நேர்கொண்ட பாதையில் தொடரும் இலட்சியப்பயணம்-வைகோ!

இமைப்பொழுதும் நீங்காது என் இதயத் துடிப்போடும்,
இரத்தச் சுழற்சியோடும் கலந்து விட்ட கண்ணின் மணிகளே!


இந்தியாவின் 17 ஆவது நாடாளுமன்றத்தைத் தேர்ந்து எடுப்பதற்காக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற தேர்தல், தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல் ஆகும். முன் எப்போதும் இல்லாத வகையில், இந்தத் தேர்தல் களம், திராவிட இயக்கத்தின் எதிர் காலத்தோடு பின்னிப் பிணைந்து இருக்கின்றது என்றே நான் கருது கின்றேன்.

தமிழ்நாட்டின் வருங்காலம், திராவிட இயக்கத்தின் நலன் இவற்றைக் கருதியே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்தத் தேர்தலில் தீர்க்கமான முடிவை எடுத்தது.

“ஜனநாயகத்தைத் தேர்ந்து எடுத்துக் கொண்டு இருக்கின்ற நாம், அதனின்று ஒதுங்கி விடுவது என்பது முடியாது. ஆற்றில் குதித்த பிறகு நீந்தித்தான் ஆக வேண்டும். நீந்தாவிடில் வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்பட்டு விடுவோம். எனவே அரசியலைப் புறக்கணிக்காதீர்கள்; புறக்கணித்தால் அரசியல் உங்களைப் புறக்கணித்துவிடும்”

என்று, பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறிய மணிவாசகத்தை நெஞ்சில் தேக்கி உள்ள நாம், அரசியல் களத்தில் கால் நூற்றாண்டு காலமாக எதிர் நீச்சல் அடித்துக் கொண்டே இருக்கின்றோம்.

எந்த நிலையிலும் நாம் வரித்துக் கொண்ட இலட்சியத்திற்கு ஊறு நேராமல், நமது அரசியல் பயணம் நேர் கொண்ட பாதையில் சென்று கொண்டே இருக்கின்றது.

17 ஆவது மக்களவைத் தேர்தலில் மக்களிடம் நாம் முன்வைத்த முழக்கம், “ஜனநாயகமா? பாசிசமா?” என்பது தான்.

ஏனெனில், 2014 இல் இந்தியாவை ஆட்சி நடத்தும் பொறுப்பை ஏற்ற பாரதிய ஜனதா கட்சி, நரேந்திர மோடி தலைமையில் ஐந்து ஆண்டுகளாக நடத்திய ஆட்சி, ஜனநாயகத்தைப் படுகுழியில் தள்ளி இருக்கின்றது.

நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு, தமிழ் இனப்படுகொலை நடத்திய கொலைகாரன் ராஜபக்சேவை அழைக்க முடிவு செய்தபோது, மோடியை நேரில் சந்தித்து எதிர்ப்புத் தெரிவித்தேன்.

அவர், 2014 மே 26 ஆம் தேதி பிரதமர் பதவி ஏற்றார். அதே நாளில், இந்தியாவிலேயே முதன் முதலாக நாம்தான் அவருக்குக் கருப்புக் கொடி காட்டினோம். டில்லி ஜந்தர் மந்தரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், நானும், கழகப் பொருளாளர் அ.கணேசமூர்த்தி உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோரும் கைது செய்யப்பட்டு, நாடாளுமன்றக் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டோம்.

நாம் மேற்கொண்ட நிலைப்பாடு எவ்வளவு சரியானது என்பதை, ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து கொண்டனர்.

‘நான் பிரதமரைக் கடுமையாக விமர்சிக்கிறேன்’ என்றுகூட சில நண்பர்கள் கூறியது உண்டு.

தனிப்பட்ட முறையில் மோடி அவர்கள் என் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர்தான். 2002 மே 2 ஆம் நாள், குஜராத் வதோதரா நகரில் சமூக நல்லிணக்கப் பேரணி நடந்தபோது, எனது உரையை குஜராத்தி மொழியில் மொழிபெயர்த்தவர், அப்போது குஜராத் முதல் அமைச்சராக இருந்த மோடி அவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால், கடந்த ஐந்து ஆண்டுக்கால பாரதிய ஜனதா ஆட்சி, இந்தியாவின் ஜனநாயக அடித்தளத்தையே தகர்த்துத் தவிடுபொடி ஆக்கும் வகையில் மூர்க்கத்தனமான நடவடிக்கைகளில் இறங்கியது. நாட்டின் பன்முகத் தன்மையைச் சீர்குலைத்து, ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே தேசம்; ஒரே மொழி; ஒரே கலாச்சாரம் என்பதை நிலைநாட்டி, தங்களின் நீண்டகாலக் கனவான ‘இந்து ராஷ்டிரா’வை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் சனாதனக் கூட்டம் நரேந்திர மோடி தலைமையிலான அரசைப் பின்னணியில் இருந்து இயக்கி வருகின்றன.

இஸ்லாமியர், கிறிஸ்தவர், தலித் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள், சமூக, மத நல்லிணக்கம் சீர்குலைவதற்கும், இரத்தக் களரி ஏற்படுவதற்கும் வழி அமைத்துக் கொடுத்து இருக்கின்றன.

இன்னும் ஒரு வாய்ப்பு கிடைக்குமானால், பாசிச வெறிபிடித்த இந்துத்துவா சனாதன சக்திகள், இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றிவிடும் அபாயம் உருவாகி இருக்கின்றது. அரசியல் அமைப்புச் சட்டத்தை தூக்கி வீசிவிட்டு, மனுதர்மச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், இக்கூட்டம் தயங்காது.

இந்தியாவிலேயே மொழி, இன, பண்பாட்டு உணர்வுகள் தமிழ்நாட்டில் தான்  பட்டுப்போகாமல் ஆல்போல் தழைத்து இருக்கின்றது. திராவிட இயக்கம்தான் தமிழ் உணர்வைப் பாதுகாத்துப் பேணி வருகின்றது. எனவே, திராவிட இயக்கக் கட்டுமானத்தை உடைக்க வேண்டும்; திராவிட இயக்கக் கருத்தியலைப் புதைக்க வேண்டும்; தமிழகத்தில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டிப் பிரிவினையை வளர்க்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.க. திட்டம் போட்டுச் செயல்படுகின்றன; அதற்காக, இங்கு சில அடிமைக் கூட்டத்தை ஆட்டிப் படைத்து வருகின்றன.

அறிவாசான் தந்தை பெரியார் மறைந்து 45 ஆண்டுகள் ஆனாலும், அவர் ஏற்றி வைத்த அறிவுச் சுடர் குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி வீசிக் கொண்டு இருக்கின்றது. எனவேதான், தந்தை பெரியார் மீது இந்தக் கும்பல் வன்மம் பாராட்டுகின்றது.

‘தந்தை பெரியார்’ என்பது வெறும் பெயர் அல்ல; அது தமிழர்களுக்கு வழிகாட்டும் தத்துவம். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும், தந்தை பெரியாரின் கொள்கைகள் கோட்பாடுகளை இந்த மண்ணில் இருந்து அகற்ற முடியாது என்பதும் சனாதனக் கூட்டத்திற்கு நன்கு தெரியும். இருந்தாலும் பெரியாரைச் சிதைக்க முயன்று தோல்வியையே தழுவி வருகின்றது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இவை அனைத்தையும் ஆய்ந்து தெளிந்துதான், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கரம் கோர்ப்பது என்ற கொள்கைப் பிரகடனத்தைச் செய்தது.

நமது சக்தி, ஆற்றல் ஒருமுகப்படுத்தப்பட்டு, திராவிட இயக்கத்திற்கு வலிவும் பொலிவும் வழங்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன், தி.மு.க. தலைமையில் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’யில் இணைந்தும், இயைந்தும் தேர்தல் களம் கண்டோம்.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் ஆருயிர்ச் சகோதரர் அ.கணேசமூர்த்தி அவர்கள் வெற்றி வேட்பாளராக வாகை சூட இருக்கின்றார்.

காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளில் தமிழகத்திற்குப் பச்சைத் துரோகம்; நீட் தேர்வைத் திணித்து சமூக நீதி, கல்வி உரிமைப் பறிப்பு;

கஜா புயலில் சிக்கி காவிரி டெல்டா மாவட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தபோது, பாரா முகத்துடன் இறந்து போன 89 பேர்களுக்கு இரங்கல் கூறாத கொடுமனம்;

காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை அழித்து ஒழிக்க ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் எரிவாயு திட்டங்கள்; இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டத்தைச் சீரழிக்க நியூட்ரினோ திட்டம்; இவை அனைத்திற்கும் மேலாக, ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்தில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேர் உயிர்ப்பலி ஆனதற்கு மோடி அரசின் உத்தரவே காரணம்.

கடந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் மோடி அரசின் இத்தகைய வஞ்சகத்திற்கு எதிராக, தமிழக மக்கள் சக்தியைத் திரட்டும் கடமையைக் கழகம் செய்தது. பிரதமர் மோடி தமிழ் நாட்டுக்கு வந்தபோது, கருப்புக் கொடி அறப்போரை முன்னெடுத்தது. சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி வருகை தந்த பிரதமர் மோடிக்கு என் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி ஏராளமான கழகக் கண்மணிகள் கைதானார்கள்.

மோடி பதவி ஏற்ற நாள் முதல், இந்த நாடாளுமன்றத் தேர்தல் களம் வரையில், நாம் பிரகடனம் செய்தவாறு, பா.ஜ.க. அரசின் தமிழ், தமிழர், தமிழ்நாடு விரோத நடவடிக்கைகளை எதிர்ப்பதில் உறுதியாக இருந்திருக்கின்றோம் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

அரசியல் களத்தில் கழகம் ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமைகளை மிகச் சரியாகச் செய்தோம். எனவேதான், கொள்கை அடிப்படையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடம் பெற்றது.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆருயிர்ச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், திருச்சியில் கழகத்தின் உயர்நிலைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் செ.வீரபாண்டியன் அவர்கள் எழுதிய ‘தமிழின் தொன்மையும்; சீர்மையும் - கலைஞர் உரை’ நூல் வெளியீட்டு விழாவில் பேசும்போது, “திராவிட இயக்கத்தைக் காக்க ‘போர்வாளும் - தளபதியும்’ இணைந்து இருக்கின்றோம்” என்று இதயம் திறந்து பிரகடனம் செய்தார்.

ஜூன் மாதம் நடைபெற இருக்கின்ற மாநிலங்கள் அவைத் தேர்தலில், கழகத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ள மோடி, எடப்பாடி அணியினர், தேர்தல் ஆணையத்தை கால் தூசுக்குச் சமம் என்று கருதிவிட்டு, வாக்காளர்களுக்குக்  கோடிக்கணக்கில் அள்ளி வீசினார்கள்.

மோடி அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை போன்ற அமைப்புகளை, தங்கள் ஏவலுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கும் நிறுவனங்களாக ஆக்கி, எதிர்க் கட்சிகளை மிரட்டி, அச்சுறுத்தும் சதிச் செயலில் இறங்கியது. வேலூர் தொகுதியில் தேர்தல் ஆணையம் பாரபட்சமான முறையில் தேர்தலையே இரத்து செய்தது. ஆனால் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற இடைத் தேர்தலை இரத்து செய்யாமல், எடப்பாடி அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளது.

மக்கள் விரோத மோடி-எடப்பாடி ஆட்சி களை ஒருசேர வீழ்த்தும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலும், 18 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தலும் நடந்தேறி உள்ளன.

கோடை வெயிலைக் காட்டிலும் தமிழக மக்கள் நெஞ்சம் கொதித்துப் போய் இருப்பதையும், மோடி அரசைத் தூக்கி எறியவும், டெல்லிக்கு அடிமைச் சேவகம் புரியும் எடப்பாடி அரசை அகற்றவும் உறுதி பூண்டு இருப்பதை, தேர்தல் பரப்புரையில் மக்களைச் சந்தித்தபோது கண்கூடாகக் கண்டேன்.

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்தை தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் - திருவைகுண்டத்தில் இருந்து  மார்ச் 22 ஆம் நாள் தொடங்கினேன். ஆருயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களின் அருமைப் புதல்வி, தங்கை கனிமொழி அவர்கள் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பரப்புரைப் பயணத்தைத் தொடங்கினேன்.

பிரச்சாரப் பயணம் தொடங்குவதற்கு முன்பு மார்ச் 13 ஆம் நாள், நாகர்கோவில் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களும், தி.மு.க. தலைவர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும், நானும் கலந்து கொண்டு உரையாற்றினோம்.

பரப்புரைப் பயணத்தின் இடையில், ஏப்ரல் 3 ஆம் நாள் கோவையில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றேன்.

ஏப்ரல் 16 ஆம் நாள், அதே தூத்துக்குடி தொகுதியில் கோவில்பட்டி நகரில் தங்கை கனிமொழிக்கு வாக்குக் கேட்டு பரப்புரைப் பயணத்தை நிறைவு செய்தேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் 26 நாட்கள் தமிழகத்தின் நாலாத் திசைகளிலும் வாக்காளர்களைச் சந்தித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு திரட்டினேன். மாலை 4 மணிக்குத் தொடங்கிய பிரச்சாரம், இரவு 10 மணி வரையில் தொடர்ந்தது. சென்ற இடம் எல்லாம் நமது கழகக் கண்மணிகளோடு, திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் சேர்ந்து ஆரவாரமான வரவேற்பு நல்கியது, இதயத்துக்கு இனியதாக இருந்தது. கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் பிரச்சாரப் பயணத்தில் வெகு உற்சாகமாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

26 நாட்கள் பிரச்சாரத்தில் பல இலட்சக்கணக்கான மக்களிடம் கருத்து விளக்கம் அளிக்கும் நல்வாய்ப்பைப் பெற்றேன். நரேந்திர மோடி அரசின் தமிழ் இனத் துரோகங்களைப் பட்டியல் இட்டுக் காட்டினேன். பா.ஜ.க. அரசுக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மக்கள் விரோத ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டியதன் அவசியத்தை விளக்கினேன்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு நம்முடைய சக்திக்கேற்ற உழைப்பைத் தந்து இருக்கின்றோம்.

தேர்தல் களத்தில் கழகத்தின் மாவட்டச் செயலாளர்களும், பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் எதையும் எதிர்பாராமல் கண்ணும் கருத்துமாக பம்பரமாகச் சுழன்றனர் என்று தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் பாராட்டுரை பகன்றதை அறிந்து நெகிழ்ந்தேன்.

ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பொருளாதார வசதி அற்றவர்கள், வாழ்க்கைப் பாட்டிற்கு உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்ட உழைப்பாளிகள் இவர்கள்தானே இந்த இயக்கத்தை கால் நூற்றாண்டு காலமாக அடித்தளத்தில் தாங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

கழகம் எடுத்த முடிவைச் செயல்படுத்துவதற்கு ஊக்கமுடன் தேர்தல் களத்தில் பணியாற்றிய கண்ணின் மணிகளுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகின்றேன்? எத்தனையோ சோதனைகள், சொல்லொணாத் துயரங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டல்லவா கழகத்தைக் கட்டிக் காத்து வருகின்றீர்கள்!

பேரறிஞர் அண்ணா ஊட்டிய குடும்ப பாச உணர்வு அல்லவா நம் குருதி ஓட்டத்தில் கலந்து இருக்கின்றது! எனவேதான் தோல்விகள் நம் பயணத்தைத் தடுக்க முடியவில்லை! தளராத நம்பிக்கையுடன், கொள்கைப் பற்றுடன் நாம் சேர்ந்து பயணிக்கின்றோம்.

கழகத்தின் வெள்ளி விழாவை, தந்தை பெரியார் பிறந்த மண்ணில், ஈரோட்டில், கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் மாபெரும் மாநாடாக நடத்திக் காட்டினோம். உங்களின் இடையறாத வற்புறுத்தல் காரணமாக, என்னுடைய பொதுவாழ்வுப் பொன்விழாவையும் கொண்டாட இசைவு தந்தேன். ஈரோடு மாநாட்டில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் நண்பர் டாக்டர் பரூக் அப்துல்லா அவர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

தெளிவான அரசியல் சித்தாந்தக் கோட்பாடுகளை வரித்துக்கொண்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பிரகடனம் செய்த, “அரசியலில் நேர்மை; பொதுவாழ்வில் தூய்மை; இலட்சியத்தில் உறுதி” என்பதில் எள்முனை அளவும் பிறழாமல் பயணத்தை நடத்துகின்றோம்.

திராவிட இயக்கத்திற்கு அறைகூவல் எழுந்து இருக்கின்ற இந்தக் கால கட்டத்தில், கழகம்தான் காவல் அரணாக விளங்குகின்றது. வரலாறு நம் மீது சுமத்தி இருக்கின்ற கடமையைச் செவ்வனே நிறைவேற்றும் வகையில் திராவிட இயக்கத்திற்குத் தன்னலம் அற்ற தொண்டு ஆற்றி வருகின்றோம்.

வெள்ளி விழா கண்ட நம் கழகம், மே 6 ஆம் தேதி 26 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.

கழகப் பாசறையின் வலிமையும், பொலிவும் நாட்டுக்குத் தெரிந்திட, நாடெங்கும் நமது பாசறைகளில் எழுச்சிப் புதுவெள்ளம் போல் பாய்ந்தது என்று மக்கள் பாராட்டும் வகையில், கழகத்தின் 26 ஆம் ஆண்டுத் தொடக்க விழா நிகழ்ச்சிகளை, இனிப்பு வழங்குதல், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல் போன்ற நிகழ்வுகளாக, மாவட்டச் செயலாளர்களும், கழக நிர்வாகிகளும், அணிகளின் நிர்வாகிகளும் சீரிய முறையில் திட்ட மிட்டு கிளைகள் தோறும் நடத்திட வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிகள் மே 19 ஆம் நாள் வரையிலும் நடைமுறையில் இருக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, தேர்தலுக்காக அகற்றப்பட்ட கொடிமரங்களை மீண்டும் நாட்டிட வாய்ப்பு இல்லை. எனவே, சென்னை எழும்பூரில் தலைமைக் கழகமாம் தாயகத்திலும், தமிழகம் முழுமையும் உள்ள கழக அலுவலகங்கள், அமைப்புகளிலும் கழகக் கொடி ஏற்றுவோம்.

மே 6 ஆம் நாள் கழகத்திற்கு இனிய தொடக்கமாக அமையப் போகின்றது. மே 23 ஆம் நாள் வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட நாற்பது தொகுதிகளிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ வெற்றி முரசு கொட்டப் போவதை நாடு காணத்தான் போகின்றது.

பேரறிஞர் அண்ணா அவர்கள், தம்பிக்குத் தீட்டிய மடல் ஒன்றில் கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்:

“நான் மிக மிகச் சாமானியன். ஆயினும் திரியும் எண்ணெயும் முறைப்படி இருந்திடின் இருட்டினை விரட்டிடும் ஒளியினை உள்ளங்கை அளவுள்ள அகல் விளக்கும் தருகிறது அல்லவா?

அதுபோல, என்னை ஓர் மாபெரும் விடுதலை இயக்கத்தை நடத்திச் செல்லும் பொறுப்பினை ஏற்கத்தக்க நிலைக்கு நீங்கள், உங்கள் அன்பைப் பெய்து ஆளாக்கி விட்டிருக்கின்றீர்கள்.

நான் மிக மிகக் கூச்சப்படுபவன். உங்களுடைய உற்சாகமூட்டும் தன்மையும், உறுதி தரும் பேச்சும், செயலும், உடனிருந்து பணியாற்றும் திறனும் சேர்ந்துதான் என்னை இந்த அளவுக்குப் பொதுப்பணித் துறையிலே ஈடுபட வைத்தது.” என்று.

பேரறிஞர் அண்ணாவின் கூற்று போன்றே, கண்ணின் மணிகளே, நீங்கள்தான் என் உலகம்;  எனக்கென்று தனியாக ஆற்றல் ஏது? நீங்கள் தரும் ஆக்கமும், ஊக்கமும்தான் என்னை இயக்குகின்றது!

கழகத்தின் 26 ஆம் ஆண்டு தொடக்க விழாவை ஏற்றமுடன் கொண்டாடுங்கள்! அடுத்த களம் நோக்கி நம் வெற்றிப் பயணத்திற்கு ஆயத்தம் ஆகுங்கள்!

கண்ணின்மணிகளே எழுச்சி சங்கொலிக்கும் உங்கள்

பணிகள் வளரட்டும்!

பாசமுடன்,
வைகோ

-சங்கொலி, 03.05.2019



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.