முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள் அறைகூவல்!

பாதுகாப்பு வலயம் என சிறீலங்கா அரசினால் அறிவிப்பு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் உள்ளங்கடலான பிரதேசங்களினுள் தமிழினம் உள்ளீர்க்கப்பட்டு கொத்துக்குண்டுகள் மனித குலத்திற்கு எதிராக பயன்படுத்த முடியாது என சர்வதேச போரியல் விதிமுறைகளில் விதந்ததுரைக்கப்பட்ட பயங்கர ஆயுதங்கள், போர்முறைகள் பயன்படுத்தப்பட்டு குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என்ற வேறுபாடுகள் கடந்து தமிழினம் பதைபதைக்க துடிதுடிக்க மிகக் கொடூரமாக கொண்டொழிக்கப்பட்டு தசாப்தம் ஒன்று நிறைவடைந்துள்ளது.


இன்றுவரைக்கும் கூட இந்த இன அழிப்பு நடவடிக்கைகள் வடிவமாற்றமடைந்து தொல்லியல் திணைக்களம், வனபரிபாலன திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றினூடு தமிழர் பாம்பரியமாக வாழ்ந்த  வாழ்நிலங்களை வன்பறிப்புச் செய்வதும் தமிழினத்தின் தொன்மை பொருந்திய வரலாற்று சின்னங்களையும், மரபுரிமை ஆதாரங்களையும் அழிப்பதும் திரிபடையச் செய்வதுமாய் தொடர்கின்றன.

எம்மால் மிகுந்த நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் தலைமைககால் இவை தொடர்பில் போதுமான முன்னெடுப்புக்கள் செயல்படுத்தப்படவில்லை என்பது வேதனை தரும் விடயம்.

எனவே எமது இனம் துடிக்க துடிக்க அழிக்கப்பட்ட இந்த தசாப்தத்தின் நிறைவை எந்தவித அரசியல் தலையீடுகளும் முனைப்புக்களும் மேடைப்பேச்சுக்களும் இன்றி அமைதியான சூழலில் எம் உறவுகளை நினைத்து அவர்கள் இறுதியாக வாழ்ந்து மரணிக்கச் செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்று வேற்றுமைகளைக் கடந்து நாம் கண்ணீர்விட்டு அழ எங்கள் இதயத்தின் ஆறாத காயங்களை சிறிது கழுவிக்கொள்ள இதனூடே சர்வதேசத்திற்கும் இந்த இன அழிப்பு தொடர்பான உண்மையை உணர்த்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த
இறந்துபோன உறவுகளின் உறவுகள், சமயத்தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் குழுவை அமைத்துள்ளோம்.

எந்தவொரு கட்சி பின்னனியும் அற்ற குறுகிய நோக்கங்களை கடந்த இந்த அமைப்புடன் இணைந்து முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தலை செவ்வனே நடாத்தி முடிக்க ஒன்றிணையுமாறு அனைவரையும் அழைக்கிறோம்.

மேலும் இவ் நினைவேந்தல் தொடர்பில் பல்வேறு தளங்களில் நிதி சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கவும், அறிந்து கொள்ளவும் முடிகின்றது. இந்த நிகழ்வு தொடர்பான நிதி நடவடிக்கைகளை முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் குழுவே மேற்கொள்ளும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் குழு


No comments

Powered by Blogger.