ராணுவ வீரர்களின் தியாகத்திலும் மோடி ஆதாயம் தேடுகிறார்!!

ராணுவ வீரர்களின் தியாகத்தையும் பிரதமர் மோடி, தேர்தல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துகிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சோழிங்கநல்லூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது:
நம் கையில் மாநில அரசு; நாம் கைகாட்டுவதே மத்திய அரசு என்பதை உறுதிப்படுத்தும் பொதுக்கூட்டமாக இது நடைபெறுகிறது.
40 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற உள்ளது. சென்னையின் மேயராக நான் 2 முறைகள் இருந்தபோதும், தமிழகத்தின் முதல்வராக கருணாநிதி 5 முறைகள் இருந்தபோதும், சென்னைக்கும் தமிழகத்துக்கும் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆண்டுதோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று மோடி கூறினார். அப்படியென்றால், 5 ஆண்டுகளில் 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திருக்க வேண்டும். ஒருவருக்குக்கூட வழங்கவில்லை.
வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மத்திய பாஜக ஆட்சி தோல்வி அடைந்துள்ளது. இதனை வெளியில் தெரிவிக்கக் கூடாது என்று தேசிய புள்ளியியில் ஆணையத்தின் தலைவர் தடுக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாகவே அந்தத் தலைவர் தன்னுடைய பதவியிலிருந்து
விலகிவிட்டார்.
சிபிஐ, உச்சநீதிமன்றம் போன்ற தன்னாட்சி அமைப்புகளை சுயமாக செயல்படவிடாமல் மோடி அரசு தடுத்துள்ளது. பாஜக ஆட்சியில் ராணுவத்தையாவது விட்டு வைத்தார்களா என்றால், அதுவும் இல்லை. ரஃபேல் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். இப்போது, ராணுவ வீரர்களின் தியாகத்தை மோடி தேர்தல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துகிறார். விஞ்ஞானிகளின் சாதனையையும் தன்னுடைய சாதனையாகக் காட்டிக் கொள்கிறார். எல்லாவற்றிலும் தான் மட்டுமே என்று காட்டிக் கொள்பவராகத்தான் மோடி உள்ளார்.
மத்திய பாஜக ஆட்சிக்கு அடிபணிந்து போகும் ஆட்சியாக அதிமுக ஆட்சி இருக்கிறது.
கொடநாடு விவகாரம் குறித்து நான் பேசக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது நீதிமன்றமே நான் பேச தடை விதிக்கவில்லை. அதனால், முன்பைவிட இன்னும் அதிமாகப் பேசுவேன்.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம்தான் முதலில் கூறினார். அந்த மரணம் குறித்து திமுக ஆட்சி வந்ததும் உரிய விசாரணை மேற்கொண்டு, தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவரின் உடலில் இரண்டு கட்டிகள் வந்துவிட்டால், அதில் ஒரு கட்டியை மட்டும் அகற்றலாம் என மருத்துவர்கள் கூற மாட்டார்கள். ஏனென்றால், மற்றொரு கட்டியால் உயிருக்கே ஆபத்து வந்துவிடலாம். அதைப்போல, மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள இரு ஆட்சிகளையுமே அகற்ற வேண்டும் என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.