்வளவு தூரம் பதிந்துள்ளது. பொதுவாக தமிழ்ச் சினிமாப் பண்பாட்டில் மக்கள் பார்வையாளர்களாக இருப்பார்கள். ஹீரோக்கள் அவர்களுக்காக சண்டையிட்டு வெல்வார்கள். மகேந்திரன் அவர்களுடைய படங்களில் அது எதிர்மாறாக இருக்கும். ஹீரோ மக்களால் தோற்கடிக்கப்படுவான் அல்லது திருத்தப்படுவான். முள்ளும் மலரும் படத்தில் மக்கள் வெல்கிறார்கள். ஹீரோ (ரஜனிகாந்) விழுந்தாலும் மீசையில் மண் முட்டாதவன் போல் நடந்து கொள்கிறான்.

இயக்குனர் மகேந்திரன் அவர்கள் ஹீரோயிசத்தை வளர்த்தவர் அல்ல. அவர் மக்கள் சக்தியை வெல்ல வைப்பார். உதிரிப்பூக்கள் படத்தில் மக்கள் சக்தியின் பலம் இன்னொரு பரிமாணத்தில் காட்டப்படுவதைப் பார்க்கலாம். அங்கு மக்கள் அதர்மத்துக்குத் தண்டனை வழங்குகிறார்கள்.

இயக்குனர் மகேந்திரன் அவர்களிடம் தலைவருக்குப் பிடித்த இன்னொரு அறம், பெண்கள் சார்ர்ந்து தனது படைப்புகளில் அவர் கடைப்பிடிக்கிற அணுகுமுறையாகும். இயக்குனர் மகேந்திரன் எப்பவும் பெண்களை பலமானவர்களாகவும் ஆண்களைவிடவும் நிதானமானவர்களாவும் நீதியானவர்களாகவும் சித்தரிப்பார். முள்ளும் மலரும் படத்தில் மங்கா பாத்திரத்தின் ஊடாக இதை அற்புதமாகச் செய்வார். உதிரிப்பூக்களில் வரும் 4 பெண் பாத்திரங்களுமே ஏதோ ஒரு வகையில் பெண்களை மேன்மைப் படுத்துபவர்களாகத்தான் இருக்கின்றனர். நெஞ்சத்தைக் கிள்ளாதேயில் ஒரு படி மேலே போய் ஆண்களை மதிலில் உட்காந்து அரட்டையடித்துக் கொண்டும் போறவாற பெண்களை கேலி செய்தபடியும் இருக்கும் வெட்டிப் பசங்களாகவும் அவர்களை திருத்தும் ஒரு நிதானமான தைரியமான ஆளுமையாக பெண் பாத்திரத்தை  காட்டுவார். அதிலும் அந்தப் பெண் ஒரு புற்றுநோய் நோயாளி என்பது பெண்கள் எவ்வளவு துன்பங்களை தமக்குள் அடக்கி வைத்திருக்கிறார்கள் என்பதற்கான குறியீடு ஆகும். தமிழ்ச் சினிமாக்கள் பெண்களை கொச்சைப்படுத்துவதையும், அவர்களை சந்தைப் பண்டங்களாக பாவிப்பதையும் இன்னமும் நிறுத்தாத சூழலில் மகேந்திரன் 70களிலேயே பெண்களை மேன்மைப்படுத்துவதை அறமாக கொண்டிருந்தார். அதனாற்தான் தலைவர், 'தமிழ்நாட்டு சினிமாக்காரர்களிடம் சொல்லுங்கள் பெண்களைக் கொச்சைப்படுத்தி படம் எடுப்பதை நிறுத்தச் சொல்லி' என்னும் தன் கோரிக்கையை இயக்குனர் மகேந்திரனிடம் முன் வைத்தார், ஏனெனில் அதைச் சொல்லவதற்கு மிகவும் தகுதியானவர் இயக்குனர் மகேந்திரன்தான்.

தன் படைப்புகளில் மட்டுமின்றி தன் சொந்த வாழ்க்கையிலும் பெண்களை மதிப்பவர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர் இயக்குனர் மகேந்திரன் அவர்கள். அது மட்டுமின்றி 'ஒரு படைப்பாளிக்கு  ஆரோக்கியமான உடலும் கூர்மையான மனமும் இருக்க வேண்டும்' எனச் சொல்பவர் மகேந்திரன் அவர்கள்  அதன் வழி நடப்பவர். உண்மையில் தலைவர் நீண்ட நேரம் மனம்விட்டுப் பேசுவதற்கும் ஒன்றாக உணவருந்துவதற்கும் இயக்குனர் மகேந்திரன் தகுதியுடையவரானதற்கு அவருடைய இத்தகைய ஒழுக்கங்கள் பிரதான காரணங்களாகும். அவ்வாறான ஒழுக்கம் அற்றவர்களுக்கு அருகில் அமர்வதற்கும் அவர்களுடன் நீண்ட நேரத்தைச் செலவழிப்பதற்கும் தலைவர் பிரபாகரன் போன்ற ஒரு ஆளுமைக்கு உடலும்  மனமும் கூசும் என்பதே யதார்த்தம்.

தன் படைப்புகளில் மட்டுமின்றி சினிமா தயாரிப்பு முறைமையிலும் அறத்தைக் கடைப்பிடித்தவர் இயக்குனர் மகேந்திரன். நிதர்சனம் தயாரிப்பில் உருவான ஆணிவேர் என்னும் படத்தை இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் ஆஸ்பத்திரியில் நோயாளர் வார்ட் இல் ஒரு காட்சி. அதற்காக புலிகளின் வைத்தியப் பிரிவை நாடியுள்ளனர். அவர்களும் காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக வலு மகிழ்ச்சியாக தங்கள் ஆஸ்ப்பத்திரியில் நோயாளர் தங்கியிருக்கும் ஒரு வார்ட்டை படப்பிடிப்புக்கு வழங்கும் ஏற்பாட்டில் வேகமாக இறங்கினர். இதனைக் கண்ட ஜோன் அவர்கள் உனடியாக அந்த ஏற்பாட்டைத் தடுத்து  நிறுத்தினார். அவர் சொன்ன காரணம், 'நோயாளிகளை தொந்தரவு செய்வது சினிமா தர்மம் அல்ல. இப்படி நான் செய்து அதை அப்பா அறிந்தால் அவர் என்னைக் கொன்று போடுவார்'.

அதன் பின்னர் டம்மி வார்ட் ஒன்று அவர்களுக்கு தயார் செய்து கொடுக்கப்பட்டது. காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக மேற்கத்தைய படப்பிடிப்பாளர்கள் கூட இத்தகையை தவறுகளை எங்கள் நாடுகளில் வந்து செய்வதை நான் கண்டுள்ளேன். (தங்கள் நாடுகளில் செய்ய சட்டம் அனுமதிக்காது). இந்நிலையில் ஒரு தமிழ்நாட்டு இயக்குனரிடம் இத்தகையை அறம் இருப்பது என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

A Film By என்னும் தங்கள் பெயருக்கு முன்னால் எழுதும் பழக்கம் இன்னமும் தொடர்கிறது. அப்படிப் போடுவது அறம் அல்ல இப்ப அது நாகரீகமும் அல்ல என்று எமது இயக்குனர்கள் பலருக்கு நான் அப்பப்போ சொல்லவதுண்டு. ஆனால் அதை யாரும் கருத்தில் கொள்ளவதில்லை. A Film By  என்று தம் பெயரைப் போடுவதில் அப்படியொரு மோகம் பலருக்கு. உண்மையில் அதன் அர்த்தம் 'இந்தப் படத்தின் சொந்தக்காரன் இதன் இயக்குனராகிய நான் மட்டுமே' என்பதாகும். பாலுமகேந்திரா கூட இந்த A Film By  என்னும் போடும் பழக்கத்தை கடைசிவரை கைவிடவில்லை என்பதும் எனக்கு ஆச்சரியம்தான். தன்னுடைய படங்களின் அதிகமான பணிகளை அவரே செய்வதால் அவர் அப்படிப் போடுவதற்குத் தகுதியானவராக இருக்கக் கூடும்.

ஆனால் மகேந்திரன் அவர்கள் 70களிலேயே அந்த செற்பிரயோகத்தை ஒரு போதும் பயன்படுத்தவில்லை. அவர் அதை வெறுத்தார். அத்தகையை உரிமை கோரலுக்கு எதிராகவும் இருந்தார். அதற்கு அவர் சொல்லும் விளக்கம், "என் படங்களில் 'A Film by Mahendran' என்று நான் போடுவதில்லை. நல்ல ஒளிப்பதிவாளர், நல்ல நடிகர்கள், நல்ல படத்தொகுப்பாளர் போன்றோர் அமைந்தால்தான் கதைக்கு ஏற்ற சரியான மனநிலையை ஏற்படுத்திப் பார்வையாளர்களைக் கதைக்குள் இழுக்க முடியும். இத்தனை பேர் உழைப்பும் இருந்து அந்தப் படத்தை எப்படி நான் என்னுடைய படமாக மட்டும் சொந்தம் கொண்டாடிக்கொள்ள முடியும்?"


நன்றி"அரங்கம்" மின்னிதழ்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.