தமிழக வாழ்வாதார பிரச்னைகளுக்கு திமுகதான் காரணம்: அன்புமணி!!

தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னைகள் அனைத்துக்கும் திமுகதான் காரணம் என்றார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
கடலூரில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எங்களைத் திட்டுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார். நீட் தேர்வு திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டதுதான். தற்போது அதை எதிர்த்து திமுக போராடுகிறது. காவிரி டெல்டா பகுதியில் பெட்ரோ கெமிக்கல், மீத்தேன் திட்டங்களுக்கு கையெழுத்துப் போட்டதும் அவர்கள்தான். தற்போது இந்தத் திட்டங்களை எதிர்ப்பதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து வைத்தவர் கருணாநிதி. அதன் விரிவாக்கத்துக்கு அனுமதி அளித்தவர் மு.க.ஸ்டாலின். அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு காரணமே மு.க.ஸ்டாலின்தான். 2003-ஆம் ஆண்டில் புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது, மத்தியில் கூட்டணி ஆட்சியிலிருந்த திமுக இந்த பிரச்னையை தீர்த்து வைத்திருக்கலாம். 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை திமுக ஆட்சியில் இருந்தபோது தீர்த்து வைக்காமல் தற்போது அது பற்றிப் பேசுகின்றனர்.
இப்பிரச்னை குறித்து முதல்வரிடம் எடுத்துக் கூறியுள்ளோம். விரைவில் தீர்வு காணப்படும். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம். காவிரி பிரச்னைக்கும் அடித்தளம் அமைத்ததே திமுகதான். இதுதொடர்பாக 1924-ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தை 1974-ஆம் ஆண்டில் புதுப்பிக்காததுடன், கருணாநிதி தனது ஆட்சிக் காலத்தில் கர்நாடகத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டதை எதிர்க்கவில்லை. மேலும், காவிரி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கையும் வாபஸ் பெற்றார். இவ்வாறு, தமிழகத்தின் அனைத்து வாழ்வாதாரப் பிரச்னைகளுக்கும் காரணமாக இருந்தது திமுகதான். எனவே, தமிழகப் பிரச்னைகள் குறித்துப் பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி கிடையாது. தமிழகம், புதுவையில் 40 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார் அன்புமணி.
முன்னதாக, கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலரும், தமிழக தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத், கடலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் இரா.கோவிந்தசாமி மற்றும் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.